ஆலகால ஈஸ்வரர்



ஆலம்பூண்டி

பெரிய மகான்களும், சித்தர்களும் வாழ்ந்த கோயில்களுக்கு என்றுமே தனிசக்தி உண்டு என்பதை நாம் காண்கின்றோம். அப்படிப்பட்ட சிறப்புமிக்க தலம்தான் ஆலகால ஈஸ்வரன் கோயில். அமுதம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர். அமுது வருவதற்கு முன்பு இதிலிருந்து வெளிப்பட்ட விஷத்தின் வெப்பம் தேவர்களையும், அசுரர்களையும் வாட்டியது. அவர்கள் சிவபெருமானை நெஞ்சுருக வேண்டி தஞ்சமடைந்தனர். பக்தர்களின் வேதனையைத் தீர்க்க, ஈசன் ஆலகால விஷத்தை உருண்டையாக்கி விழுங்கினார்.

பதறிப்போன பார்வதிதேவி ஈசனின் கழுத்தில் கையை வைத்து நஞ்சை நடுவில் நிறுத்தினார். இதனால் சிவனின் கழுத்து நீல நிறமானது. அகில உலக உயிர்களையும் காக்க ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானுக்கு இப்படி ஆனதே என்கிற கவலை கொண்ட தேவர்கள் பதைபதைப்போடு கயிலாயம் சென்றனர். அவர் களைப் பார்த்த பரமேஸ்வரன், ஆலகால விஷத்தால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த நந்திதேவரின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடினார். விடமுண்ட கண்டனாதலால் நீலகண்டேஸ்வரர் என்ற பெயர் அவருக்கு உண்டானது.

சிவபெருமான் அவ்வாறு தான் விஷம் உட்கொள்ளுமுன் தனக்கு தொண்டு செய்கின்ற சுந்தரரை அழைத்து அந்த விஷத்தை எடுத்து வரும்படி சொல்ல அப்படியே அவரும் செய்தார். அதனால் அவருக்கு ஆலகால சுந்தரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஆனந்தத் தாண்டவ காலமே பிரதோஷ புண்ணிய காலம் என்றழைக்கப்பட்டது. கயிலையில் நடத்திய திருநடனத்தை மீண்டும் நடத்தியருள வேண்டும் என தேவர்களும், ரிஷிகளும் வேண்டியதால் சிவபெருமான் மீண்டும் ஆனந்த தாண்டவம் ஆடி அருளி பூலோகத்தில் அவர்களை மகிழ்வித்த தலமே ஆலம்பூண்டி.

ஆலகால விஷமுண்ட ஈஸ்வரன் இங்கு குடிகொண்டதால் இங்குள்ள சிவனுக்கு ‘ஆலகால ஈஸ்வரன்’ என்கிற திருநாமம் ஏற்பட்டது. இவ்வூருக்கும் ஆலம்பூண்டி என்ற பெயர் உண்டானது. சோழ மன்னர் காலத்தில் புனரமைக்கப்பட்ட இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆலகால ஈஸ்வரர் கருவறையில் லிங்கரூபமாக பேரருள்பாலிக்கிறார்.

நீலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் மங்களாம்பிகை. கருவறை கோஷ்டத்தில் முறையே தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், பாலசுப்ரமணியர், நால்வர், லிங்கோத்பவர், பெருமாள், மகாலட்சுமி, கஜலட்சுமி, பிரம்மா, ஆஞ்சநேயர், காலபைரவர் மற்றும் நவகிரக சந்நதிகளும் இக்கோயிலில் அமைந்துள்ளன. சிவன் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, இங்குள்ள ஆலம்பூண்டி மலைமீது தன் திருப்பாதங்களை பதித்ததாக ஐதீகம் உண்டு.

அந்த பாதங்கள் மலைகுன்றின் உச்சியில் உள்ளன. ஆண்டுதோறும் இங்குள்ள மலைவாழ் மக்கள் இத்திருப்பாதங்களுக்கு விழா எடுப்பார்கள். திருவண்ணாமலையில் எப்படி கார்த்திகை தீபம் ஏற்றுகிறார்களோ, அப்படியே இங்கும் ஏற்றி ஆலகால ஈஸ்வரனை வணங்கி வழிபடுகின்றனர். இங்குள்ள அமிர்த புஷ்கரணி குளத்தின் தீர்த்தம் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. செஞ்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

- ப.பரசுராமன்