ஈழத்திடமிருந்து தஞ்சை பெற்ற கோயில் மானியம்!



கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்: ஸ்ரீலங்கா- பொலன்னருவா

தஞ்சாவூர் பெரிய கோயில் எனப் பெறும் முதலாம் இராஜராஜசோழன் எழுப்பித்த தஞ்சை இராஜராஜேச்சரத்தின் ஸ்ரீவிமானத்தின் வடபுறம் அடித்தளக் கட்டுமான அதிஷ்டானத்து ஜகதி என்ற பகுதியில் அப்பேரரசன் இட்ட ஆணை, கல்வெட்டாகப் பொறிக்கப் ெபற்றுள்ளது. அக்கல்வெட்டுச் சாசனத்தின் முற்பகுதியில் அப்பேரரசனின் கீர்த்தியினை எடுத்துரைக்கும் மெய் கீர்த்திப் பாடலொன்றுள்ளது. திருமகள் போல எனத் தொடங்கும் அப்பாடலில் ‘‘குடமலை நாடும் கொல்லமும், கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்..’’ என்ற அடி காணப்பெறும். அப்பேரரசன் வென்ற நாடுகளுள் ஒன்றே சிங்களரின் கட்டுப்பாட்டிலிருந்த இலங்கை நாடாகும். அதனை வென்று தன் கட்டுப்பாட்டிற்குள் இராஜராஜன் கொணர்ந்தான் என்பதே தஞ்சை கல்வெட்டு கூறும் செய்தியாகும்.

இராஜராஜனின் புதல்வன் முதலாம் இராஜேந்திர சோழன் தன்னுடைய மெய்க்கீர்த்தியில் ‘‘பொரு கடல் ஈழத்து அரசர் தம் முடியும், ஆங்கு அவர் தேவியர் ஓங்கு எழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் (பாண்டியர்) ைவத்த சுந்தர முடியும் இந்திரன் ஆரமும், தென் திரை ஈழ மண்டலம் முழுதும்’’ தான் கவர்ந்து பெரு வெற்றி கண்டதாகக் கூறியுள்ளான். தந்தையும் மகனும் இலங்கை நாடு முழுவதையும் வென்று தம் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்பதை இலங்கையிலும், தமிழகத்திலும் உள்ள பல கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.

அவற்றை தொகுத்து ேநாக்கும்போது ஈழ மண்டலத்தில் அவர்கள் செய்த அருஞ்சாதனைகள் பற்றியும், அவர்கள் எழுப்பித்த சிவாலயங்கள் பற்றியும் நாம் விரிவாக அறிய இயலுகின்றது. பண்டைக் காலந்தொட்டு ஈழ நாட்டின் தலைநகரமாக விளங்கியது அனுராதபுரம் என்னும் பேரூரேயாகும். ஈழநாட்டைக் கைப்பற்றிய இராஜராஜசோழன் அந்நகரை துகள்படச் செய்து பின்பு பொலன்னருவா எனும் புதிய தலைநகரை நிருமாணித்தான். பொலன்னருவா என்ற சிங்களப் பெயருக்கு மாற்றாக அந் நகருக்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயர் சூட்டினான். ஜனநாதன் என்றால் மக்களால் விரும்பப்படும் தலைவன் என்பதாகும்.

இராஜராஜன் மகிழ்ந்து சூடிய விருதுப் பெயர்களுள் இது குறிப்பிடத்தக்கவொன்றாகும். இராஜராஜனின் பெயரால் பொலன்னருவா, ஜனநாத மங்கலமானது போன்று ஈழ மண்டலம் மும்முடிச் சோழ மண்டலம் என அவனால் பெயர் மாற்றம் பெற்றது. தஞ்சை பெரிய கோயிலிலுள்ள மற்றொரு கல்வெட்டு இலங்கை பற்றிய ஒரு முக்கியத் தகவலைக் கூறுகின்றது. இராஜராஜன் சோழநாட்டிலிருந்தும் அவன் கைக்கொண்ட பிற நாடுகளிலிருந்தும் பல ஊர்களைத் தேர்வு செய்து அவ்வூர்களில் அவனால் தஞ்சை பெரிய கோயிலுக்கு என ஒதுக்கப் பெற்ற நிலங்களிலிருந்து நெல்லாகவும், காசாகவும், இலுப்பை எண்ணெய்யாகவும் ஆண்டுதோறும் தஞ்சை கோயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து அவ்வூர்களின் பட்டியலையும், அங்கிருந்து அனுப்பப்பெற வேண்டியவற்றின் அளவுகளையும் ஒரு நீண்ட கல்வெட்டுச் சாசனத்தில் பதிவு செய்துள்ளான்.

அப்பட்டியலில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்து மாப்பிசும்பு கொட்டியாரம் எனும் ஊரிலிருந்து நெல்லாக 3164 கலம் நெல்லும், 12-1/2 பொற்காசும், இலுப்பைப் பாலான எண்ணெய் இரு கலமும், அங்கிருந்த மற்றொரு ஊரிலுள்ள 119 வேலி நிலத்து வருவாயிலிருந்து நெல்லும், இலுப்பைப்பால் 3 கலமும் காசு 22ம் தஞ்சைக்கு அனுப்ப வேண்டும் என்று குறிக்கப் பெற்றுள்ளது. அதுபோன்றே அதே நாட்டு மாசார் எனும் ஊரில் இருந்த 353 வேலி நிலத்து நெல் வருவாயினையும் தஞ்சை இராஜராஜேச்சரத்துக்கு அனுப்ப அப்பேரரசன் ஆணையிட்டுள்ளதை அக்கல்வெட்டுச் சாசனம் எடுத்துரைக்கின்றது.

இராஜராஜசோழனாலும் அவன் மைந்தன் கங்கையும் கடாரமும் கொண்ட இராஜேந்திர சோழனாலும் புதிதாக உருவான பொலன்னருவா எனும் இலங்கை நாட்டுப் பெருநகரத்தில் 14 சிவாலயங்கள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை அழிந்து, அவை இருந்ததற்கான தடயங்களை மட்டும் சுமந்தவண்ணம் காணப்பெறுகின்றன. அவற்றில் இரண்டு சிவாலயங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒரு ஆலயத்தின் மேற்தள கட்டுமானங்கள் அழிந்துவிட்டன. மற்றொரு ஆலயத்தின் கருவறை விமானம் நல்ல நிலையிலும், முன் மண்டபம் கூரை அழிந்தும் காணப்படுகின்றன.

இவை அனைத்தும் இராஜராஜனால் எழுப்பப் பெற்றவையாகும். இலங்கையில் உள்ள இராஜராஜனின் தமிழ்க் கல்வெட்டு விமானத்துடன் காணப்பெறும் சிவாலயத்தை ‘வானவன் மாதேவீச்சரம்’ என்று குறிப்பிடுகின்றது. இராஜராஜசோழனின் தாயும் சுந்தரசோழனின் தேவியுமான
வானவன் மாதேவியார் நினைவாக எடுக்கப்பெற்ற அந்த ஆலயத்தை பொலன்னருவா நகரத்தில் நாம் காணும்போது அப்பேரரசனின்
மாட்சிமை நமக்குப் புலப்படும். வானவன் மாதேவியாரின் சிறப்புகளை தமிழகத்திலுள்ள பல கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவலூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோயிலிலுள்ள மாமன்னன் இராஜராஜசோழனின் அலுவலன் கம்பன் மணியன் வெட்டுவித்த கல்லெழுத்துச் சாசனத்தில் இராஜராஜன் எனும் புலியைப் பெற்றெடுத்த பொன்மான் அத்தேவி என்றும் அவ்வம்மையார் திருக்கோவிலூர் மலையமான் குலத்தில் பிறந்தவர் என்றும், சுந்தரசோழன் மாய்ந்தபோது அவனது ஈமத்தீயில் பாய்ந்து தன் தலைவனைப் பிரியாத தையல் என்றும் கூறுகின்றது.

நந்திபுர மன்னராக விளங்கிய சுந்தர சோழருக்காகவும், அவர்தம் தேவியாள் வானவன் மாதேவியாருக்காகவும் ஒடுக்கப் பெற்ற ‘பாராந்தக தேவ ஈச்சரம்’, ‘வானவன் மாதேவீச்சரம்’ என்ற இருபள்ளிப் படைக் கோயில்கள் (நினைவாலயங்கள்) கண்டியூரின் அருகேயுள்ள இரட்டை கோயிலிலிருந்து அழிந்து பின்பு அக்கோயில்களின் கட்டுமானங்களைக் கண்டியூர் வீரட்டானேஸ்வரர் கோயில் இராஜகோபுரம், அம்மை மங்களாம்பிகை கோயில் ஆகியவற்றின் கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டு வானவன் மாதேவீச்சரம் இன்று இல்லை என்றாலும் அத்தேவியின் பெயரால் எடுக்கப்பெற்ற வானவன் மாதேவீச்சரம் மூலவரான இலிங்கத் திருமேனியோடு இலங்கையில் காணப்பெறுவது மகிழ்வுக்குரிய செய்தியாகும். அதுபோன்றே தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் இராஜராஜனின் தமக்கை குந்தவையார் அக்கோயிலுக்கென அளித்த செப்புத் திருமேனிகள், செப்புப் பிரதிமங்கள் (மனித உருவங்கள்) ஆகியவை பற்றி குறிப்பிடும் கல்வெட்டில் பொன் மாளிகை துஞ்சின தேவரான தம் தந்தை சுந்தர சோழன் மற்றும் தம் அம்மை (தாய் வானவன் மாதேவியார்) ஆகியோரின் பிரதிமங்கள் வழிபாட்டில் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. ஆனால், அப்பிரதிமங்களும் பின்னாளில் அழிந்துவிட்டன.

ெபாலன்னருவா கோயில்கள் இருந்தபகுதியில் கிடைத்த ஒரு அரிய சிற்பமொன்றினை அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தியுள்ளனர். ஒரு அரசன் தன் மனைவியின் தொடை மீது ஒரு கரத்தை அமர்த்தியவாறு இருகால்களையும் மடக்கிய நிலையில் அமர்ந்திருக்க இரு உதவியாளர்கள் அருகில் சாமரம் வீசி நிற்கின்றனர். பேரழகு வாய்ந்த இந்த இலங்கை சிற்பமும் தஞ்சைப் பெரிய கோயிலில் இராஜராஜன் திருவாயில் எனப் பெறும் ேகாபுரத்தின் அடித் தளத்தில் காணப்பெறும் ஒரு சிற்பமும் ஒத்த தன்மையுடையவையாய் காணப்பெறுகின்றன.

தஞ்சைச் சிற்பம் பிற்காலத்தில் கலையறிவற்றோரால் சிதைக்கப் பெற்றுள்ளது. இங்கு சிவனும் உமையும் அமர்ந்திருக்க, கங்கை, யமுனை என்ற இரு நதிப் பெண்கள் சாமரம் வீசுகின்றனர் தஞ்சைக் கலையும், ஈழத்துக் கலையும் இவ்விரு சிற்பக் காட்சிகளில் சங்கமிப்பதைக் காணலாம். கொழும்பிலிருந்து திரிகோணமலை செல்லும் நெடுஞ்சாலையில் ஹபரேணி என்னும் இடத்திலிருந்து பிரியும் மின்னேரியா வழி சாலையில் பொலன்னருவா எனும் பெருநகரம் உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் பெளத்த விகாரங்களும் ஸ்தூமங்களும், ஓவியக்கூடங்களும் உள்ள சிக்கிரியா மலையும், தம்புவாமலையும் இடம் பெற்றுத் திகழ்கின்றன. திரிகோண மலையில் திருகோணேச்சரம் என்ற தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் உள்ளது. கோணேச்சரம் செல்வோர் சற்று தொலைவு பயணம் செய்து பொலன்னருவா சிவாலயங்களை வழிபட இயலும்.

பொலன்னருவா நகருக்கு வளமை கூட்டி நிற்பது பராக்கிரம சமுத்திரம் எனும் பேரேரியாகும். முதலாம் பராக்கிரம பாகுவால் வெட்டப் பெற்ற இந்த சமுத்திரமயமான ஏரி 5940 ஏக்கர் பரப்பளவில் திகழ்ந்து 18500 ஏக்கர் நிலங்களுக்குப் பாசனமளிக்கின்றது. இதன் ஒருகரையில் கி.பி. 12ம் நூற்றாண்டில் ஒரு பாறையில் உருவாக்கபெற்ற பிரமாண்டமான ஒரு முனிபுங்கவர் சிற்பம் இடம் பெற்றுள்ளது.

இரு கைகளிலும் ஓலைச்சுவடி கட்டினை ஏந்தியவாறு தாடி மீசையுடன் திகழும் இவ்வுருவத்தினை அகத்தியர் என்றும், பராக்கிரமபாகு மன்னன் என்றும், கபில முனி என்றும் பல கருத்துகள் உள்ளன. பொலன்னருவா சைவமும், பௌத்தமும் ஒரு காலத்தில் மிக்கோங்கி திகழ்ந்த ஒரு மாநகரமாகவே இருந்துள்ளது. கடல் கடந்தும் வானவன் மாதேவியின் புகழ் நிலைபெற்று நிற்கின்றது.

-முது முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்