பிரச்னைகள் தீர்க்கும் பிரசன்ன வெங்கடேசர்



சென்னை - தரமணி

ஏழுமலையான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது. சென்னை வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இத்தலம். கலியில் கண்கண்ட தெய்வமாக அருளும் பெருமாள் இங்கு நிலை கொண்ட காரணத்தை அறிவோம்.

ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார். வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார்.

உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது. ஆலயத்தில் குடிகொண்ட உடனேயே, சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் கனவில் ‘எனக்கு புரட்டாசி மாதம் விதவிதமாக தளிகை நிவேதிக்கவேண்டும்’ என இப்பெருமாள் தோன்றி உத்தரவிட, அவ்வண்ணமே இன்றளவும், புரட்டாசி சனிக்கிழமையன்று கதம்பசாதம், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதத்தோடு திருப்பாவாடை உற்சவம் என்று வெகு விமரிசையாக அந்த உத்தரவு நிறைவேற்றப்படுகிறது. அன்றே உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடக்கிறது.

மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்தால் பெருமாளை நோக்கியவாறு இடதுபுறம் தும்பிக்கையாழ்வார் என போற்றப்படும் விநாயகரும், வலதுபுறம் நர்த்தன கண்ணனும் அருள்கின்றனர். பலிபீடம், கொடிமரத்தை அடுத்து, பெரிய திருவடியான கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பிய வண்ணம் அஞ்சலி ஹஸ்தராய் அருள்கிறார். அர்த்தமண்டபத்தில் பெருமாளின் வலதுபுறம் அலர்மேல்மங்கைத் தாயாரின் உற்சவ விக்ரகத்தை தரிசிக்கலாம்.

மேலிரு கைகள் தாமரை மலர்களை ஏந்தி நிற்க, கீழிரு திருக்கரங்கள் அபய, வரதம் காட்ட, பொலிவுடன் திகழ்கிறாள் அன்னை. பங்குனி உத்திரத்தன்று இந்த தாயாருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பெருமாளின் இடதுபுறம் பேரழகுப் பெட்டகமாய் ஒரு கையில் கிளியை ஏந்தி அற்புத தரிசனம் தருகிறாள் ஆண்டாள். இவள் திருவடியருகே ராமானுஜரின் உற்சவ விக்ரகம் உள்ளது. ஆடிப் பூரத்தன்றும், மார்கழி மாதம் 30 நாட்களிலும் இந்த ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. சித்திரை திருவாதிரை அன்று உடையவர் சாற்றுமுறை உற்சவமும் விமரிசையாக நடக்கிறது.

மூலக் கருவறையில் சுமார் ஏழடி உயரத்தில் பிரசன்ன வெங்கடேசர் தரிசனம் தருகிறார். நெற்றியை மறைக்கும் திருநாமத்தோடு புன்முறுவல் பூத்த திருமுகத்தினராய் அருள்கிறார், பெருமாள். அவர் திருமார்பை அலர்மேல்மங்கையான தயாதேவியும், பத்மாவதித் தாயாரும் அலங்கரிக்கின்றனர். தேசிகர் இந்த தயாதேவியின் கருணையைக் குறித்து தயா சதகம் எனும் அற்புதமான நூறு ஸ்லோகங்களை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 54 சாளக்ராமங்களால் ஆன மாலை பெருமாளை அலங்கரிக்கிறது இந்த பெருமாளை நம்பிக்கையாய் வணங்க பிரச்னைகள் கட்டாயம் தீர்ந்துவிடுகிறது.

தசாவதார அடையாளங்கள் பொறித்த ஒட்டியாணம், வீரவாள், தலையிலிருந்து பாதம்வரை புஷ்ப அலங்காரம் போன்றவற்றை தரிசிக்கும்போது, திருப்பதி சந்நதியில்தான் நிற்கின்றோமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. பெருமாளின் சந்நதியில் பச்சைக்கற்பூர வாசமும், துளசி மணமும் இணைந்து, நாசியையும், மனதையும் நிறைக்கின்றன. பெருமாளின் காலடியில் ஸ்தபனபேரர் என்றழைக்கப்படும் சிறிய அளவிலான பிரசன்ன வெங்கடேசர் அருள்கிறார். அவருக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கருவறையில் சுதர்சனர், சாளக்ராமங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மூலவரைப் போன்ற பஞ்சலோக சிலை மற்றும் உற்சவர் விக்ரகங்கள் அருள்கின்றனர். மூலவரின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூதேவியரோடு ஸ்ரீனிவாசர் என்ற பெயரில், உற்சவர் கையில் செங்கோல் ஏந்தி காட்சியளிக்கிறார். தமிழ் வருடப்பிறப்பு உற்சவம், ஐப்பசி மாத பவித்ரோற்சவம், தீபாவளி அன்று புது வஸ்திரம் சாத்தும் உற்சவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு, கார்த்திகை தீப உற்சவம், சங்கராந்தி உற்சவம் என விதவிதமாக உற்சவங்கள் இத்தலத்தில் நிகழ்கின்றன. பிராகாரத்தில் கண்ணாடி அறை உள்ளது. அருகிலேயே வள்ளிதேவசேனா சமேத முருகப்பெருமான், ஐயப்பன், கணபதி என பெருமாளின் மருமகன்கள் தனிச் சந்நதியில் கோயில் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எதிரே நவகிரக நாயகர்கள் கோயில் கொண்டருள்கின்றனர்.

ஆலயம் காலை 7 முதல் 10 மணி வரையிலும் மாலை 6 முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்திற்கு எதிரே பக்த ஆஞ்சநேயர் தனிக்கோயில் கொண்டருள்கிறார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை 9, 28, 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் வலம் வந்து வணங்க, நினைத்த காரியம் நிறைவேறுகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். மிகச்சிறிய அந்த மூர்த்தியின் திருமார்பை வெள்ளியினாலான ராமபட்டாபிஷேக டாலர் அலங்கரிக்கிறது.

அவருக்கு எதிரே உள்ள தூணில் திருப்பதி திருமலையில் உள்ளது போலவே திருமகளை தன் மடியில் இருத்தி வலதுகாலை அசுரனின் தலை மீது வைத்து நின்றருளும் திருக்கோலத்தில் ஆதி வராகர் அருள்கிறார். அனுமனை வலம் வருபவர்கள் இவரையும் சேர்த்தே வலம் வருகின்றனர். அந்த மண்டபத்திலேயே சுதர்சன, நரசிம்மரும் கொலுவீற்றுள்ளனர்.

- ந.பரணிகுமார்