கீவளூர் கேடிலியப்பரை வழிபட்ட குபேரன்



சூரபத்மன் அடாத செயல்களை செய்தவனாயினும் அவனை வதைத்த மெல்லியதான இரக்க உணர்வு முருகவேளுக்குள் பரவியது. இந்த மனக்கிலேசத்தைப் போக்கிக்கொள்ள, நவலிங்க பூசையை ஒவ்வோர் தலத்திலும் தங்கி, சிவலிங்கம் நிறுவி ஈசனின் சாந்நித்திய சாரலில் நனைந்தார். பிறகு ஆதி இலந்தை வனநாதரிடம் ஓடோடி வந்தார். வீராதிவீரர்களைக் கொண்டும், தேவதச்சனை ஆலோசித்தும் பெருங்கோயிற் எடுப்பித்தார்.  புறத்தில் வேள்வி புரிந்தவன் அகத்திலே மூண்ட இரக்கத்தீயை அணைக்க ஓரிடத்தில் தியானத்தில் அமர்ந்தார். ஐம்புலன்களும் வெளியுலகம் நோக்கி சிதறி ஓடின.

அப்பனுக்கு செய்யும் ஆராதனையில் இத்தனை இடர்களா என்று அம்மையை வேண்டினார் ஆறுமுகப் பெருமான். பேராற்றல் பெற்றிருப்பினும் தாய்க்கு குழந்தையல்லவா, குமரப்பெருமான்! அங்கு வீற்றிருந்த வனமுலைநாயகி, என் குழந்தையை எந்தத் தீயவையும் நெருங்க விடமாட்டேன் என எழுந்தாள். ஆகாயத்தில் வளர்ந்தாள். அஞ்சேல் எனக் கரம் காட்டினாள். காளியாக சிவந்தாள். அஞ்சேல் என்றவள் அஞ்சுவட்டத்தம்மனாக திருநாமங்கொண்டாள்.

பாலமுருகன் வீரக் கொலைப்பாவம் நீங்கும் பொருட்டு இத்தலத்தை தந்தை ஈசனை பூசித்ததால் இத்தலத்திர்கு பூசரண்யபுரம் என போற்றினர். கந்தப்பெருமான் விண்ணுலகில் உறையும் தலத்தை மேல்வேளூர் என்று அழைத்ததுபோல, பூவுலகில் நிரந்தரமாக தங்கித் தவமிருப்பதாலேயே கீழ்வேளுர் என்று பெருமை ஏற்பட்டது. சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வத்தையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால் இத்தலத்தை அடைந்தான்.

திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியெம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு வைசியனை அடையாளம் காட்டினார். பக்தியும், புத்தியும், பொருளும் அளித்து ஆலயப்பணி செய்வித்தார். இன்றும் இத்தலத்தில் குபேரனுக்கு தனிச் சந்நதி உண்டு. குபேரனை வழிபடுபவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நீடூழி வாழ்வர்.

முருகு என்ற பொருளுக்கு அழகு என்பதுபோல இந்தக் கோயிலுக்குள் உலகிலுள்ள அத்தனை பேரழகும் கொட்டிக்கிடக்கின்றன. முழுக்கோயிலுமே கற்றளியாக செய்திருக்கிறார்கள். கற்களை வைத்து வித்தை காட்டியிருக்கிறார்கள். ‘எண்டோளீசற்கு எழில் மாடம் எழுபது செய்துலகாண்ட’ கோச்செங்கெட்சோழன்தான் இக்கோயிலையும் எடுப்பித்திருக்கிறான். பெரிய ராஜகோபுரம் நடுநாயகமாக கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. கோயிலுக்குள் நுழையும்போதே கற்கோயிலின் பிரமாண்டத்தை உணர்த்தும் வகையில் இடப்பக்கம் முழுதும் கல்லால் ஆன சிறு கோபுர அமைப்பை எழுப்பியிருக்கிறார்கள்.

இத்தலத்தில் வடக்குப் பார்த்த கணபதியும், வடமேற்கில் சித்திரசிற்பம் கொண்ட ஆறுமுக மயில் வாகனனும் அழகு காட்சி அருள்கின்றனர். கோயில் கட்டுமலை அமைப்பை உடையது. நந்தியின் சந்நதி சற்று நகர்ந்துள்ளதைக் காண்கிறோம். நந்திக்கு அருகேயே இத்தல நாயகர் முருகப்பெருமானின் சந்நதி உள்ளது. தந்தையின் சந்நதியை நோக்கி செங்குத்தான படிகளில் ஏறிச்செல்கிறோம். அழகான தூண்களுடன் சிறு மண்டபம்போல காட்சியளிக்கிறது. பார்வதி திருமணத்தை விளக்கும் அற்புதமான சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அதையும் தரிசித்து சற்று உள்ளே நகர்கையில் கேடுகளை அழித்து அற்புத வாழ்வுதரும் கேடிலியப்பர் வீற்றிருக்கிறார்.

பார்த்தவுடனேயே மயிர்க்கூச்செரியும் சந்நதி. சுயம்புவாக உதித்தவன் இங்கே செல்வக் குமரனின் பாவம் தீர்த்தான். எத்தனை முறை தரிசித்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஓர் அழகுமூர்த்தமாக கேடிலியப்பர் விளங்குகிறார். அப்பரடிகள் ‘‘கீழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே’என்று ஒரடியில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார். வெள்ளிக்கவசம் சாத்தி இன்னும் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்கள். குகைக்குள் குடிகொண்டிருக்கும் தனிச் சிங்கத்தைக் காண்பதுபோல மெல்லியதாக நடுக்கமும், பிரமிப்பும் அவ்விடத்தில் உணர முடிகிறது.

அந்த கட்டுமலை முழுவதும் கற்களாலேயே அமைந்திருப்பதைப் பார்த்து பிரமிப்பு முட்டுகிறது. ஈசனைத்தான் எத்தனை அற்புதமான கல்மாளிகைக்குள் அமர்த்தியிருக்கின்றனர்! வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியாத வனப்புடைய சிற்பச் செல்வங்கள் நிறைந்த பிராகாரம்.  அந்த பிட்சாடண மூர்த்தியின் சிலைதான் எத்தனை நுணுக்கம். வீணாதர தட்சிணாமூர்த்தி நாத பிரம்மத்தில் தோய்ந்திருப்பதை எத்தனை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார்கள்! பசுபதியும், பார்வதியையும் எத்தனை அற்புதமாக புடைப்புச் சிற்பத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
கட்டுமலை மேலே சிறு பிராகாரம் அமைத்திருக்கிறார்கள். சிங்க உருவங்களும், யாளி வரிசைகளும் அணிவகுப்பாக அமைந்திருக்கின்றன. வாழைப்பூ தொங்கல்களும், அதை மூக்கால் கொத்தும் கிளிகளையும் தோரணமாக்கியிருக்கிறார்கள். இந்த பூவுலகையே மறக்கடித்து தேவலோகத்தில் இறங்கிவிட்டோமா என்ற அளவுக்கு தெய்வச் சிலாமூர்த்திகளை அநாயாசமாகச் செதுக்கி இருக்கிறார்கள்.

- கிருஷ்ணா
படங்கள்: சி.எஸ். ஆறுமுகம்