மேன்மையான வாழ்வருள்வாள் மும்பை மகாலட்சுமி



மும்பையின் இதயமாக கருதப்படும் இடத்தில் அரபி கடற்கரையோரம் அமைந்துள்ளது மகாலட்சுமி கோயில்.  இங்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர் உள்ளனர். மும்பை மாநகர் மீது அந்நியர் படையெடுத்தபோது, கோயிலுக்கு பாதகம் விளையுமோ என்று அஞ்சிய பெரியோர்கள், மகாலட்சுமி சிலையை கடலுக்குள் மறைத்து வைத்தனர். போர்த்துகீசியர் காலத்தில், தம் வணிக வளர்ச்சிக்காக மும்பையின் 7 தீவுகளை ஒன்றாக இணைக்கும் திட்டம் உருவானது. ஆனால், திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே பல தடைகளை சந்தித்தது. இறுதியாக மகாலட்சுமி, தனக்குக் கோயில் எழுப்பினால், திட்டம் நிறைவேறும் என்று சொல்லி தன் இருப்பை உணர்த்தினாள்.



அதன்படியே கிருஷ்ண மோரே என்பவரின் முயற்சியால், மகாலட்சுமி உள்பட முப்பெரும் தேவியரும் கடலிலிருந்து கிடைக்க, மூவரையும் முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜைகளும் மேற்கொண்டார்கள். அதன் பிறகு தீவுகளை இணைக்கும் பணி குறிப்பிட்ட நாளில் முடிந்தது. இந்தியாவின் தொழில் நகரமாக மும்பை வளர்ந்தது. முதல் முதலாக அங்கு ரயில் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. அனைத்தும் அன்னை மகாலட்சுமியின் அருள் என்று சொல்லி, மும்பை மக்கள் மெய் சிலிர்த்தனர்.

மகாலட்சுமி வெளிப்பட்ட ஜூன் 17, அன்று மகாலட்சுமியை பல்லக்கில் சுமந்து நெடுந்தொலைவு ஊர்வலம் வருவதை லட்சக்கணக்கான பக்தர்கள்  கண்டு களிப்பர். நூற்றுக்கணக்கான வியாபாரிகள் செந்தாமரையுடன் வந்து தாயாரை  தரிசனம் செய்கின்றனர். மாலை சூடிய கழுத்தோடு வந்து தரிசனம் செய்தால் இல்வாழ்க்கை வளமாகும் என்பதால், புதுமண தம்பதிகள் நிறைய பேரை இந்தக் கோயிலில் தினமும் காணலாம்.

கோயிலுக்கு பின்புறம் கடலுக்குள் மூன்று  ஊற்றுகள் உள்ளன. இந்த நீரூற்றின் தண்ணீர் இனிப்புசுவையாக இருப்பது அதிசயம். வேலை, கல்வி, செய்தொழில் விருத்தி வேண்டுவோர், தேவியருக்கு தேங்காய், தாமரைப் பூ, இனிப்புகளை படைத்து வழிபட்டு பலன் பெறுகின்றனர். கணபதி, ருக்மிணி-பாண்டுரங்கன், ஆஞ்சநேயர், அம்பாள், சிவனுக்கும் சந்நதிகள் உள்ளன. கோயிலுக்குப் பின்புறம் சிலையை கண்டெடுத்த கிருஷ்ண மோரேயின் சமாதி உள்ளது. மும்பை மேற்கு ரயில்வே பிரிவில் மகாலட்சுமி ரயில் நிலையத்தில் இறங்கி இந்த கோயிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். மும்பையின் முக்கிய நகரங்களில் இருந்து கோயிலுக்கு பேருந்து வசதியும் உள்ளது.

- குலோத்துங்கன்