திருத்தங்கல் கவலைகள் தீர்த்துவைப்பாள் கமல மகாலட்சுமி



திருப்பாற்கடலில் ஒருநாள் ஒரு பிரச்னை. எதிரெதிர் அணியாக இருந்தாலும், தலைவர்களுக்கிடையே கொள்கை ரீதியாக முரண்பாடு இருந்தாலும், மனத்தளவில் பொதுவாகவே அவர்கள் ஒற்றுமையாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களின் தொண்டர்கள் அன்பு மிகுதியாலும், ஆர்வக் கோளாறாலும் அந்தத் தலைவர்களிடையே பகைத்தீயை மூட்டிவிடுவார்கள். அப்படித்தான் ஆயிற்று திருப்பாற்கடலிலும். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய, நாராயணின் முப்பெருந் தேவியர்களின் தோழிகளுக்கிடையே போட்டி-யாருடைய தலைவி சிறந்தவர் என்று!

‘ஸ்ரீதேவிதான் உலகையே ரட்சிக்க வல்லவள். எல்லா மக்களின் வளத்துக்கும் அவளே மூலகாரணமானவள். இந்திரன்கூட இந்த தேவியால்தான் பலம் பெறுகிறான். வேதங்களாலும் புகழப்படுபவள் இவளே. பெருமாளும் இவளிடமே பெருங்காதல் கொண்டு, தன் இதயத்திலேயே இருத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் பெருமாள் ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன், ஸ்ரீநிவாசன் என்றெல்லாம் போற்றப்படுகிறார்’ என்றது ஸ்ரீதேவி அணி.

‘பூமாதேவியே உயர்ந்தவள். அவளுடைய பொறுமைக்கு ஈடில்லை, இணையில்லை. சாந்தம் இழக்காதவள். வாமன அவதாரம் எடுத்த நாராயணன், மகாபலிச் சக்கரவர்த்தியிடம் தானமாக வெண்டிய முதல் பொருளே இந்த பூமியைத்தான். இவ்வளவு ஏன், இவளைக் காப்பதற்காகத்தானே பெருமாள் வராஹ அவதாரமே எடுத்தார்! ஆகவே இவளுடைய பெருமைக்குதான் ஈடு ஏது!’ என்பது பூமாதேவியின் தோழியர் வாதம்.

‘நீளாதேவியோ ரஸ ரூபமானவள். ‘ரஸோவைஸ’ என்று வேதங்கள் புகழ்கின்றன. இவள் நீர் மயமானவள் என்பதாலேயே பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். நீருக்கு ‘நாரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. இவளை முன்னிருத்தியே பெருமாள் ‘நாராயணன்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்’ என்றார்கள் நீளாதேவியின் தோழியர். தொண்டர்களைத் திருப்திபடுத்த வெண்டும் என்பதற்காகவோ, அல்லது தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தாலோ, ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டாள்.

நேராக பூலோகத்தில் தங்கால் மலையென்றழைக்கப்பட்ட திருத்தங்காலுக்கு வந்து கடுந்தவம் இயற்றினாள். தேவியின் தவத்தை மெச்சும் சாக்கில், அவளைவிட்டுப் பிரிய இயலாத வேதனையைத் தீர்க்கும் பொருட்டு, பெருமாள் அவள்முன் தோன்றி, ‘நீயே சிறந்தவள்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார். இப்படி திருமகள் தங்கி தவம் மேற்கொண்ட தலமாதலால், இப்பகுதி திருத்தங்கல் என்ற பெயர் உண்டானதாகச் சொல்வார்கள்.

தங்களது பொது நோக்கமான பெருமாளைத் தம் சக்தியால் உயர்த்தி, அவருக்கு ஆதாரமாக இருப்பது மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக ஆசியளிப்பது என்ற நெறிமுறைகளிலிருந்து பிறழாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பூமாதேவியும், நீளாதேவியும் தாமும் இதே தலத்துக்கு வந்து பெருமாளுடன் கோயில் கொண்டார்கள். இந்தக் கோயிலுக்குள் நுழைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பிரதான வாசலாக தெற்கு நோக்கி இருக்கிறது. சில படிகள் ஏறி அந்த வாயில் வழியாக உள்ளே செல்லலாம்.

அல்லது கிழக்கு நோக்கியிருக்கும் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாத சுவாமி கோயிலுக்குள் போயும் பின்னாலுள்ள பெருமாளை தரிசிக்கலாம். அதாவது, இந்த ஈசனை வழிபட்டு, பக்கத்தில் நவகிரகங்களை வணங்கி, மண்டபத்தைவிட்டு மேற்கு நோக்கி வெளியே வந்தால், ‘நின்ற நாராயணப் பெருமாள் கோயிலுக்குப் போகும் வழி’ என்று ஒரு அறிவிப்புப் பலகை நம்மை பெருமாள் கோயிலுக்குள் வழிநடத்துகிறது.

முதலில் காட்சி தரும் துலாபாரம், பெருமாள், பக்தர்களின் நிறை, குறைகளை நிறுத்து அருள் பாலிப்பவன் என்பதை சங்கேதமாக உணர்த்துகிறது. இந்த துலாபாரம், வேண்டுதல்களை நிறைவேற்றும் பக்தர்கள் தம் எடையளவில் காணிக்கைப் பொருட்களை நிறுத்துக் கொடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. நயனங்களால் நன்மைகள் கொழிக்க வைக்கும் தாயார், அருண கமல மஹாலட்சுமியாக அதாவது, செங்கமலத் தாயாராக அற்புத தரிசனம் அருள்கிறாள். பெருமாளுக்கும் திருத்தங்காலப்பன் என்று அழகு தமிழ்ப் பெயர். திருமணம், பிள்ளைப்பேறு என்று தம் குறைகளைத் தாயாரிடம் சமர்ப்பித்து அவை நிறைவேறியதும், அதன் நன்றிக் காணிக்கையாக தாயாருக்கு ஒன்பது கஜப் புடவையை சாத்தி நெகிழ்கிறார்கள் பக்தர்கள்.

மூலக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் வேறெந்த தலத்திலும் காணக்கிடைக்காதபடி, ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடன், ஜாம்பவதியையும் இங்கே தரிசிக்கலாம். ராமாவதாரத்தில், சீதை மீட்புக்காகத் தனக்கு உதவியவர்களில் ஒருவனான ஜாம்பவானுக்கு நற்பேறு வழங்க விரும்பிய பெருமாள், தன் கிருஷ்ணாவதாரத்தில் அவன் மகள் ஜாம்பவதியை மணம் புரிந்து கொண்டார். அந்த ஜாம்பவதியைத்தான் இங்கே நாம் காண்கிறோம். இவர்களோடு பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், அருணன், கருடன் ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

கோயிலின் மேல் தளத்தில் கருடன் வித்தியாச கோலம் காட்டுகிறார். ஆமாம், நான்கு கரங்களுடன், அமிர்த கலசம் தாங்கியிருக்கிறார். சர்ப்பத்தை மாலையாக அணிந்திருக்கிறார். உற்சவர் திருத்தங்கால் அப்பன் என்றழைக்கப்படுகிறார். ஆடிப்பூர விசேஷ நாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று, ஆண்டாள் சூடிக் களைந்த மாலையையும், உடுத்திக் களைந்த புடவையையும் எடுத்து வந்து இங்கே பெருமாளுக்கு சாத்தி மகிழ்கிறார்கள். தென்காசி-விருதுநகர் ரயில் மார்க்கத்தில் திருத்தண்கால் ரயில் நிலையத்திற்கு அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது. மதுரை, சிவகாசியிலிருந்து செல்லலாம். பேருந்து வசதிகள் உண்டு.

- பி.எஸ்.