இந்த வாழ்க்கையும் நன்றாக இருக்கிறதே என்று அமைதியாகிவிடலாமா?



மகாபாரதம்

-பாலகுமாரன்

பீமனைத் தொடர்ந்து ஆற்றுப்படுத்தினார் தருமபுத்திரர். ‘‘இந்தப் பழியை எப்படி தீர்ப்பது என்று நீயோ, திரௌபதியோ, அர்ஜுனனோ யோசனை செய்யவில்லை. பன்னிரண்டு வருடங்கள் வனவாசத்தில் ஈடுபட்டு, பதிமூன்றாம் வருடம் ஒளிந்துறைந்து, எவர் கண்ணிலும் படாமல் வாழ்ந்து பிறகு போர் என்று முழங்கினால் மொத்த மக்களும் நம் பக்கம் இருப்பார்கள். இவ்வளவு காலம் துன்புற்று இருந்தார்கள். ராஜ்ஜியத்தை அவர்களுக்கு கொடு என்று மக்களே கேட்பார்கள். ஆனால், துரியோதனன் ராஜ்ஜியம் தரமாட்டான். அப்போதுதான் போர் செய்ய வேண்டும். செய்ய முடியும். அந்த போர்தான் நியாயமாக இருக்கும்.

‘‘இல்லையென்றும், போர் செய்ய மாட்டேன் என்றும், போர் இனி வராது என்றும் யார் சொன்னது? நான் அவ்விதம் பேசவேயில்லையே. இது நம்முடைய மோசமான நேரம். நாம் சத்தியத்தின்படி நடக்கிறோம். தர்மத்தின்படி நடக்கிறோம் என்பதை மக்களுக்குச்சொல்லியாக வேண்டும். உடனடியாக நீ கதை எடுத்து நின்றிருந்தால் உன் பக்கம் நாலு பேரும், அவன் பக்கம் பத்து பேரும் நின்றிருப்பார்கள். ஜனங்கள் இரண்டாக பிளந்திருப்பார்கள். அப்போது நானும் தர்மமல்ல. அவனும் தர்மமல்ல. தர்மத்தின் பக்கம் யாருமே நிற்க மாட்டார்கள். ஆனால், இன்று பீமா, நாம் தோற்றோம்.

மரவுரி தரித்துக் கொண்டோம். திரௌபதியோடு வெளியேறினோம். வனவாசம் துவங்கியிருக்கிறோம். நம் பின்னே எத்தனை ஜனங்கள் வந்தார்கள். எத்தனை அந்தணர்கள் வந்தார்கள். எத்தனை சான்றோர்கள் வந்தார்கள். நம்மை தேடிக்கொண்டு எத்தனை தபஸ்விகள் வந்தார்கள். இவையெல்லாம் ஏன் நடந்தது பீமா? நீ கதை எடுத்து அங்கு அடித்திருந்தால் உன்னைத்தேடி ஒருவரும் வந்திருக்க மாட்டார்கள். அவன் ஒரு அநியாயம் செய்தான், இவன் ஒரு அநியாயம் செய்தான் அதற்கு இது சரியாய் போயிற்று என்று வெறுத்து இரண்டு பேரையும் ஒதுக்கியிருப்பார்கள்.

இப்போது நாம் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம் என்றுதான் சாதுக்களும், ரிஷிகளும், அந்தணர்களும் மக்களும் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மகத்தான செல்வத்தை எப்படி உதறி விடுவது? இது ஏன் உனக்கு புரியவில்லை? போர் வரும் பீமா. அர்ஜுனனுடைய அஸ்திரங்களுக்கும், உன்னுடைய தசை நரம்புகளுக்கும் வேலை கொடுக்கின்ற நேரம் நிச்சயம் வரும். அதுவரை பரதகண்டம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கிற ஒரு நல் வாய்ப்பு கிடைத்தது என்று நாம் அமைதியாக இருத்தல் வேண்டும்.’’

ஆனால், பீமன் விடவில்லை. தொடர்ந்து பேசினான்: ‘‘இந்த சூதிலே பயணப் பொருளாக வைக்கப்பட்டது பதிமூன்று வருட வனவாசம் மட்டும் அல்ல. அதை நாம் எளிதில் கடந்துவிடுவோம் என்று அவர்களுக்குத் தெரியும். இதோ பதிமூன்று மாதமும் முடிந்துவிட்டது. ஆனால், அவை மட்டும் அல்லாமல் ஒளிந்துறையும் ஒரு வருடத்தையும் நாம் கடந்தாக வேண்டும். அங்குதான் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது. என்னுடைய பராக்கிரமத்தையும், அர்ஜுனனுடைய வில் வித்தையையும், திரௌபதியினுடைய அழகையும், உங்களுடைய கம்பீரத்தையும், நகுல, சகாதேவருடைய தனித்த திறமையையும் எப்படி மறைக்க முடியும்? இமயமலையை ஒரு பிடி துரும்பினால் மறைக்க இயலுமா? நாம் எதிர்த்து போரிட்டு தண்டித்த அரசர்கள் உண்டு.

அவர்கள் எல்லோரும் இந்நேரம் துரியோதனப் புகழ் பாடி அவனோடு கைகோத்துக் கொண்டிருப்பார்கள். நமக்கு ஆதரவாக இருந்தவர்கள்கூட அவனிடம் சரணடைந்திருப்பார்கள். அல்லது அவன் அவர்களை விலைக்கு வாங்கியிருப்பான். அப்படிப்பட்ட அரசர்கள் தங்கள் ஒற்றர்களை நாம் எங்கிருக்கிறோம் என்று தேட அனுப்பியிருப்பார்கள்.

‘‘நாம் வனவாசம் மேற்கொள்வது எளிது. ஆனால், ஒளிந்துறைந்து வாழ்வது கடினம். மற்ற அரசர்களின் ஒற்றர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, துரியோதனன் நம்முடைய இருப்பை கண்டு பிடித்துவிட்டால் மறுபடியும் பதிமூன்று வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டும். ஆக, இது ஜெயிப்பதற்கு உண்டான வழியாக எனக்குத் தெரியவில்லை. தொடர்ந்து தோல்வியுற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவையெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இப்போது போர் வேண்டாம் பிற்பாடு வைத்துக்கொள்ளலாம், பதிமூன்று வருடம் முடியட்டும் என்று நீங்கள் சொல்வது எனக்கு நகைப்புக்கு இடமாகத் தோன்றுகிறது.

நீங்கள் எந்தச் செயலும் இல்லாது வெறும் ஒரு மலைப்பாம்பைப்போல உட்கார்ந்திருக்கிறீர்கள். இது தவறு. நாகமென சீறவேண்டிய கட்டாயம் நமக்கு வந்துவிட்டது. பிற்பாடு என்ற எண்ணத்தை தூக்கிப்போட்டுவிட்டு இப்போதே சீறுவோம், இப்போதே போர் துவங்குவோம்.’’ அதற்கு தருமபுத்திரர் பதில் கொடுக்கிறார்: ‘‘நீ சொல்கிற விஷயத்தைத்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நம் எதிரிகள் துரியோதனனிடம் சேர்ந்து விடுவார்கள். நமக்கு நட்பானவர்களும் சேர்ந்து விடுவார்கள். வெல்ல முடியாத வீரர்களெல்லாம் ஒன்று திரண்டு துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசி நம்மை எதிர்ப்பார்கள்.

ஏன் இப்போதே நமக்கு ஆதரவாக இருந்த துரோணரும், அஸ்வத்தாமனும், பிஷ்மரும், கர்ணனும் அவன் பக்கம்தான் இருக்கிறார்கள். நம்மீது கடும் கோபம் கொண்ட கர்ணனை எப்படி சமாளிக்கப் போகிறோம்? பீஷ்மரை எதிர்த்து நம்மால் சண்டையிட இயலுமா? நமக்கு ஆச்சார்யாரான துரோணரை நம்மால் கொல்ல முடியுமா? அவர் மகனைத்தான் சீவி எறிய முடியுமா? யாரை நாம் கொல்வோம், எப்படிக் கொல்வோம்? யுத்தம் என்று ஆரம்பித்துவிட்டால் இவர்களையெல்லாம் அழித்துவிட்டு நாம் துரியோதனனை கைது செய்துவிட முடியுமா? அப்படி ஒரு போர் ஏற்பட்டால் அவர்கள் ஜெயிப்பார்களா, நாம் ஜெயிப்போமோ? இந்த சந்தேகம் வரவேயில்லையா உனக்கு? இதை நினைத்தால் உனக்கு உறக்கமே வரவில்லை.

போர் இப்போதைக்கு வேண்டாம் என்று நான் சொன்னதற்கு காரணம் இதுவாகவும் இருக்கிறது. மிக வலிமையான ஒரு கூட்டத்தை நாம் உடனடியாக பழிதீர்த்துக் கொள்வது சரியா என்ற கேள்வியும் வருகிறது.’’ பீமன் அந்த உண்மையை உணர்ந்து சோர்வானான். ஆனால், எல்லா விவாதத்திற்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா? பஞ்ச பாண்டவர்களைப் போல வலிவுமிக்கவர்கள் ஒரே அபிப்ராயத்தில் ஒரே குழுவாக இருக்க வேண்டுமல்லவா? இந்த விவாதம் வளர்ந்து கொண்டே போகும்போது வியாஸ பகவான் அங்கு வந்தார். தருமர் என்ற யுதிஷ்டரை ஆசீர்வதித்தார். ‘‘என்னுடைய தியானத்தில் உன்னுடைய மனக்கிலேசம் பற்றி நான் அறிந்தேன்.

உனக்கு விளக்கம் சொல்வதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். நீ சொன்ன அறங்களெல்லாம் அற்புதமானவைதான். ஆனால், இதை மிஞ்சி இங்கு ஒரு பெரும் போர் நடக்க வேண்டியிருக்கிறது. பூபாரம் குறைக்க வேண்டியிருக்கிறது. க்ஷத்திரியர்களுடைய வலிமையை கீழ் இறக்க வேண்டியிருக்கிறது. க்ஷத்திரியர்களைக் கொண்டே க்ஷத்திரியர்களை வதம் செய்ய வேண்டியிருக்கிறது. அர்ஜுனனுடைய வில் வித்தையும், பீமனுடைய பலமும் வீணாக போகக் கூடாது. நீ எல்லாவற்றையும் துறந்தவன் போல இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது
துரியோதனன் அவனுக்கு ஒத்துவராத பீஷ்மரையும், துரோணரையும் கூட அனுசரித்துப் போகிறான். அவர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறான். விதுரரையும், கிருபரையும் தன்னிலிருந்து மீறாமல் வைத்திருக்கிறான்.

துரோணரையும், அவர் மகன் அஸ்வத்தாமனையும் நட்பினாலும், அன்பினாலும் கட்டிப் போட்டிருக்கிறான். மிக தந்திரமாக இவர்களையெல்லாம் அனுசரித்தும், ஆதரித்தும் தன் பக்கம் வைத்திருக்கிறான். இதெல்லாம் விளையாட்டுக்கு என்று நினைக்கிறாயா? அல்லது நல்லவர்களை ஆதரிக்கும் மனோபாவமுள்ளவன் இவன் என்று கருதுகிறாயா? மிகத் தெளிவாக உங்களை அழிக்கின்ற ஒரு எண்ணத்தை அவன் திடமாக நாள்தோறும் வளர்த்து வருகிறான். இங்கு பேசியது போல நீ துரியோதனிடம் பேச முடியாது.

அவனுக்குப் புரியாது. உன் பேச்சை கேட்டு அவன் கொக்கரிப்பான். ஜெயித்து விட்டதாக நினைப்பான். இதை மீறி அர்ஜுனனையும், பீமனையும் அவன் வதம் செய்தாலும் செய்வான். எனவே, போருக்குத் தயாராகும்படி அர்ஜுனனையும், பீமனையும் உற்சாகப்படுத்து. குறிப்பாக அர்ஜுனனை உத்வேகப்படுத்து. ‘‘தேவர்களோடு சம்பாஷிக்கின்ற மந்திரங்கள் எனக்குத் தெரியும். அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். நீ அதனை அர்ஜுனனுக்கு நல்ல நேரத்தில் உபதேசித்து இந்திரனை சந்தித்து வரும்படிச் செய். இந்திரனிடமிருந்து ஆயுதங்கள் வேண்டுமென்றும், அஸ்திரங்கள் வேண்டுமென்றும் அவனைக் கேட்கச் சொல். இதுதான் முடிவு. இதுதான் வழி. இதைத்தான் செய்ய வேண்டும்.

உண்மை நிலை என்ன என்பதை புரிந்து கொள். யார் நமக்கு எதிராக இருக்கிறான் என்பதை அறிந்து கொள். அதற்கேற்றார்போல் செயல்படு. எதற்கு யுத்தம், இந்த வாழ்க்கையும் நன்றாக இருக்கிறதே என்று அமைதியாகி விடுவது அர்த்தமல்ல. இங்கே யுத்தம் என்பது உன் பொருட்டு அல்ல. யுத்தமின்னையும் உன் பொருட்டு அல்ல. வேறு எதன் பொருட்டோ இங்கு சில விஷயங்கள் நடந்தாக வேண்டும். அவற்றை நீ அறிய முடியாமலும் போகலாம். எனவே நான் சொன்னதை செய்வாயாக’’ என்று கட்டளை இடுவதுபோல் பேசினார்.

ஆழ்ந்து யோசிக்கும் போது தர்க்க நியாயத்திற்கு அப்பாற்பட்டு இந்த உலகம் சில விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டும், விலகியும் இருப்பதை காண முடியும். மிக மோசமான ஒரு எதிரியை அழிப்பதற்காக கம்யூனிஸ்டு கொள்கையும், ஜனநாயக கொள்கையும் கொண்ட இரண்டு தேசங்கள் கை கோத்து ஒன்றிணைந்து ஒரு பொது எதிரியை அழித்தன. மும்மரமாக போரிட்டன. எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லையே என்று இல்லை.

பாதிப்பு வரத்தான் செய்தது. அவர்கள் வேறு, நான் வேறு, அவர்கள் சிந்தாந்தம் வேறு, என் சிந்தாந்தம் வேறு நான் கைகோர்க்க முடியாது என்று சொல்லியிருப்பின் எதிரி வலுவாகி, இவர்கள் இரண்டு பேருமே அழியும்படி நேரிட்டிருக்கலாம். அப்போது இரண்டு பேர்சிந்தாந்தமே முட்டாள்தனமாகப் போயிருக்கலாம். அந்த நேரத்தில் தங்கள் சிந்தாந்தங்களை ஒதுக்கி விட்டு என்ன செய்ய வேண்டுமோ அதை அந்த இரண்டு தேசங்களும் செய்தன. அன்றிலிருந்து இரண்டாம் உலகப்போர் வரை தர்க்கத்திற்கு மீறிய சில விஷயங்கள் நடைபெறுவதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

யுதிஷ்டர் சமாதானமானார். ‘‘இங்கே ைதத்ய வனத்தில் இருந்தது போதும். தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்காதே. அது தபஸ்விகளுக்கு தொந்தரவு. உங்களை வரவேற்று உபசரித்தாலும் உங்களுடைய இருப்பு அவர்களுடைய தபத்தை குலைக்கும். எனவே வேறு இடம் நாடிச் செல். காம்ய வனத்திற்கு போ’’ என்று வியாஸர் சொல்ல, பஞ்சபாண்டவர்கள் திரௌபதியோடும், தொடர்ந்து வரும் அந்தணர்களோடும், நல்லோர்களோடும் காம்யவனம் நோக்கிப் போனார்கள்.

இம்மாதிரியான அமைதியான வனங்களையெல்லாம் எல்லோரும் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பதற்கு துணை இல்லாமல் உள்ளே நுழைய முடியாது. மகா வீரர்களான அர்ஜுனனும், பீமனும், நகுல சகாதேவரும், தருமரும் இருக்கும் பொழுது அவர்களோடு உணவுக்கு குறை வைக்காத திரௌபதியும் இருக்கும்பொழுது அவர்களெல்லோரும் பஞ்சபாண்டவர்களுடன் ஒரு அனுபவம் கருதி பயணப்பட்டார்கள். பஞ்சபாண்டவர்களுக்கும் வனத்தின் தனிமை பயமுறுத்தாது ஒரு சிறிய நகரத்தோடு நகர்வது போன்ற ஒரு அனுபவத்தை அடைந்தார்கள். எல்லோர் நலத்தையும் கருதி அமைதியாக பயணப்பட்டார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டிருந்தார்கள். உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்.

காம்ய வனத்தில் நல்ல இடம் பார்த்து அழகாக குடியமர்ந்தார்கள். யாத்ரையின் போது மெளனமாக இருந்த யுதிஷ்டிரர் வந்து சரியாக குடியமர்ந்ததும் வியாஸர் சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டு அர்ஜுனனை அழைத்தார். தலையை வருடி, கன்னத்தை தொட்டு ஆலிங்கனம் செய்து கொண்டார். செயற்கறிய காரியத்தை செய்யப் போகிறவன் என்ற பெருமிதத்தோடு தம்பியை தழுவிக் கொண்டார். ‘‘நாம் பேசுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ேபால வியாஸ பகவான் பேசி முடித்து விட்டார். எனக்கு தேவர்களோடு சம்பாஷிக்கின்ற, அவர்களை உணர்கின்ற மந்திரத்தை உபதேசித்தார். உனக்கு அதை உபதேசிக்கச் சொன்னார்.

என்னிடமிருந்து அந்த மந்திரத்தை வாங்கிக் கொண்டு நல்லபடியாக அதை பயிற்சி செய்து இமயமலை சாரலுக்குப் போய் தேவர்களோடு தொடர்பு கொள்வாயாக. அவர்களிடம் என்ன உதவி கேட்க வேண்டும் என்பது உனக்குத் தெரிய வரும். அதேபோல் நடந்து கொள்வாயாக. மறுபடி ராஜ்யமும், அரண்மனையும், குடிபடைகளுமாய் நாம் இருப்பதற்கு நீயே காரணம். உன்னாலேயே அது நடைபெற போகிறது. எனவே, உன் பராக்கிரமத்தை வளர்த்துக் கொள்கின்ற இந்த விஷயத்தைச் செய்து வா’’ என்று மந்திர உபதேசம் செய்தார்.

அர்ஜுனன் மந்திரத்தை வாங்கிக் கொண்டு சகோதரர்களையும், திரௌபதியையும் பிரியத்தோடு பார்த்தான். தன்னுடைய எண்ணம் நிறைவேற போகிறது என்ற சந்தோஷத்தில் திரௌபதி குதூகலமானாள். ‘‘என்ன நினைத்துக் கொண்டு குந்திதேவி உங்களைப் பெற்றாளோ தெரியவில்லை. அப்படி ஏதேனும் நினைத்துத் தானே பெற்றிருப்பாள்! மகாவீரனாக வேண்டும். பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும். உலகத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்கின்ற ஒரு மகோன்னதமான குழந்தையாக இருக்க வேண்டும் என்றுதானே உங்களைப் பெற்றிருப்பாள். அது நிறைவேறும் வண்ணம் நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

உங்களால் நாங்கள் எல்லோரும் கௌரவப்படப் போகிறோம். உங்களால் நாங்கள் எல்லோரும் மேன்மையடையப் போகிறோம். உங்களால் நாங்கள் இழந்த சுகங்களையெல்லாம் மறுபடியும் பெறப் போகிறோம். இந்த துக்கம் நீங்கப் போகிறது. வெற்றி உங்களுக்கே. போய் வாருங்கள்.’’ என்று கை கூப்பினாள். அர்ஜுனன் நெகிழ்ந்தான். திரௌபதியின் கைப்பற்றி கண்ணில் ஒற்றிக் கொண்டான். ஒரு மிகப்பெரிய சாதனை செய்வதற்கு அவனுக்கு இப்பொழுது ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது.

இதோ இந்த நான்கு சகோதரர்களுக்காகவும், மனைவிக்காகவும், அவன் மனதில் குமுறிக் கொண்டிருக்கிற இந்த வேதனையை நீக்குவதற்காகவும் தான் எத்தனை கடுமையான பயிற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று உறுதி செய்து கொண்டான். தருமரிடம் விடைபெற்று வடக்கு நோக்கி வேகமாகப் போனான். மனம் எந்த வேகத்தில் போகிறதோ அந்த வேகத்தில் அவன் உடம்பு செயல்பட்டது. இமயமலை அடிவாரம் அடைந்து கடக்க முடியாதசிகரங்களையும், பள்ளத்தாக்குகளையும், அருவிகளையும், ஏரிகளையும், ஓடைகளையும் தாண்டி அமைதியான இடத்திற்கு வந்தபோது ‘திஷ்டா’ என்று ஒரு குரல் கேட்டது. ‘இங்கேயே இரு’ என்று அதற்கு அர்த்தம்.

அர்ஜுனன் தயங்கி நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பெரிய மரத்தின் இரண்டு வேர்களுக்கு நடுவே அமைதியாக ஒரு முனிவரைப் போல தோற்றமளித்த வயோதிகன் அமர்ந்திருந்தான். உபவாசங்களால் மெலிந்திருந்தான். ஆனால், முகம் மிக தேஜஸாக இருந்தது. தலைமுடி சடையாக இருந்தது. ஆனால், கண்கள் அக்னியைப் போல பிரகாசித்தன. அந்த சிரிப்பு மயக்கியது. ‘‘என்ன தம்பி. மிக மிக அமைதியான இந்த இடத்தில் வில்லும், அம்பும், கத்தியும், கையுறையும், செருப்பும் அணிந்து கொண்டு யுத்தத்திற்கு வருபவன் போல வருகிறாய்! இது யுத்தம் செய்யும் இடமல்லவே.

அப்படி யாரும் இங்கு இல்லையே. எதற்கு இந்த ஆயுதங்கள். நீ அர்ஜுனன் தானே. நான் புரிந்து கொண்டேன். எதற்கு இது. தூக்கி எறி. ஒருவன் வாழ்நாளில் எங்கு வரவேண்டுமோ அங்கு நீ வந்துவிட்டாய். எந்த நிலையை அடைய வேண்டுமோ அந்த நிலையை அடைந்து விட்டாய். இங்கே வருவதற்குண்டான பலம் உனக்கு இருக்கிறது என்றால் இந்த வில்லும், வாளும், அம்பும், அம்பாரத் தூணியும் அர்த்தமற்றவை. பலம் குறைந்தவை. உன்னுடைய ஆயுதங்களை விட உன் மனம் பலம் பொருந்தியதாக இருக்கிறது. எனவே பலம் பொருந்திய அந்த மனதை மட்டுமே வைத்துக் கொண்டு மற்றதை வீசி எறி. இது அமைதியான இடம்.

உனக்குத் தேவையில்லை தூக்கிப் போடு.’’ என்று கட்டளையிடுவதுபோல் சொன்னார். எந்த காரணம் கொண்டும் தன்னுடைய காண்டீபத்தை புறக்கணிப்பதில்லை என்று அர்ஜுனன் சபதம் செய்திருந்தான். அது நினைவுக்கு வர பணிவாக மறுத்தான். ‘‘எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றன. என்னை நம்பியுள்ளோருக்கு நான் உதவி செய்ய வேண்டியிருக்கிறது. அந்த உதவிக்கு இந்த ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆயுதங்கள் போதாது என்று நான் கூடுதலான ஆயுதங்களுக்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

தேவர்களின் தலைவன் இந்திரனைத் தேடி அவருடைய ஆயுதங்களை வாங்கவேண்டுமென்ற விருப்பத்தோடு வந்திருக்கிறேன். எனவே, நீங்கள் யார் என்று எனக்குச் சொல்லி இந்திரனிடம் போக வழி சொல்லுங்கள்’’ என்று பணிவாகக் கேட்டான். அந்த முனிவர் சிரித்தார். ‘‘அர்ஜுனா நானே இந்திரன்’’ என்று தன் சுயரூபத்தை காட்டினார். அர்ஜுனன் விழுந்து வணங்கினான். ‘‘ஓய்ந்து விடாது, மிகப் பெரிய மனோ பலத்தோடு இத்தனை இடங்களை தாண்டி வந்திருக்கிறாய் என்றால் நீ எந்தவித ஆயுதங்களையும் வாங்க யோக்கியதை உள்ளவன். உன்னுடைய மனோவலிமை மெச்சத்தகுந்தது.

இந்த ஆயுதங்களை நான் உனக்கு தருவதை விட பரமேஸ் வரன் உனக்கு கொடுத்தால் அது உத்தமமாக இருக்கும். எனவே, நீ பரமேஸ்வரனை தேடிப் போ. அவரை மனதில் தியானம் செய். உன் தேடுதலும், தியானமும் ஒன்று கூடட்டும். தேடல் என்பது உடல் ரூபமானது. அதற்காக பயணப் படுகிறாய். மனம் முழுவதும் சிவபெருமானைப் பற்றியே தியானத்திருக்கிறது. எனவே அவர் எங்கிருக்கிறார் என்று பார்ப்பது உன்னுடைய வேலையாகிறது. இந்த நேரத்தில் உடம்பும், மனதும் ஒன்று கூடுகின்றன. எந்த க்ஷணம் இவை இரண்டும் பின்னிப் பிணைந்து ஒரே ஸ்தூபமாய், தீபமாய் எரிகிறதோ அப்பொழுது பரமேஸ்வரன் தரிசனம் கிடைக்கும். எனவே, தேடு.

தேடினால் தான் கிடைக்கும். தேடாமல் தெரிந்தது போல் பேசுபவன் முட்டாள். பிறர் சொல் கேட்டு பேசுபவன் அறிவிலி. ஒவ்வொரு மனிதனும் தானே தேட வேண்டும். தானே தியானத்தில் ஈடுபட வேண்டும். இங்கு இன்னொருவர் சொல்லிக் கொடுத்து வருவதல்ல இது. இது உன்னாலேயே நடக்கப்பட வேண்டிய காரியம். மெல்லியதாய் நானோ, மற்றவரோ வழி காட்டலாம். ஆனால், தொடர்ந்து பயணப்படவும், மனம் ஒருமுகப்படவும் உன்னுடைய சக்தியும், வியக்தியும்தான் முக்கியம்.’’ என்று சொல்ல, அர்ஜுனன் ‘புரிந்தது’ என்று பணிந்தான்.

இந்திரன் நல் வார்த்தைகள் சொல்லி ஆசீர் வதித்து விட்டு அந்த இடத்திலிருந்து மறைந்தார். அர்ஜுனன் அங்கே தங்கினான். சிவனை தியானித்தான். தேடலுக்கு பிறகு தியானமல்ல. தியானத்திற்குப் பிறகு தேடல். மனம் ஒன்றுகூடிய பிறகு எங்கிருக்கிறார் என்று தேடுவது மனத்திற்கு எளிது. மிகப்பெரிய ஒரு வித்தையை எளிமையான முறையில் இந்திரன் சொல்லித்தர அர்ஜுனனுக்கு அது புரிந்தது. மகாபாரதம் படிக்கின்ற சாதாரணர்களுக்கும் இதை ஊன்றி படித்து புரிந்து கொண்டால் மேற்கொண்டு வாழ்க்கை நடத்துவது எளிதாகும். இமயமலைத் தொடரின் பல சிகரங்களுக்கப்பால், பரதகாண்டத்தின் பின்னால் ஒரு மலைச் சரிவில் பசுஞ்சோலை இருந்தது.

அங்குதான் அர்ஜுனன் இந்திரனை சந்தித்தான். இந்திரனை சந்தித்த இடத்திலேயே சிவனை குறித்து தியானிக்கலானான். ஒரு நாளைக்கு ஒரு முறை பழங்களைேயா, காய்களையோ உண்டு கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தான். பிறகு மூன்று நாளைக்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொண்டான். பிறகு ஆறு நாளைக்கு ஒரு முறை  பழங்கள் சாப்பிட்டான். பிறகு பதினைந்து நாளைக்கு ஒருமுறை எது கிடைத்ததோ அதை உண்டான். உணவு என்கிற விஷயம்கூட பசி என்கிற தொந்தரவு கூட அவனை தவத்திலிருந்து கலைக்கவில்லை. உயிர் வாழ்வதற்கு உடம்புக்குள் உயிர் இருப்பதற்கு என்ன சக்தி வேண்டுமோ அதை மட்டுமே உண்டான்.

பிறகு காற்று மட்டுமே போதுமானதாக இருந்தது. ஒரு காலில் நின்று கைகளை உயரே தூக்கி ஒரு மூங்கில் கம்பு போல பொன்னிறமாக, தேஜஸ்வியாக அர்ஜுனன் பரமேஸ்வரனை குறித்த கடும் தவத்தில் இருந்தான். அந்த இடத்தில் இருந்த முனிவர்கள் அவனுடைய இந்த தபஸ் ஏற்படுத்துகின்ற அதிர்வை தாங்காது தவித்தார்கள். எங்கேயோ ஏதோ ஒரு ஜீவன் தவிக்கிறதே, தன்னை துன்புறுத்திக் கொள்கிறதே என்பதை உணர்ந்தார்கள். யார் என்று தெரிந்தார்கள். பரிதாபப்பட்டார்கள். சீக்கிரம் இவனுடைய தவம் நிறைவேற வேண்டுமே என்று ஆதங்கப்பட்டார்கள்.

இவன் நிறுத்துவதாக இல்லையே என்று பரமேஸ்வரனிடம் போய், ‘உங்களை குறித்து தவம் இருக்கிறான். தயவு செய்து அவனை ஆசுவாசப்படுத்துங்கள்’ என்று வேண்டினார்கள். ‘‘அர்ஜுனன் சொர்க்க வாசம் விரும்பவில்லை. அதற்காக தவம் இல்லை. அவன் எது குறித்து தவம் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் பதட்டப்பட வேண்டாம். வெகுவிரைவில் நான் அவனை அமைதிப்படுத்துவேன் என்று அந்த முனிவர்களுக்கு வாக்கு கொடுத்தார் பரமேஸ்வரன்.

அந்த வனத்தில் சிவபெருமான் கொடும் வேடனாக உருவெடுத்து தரை இறங்கினார். நல்ல ஆகிருதியும், கையில் வில்லும், அம்பாரத்தூணியும், கண்களில் கூர்மையும், முகத்தில் கடுமையும், நடையில் அலட்சியமும், நிற்பதில் திடமும் கொண்டு பல பெண்களோடு அந்த வனத்திலே அர்ஜுனனை நோக்கி நடந்து வந்தார்.

அர்ஜுனனின் தபஸை கண்ட மூகன் என்ற ராட்சஸன் அந்த தவத்தை கலைக்க விரும்பினான். பன்றி உருவில், தொலைவிலிருந்து உருமினான். தடதடக்க அருகே ஓடினான். முன்னும் பின்னும் அலைந்தான். தொலைவிலிருந்து கால்களால் குழி எடுத்து, கோரை பற்களால் மண் கிளறி மிக வேகமாக அர்ஜுனனை நோக்கி ஓடிவந்தான். அர்ஜுனன் நகர்ந்து கொண்டான். பன்றி தவத்திற்கு இடையூறு செய்கிறது என்று கோபமடைந்தான்.

சட்டென்று வில்லும், அம்பும் எடுத்துக் கொண்டு உடம்பு இருக்கிறது என்கிற திமிர்தானே என் தவத்தை கலைக்க வைக்கிறது. ஒரே அடி, மண்டை பிளந்து இறந்துவிடுகிறாய் பார் என்று வில் வளைத்து அம்பு தொடுத்தான். அப்போது ‘நில்’ என்ற சப்தம் கேட்டது. வேடர் வடிவம் பூண்டிருந்த சிவபெருமான் கை உயர்த்தி அவன் குறி பார்ப்பதை தடுத்து நிறுத்தினார். அர்ஜுனன் தளர்ந்தான்.

(தொடரும்)