சமாதான வாழ்க்கை என்பது பூமியின் இயல்பே அல்ல



மகாபாரதம்

‘‘அந்தணரே, நான் அவனை அடக்க முடியாமல் புத்திர பாசத்தால் தவிக்கிறேன். அவன் கெஞ்சும் போதும், மிஞ்சும் போதும் அவன் இழுத்த இழுப்புக்குத்தான் போகிறனே தவிர, அவனுக்கு எதிராகப் பேச எனக்கு மனம் வரவில்லை. என் பிள்ளை, என் பிள்ளை, அவன் சிறக்க வேண்டும், அவன் சிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்ன சொல்கிறானோ அதை சரி என்று சொல்லி விடுகிறேன். பிள்ளை பாசம் தவறு என்று யாரும் உலகத்தில் சொல்லவில்லை. ஆனால், அது எனக்கு கொடுமையான விளைவுகளையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்று திருதராஷ்டிரன் கூறினான்.


வியாஸர் துரியோதனன் பக்கம் திரும்பினார். ‘‘போதும். ஆடியவரை போதும். இதோடு நிறுத்திக்கொள். இதற்கு மேல் ஒரு அங்குலம் நகராதே. இது உனக்கு மிகப் பெரிய கெடுதலை ஏற்படுத்தும். உன்னுடைய வம்சத்தை அழிக்கும், நான் சொல்வதை கேள். உனக்கு யார் புத்தி சொன்னாலும் மனதிற்குள் நுழைய மாட்டேன் என்கிறது. அத்தனை கடுமையாக ஒரு தீர்மானத்தில் இருக்கிறாய். இது உன்னுடைய விதி, உன் அழிவு எழுதப்பட்டுவிட்டது’’ என்று பயமுறுத்தினார்.

ஆனால், துரியோதனன் அசையாது அவரை பார்த்துக் கொண்டிருந்தான். ‘‘நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். எனக்குப் பின்னே வேறு ஒரு ரிஷி வருகிறார். மைத்ரேயர் என்று அவருக்குப் பெயர். அவர் பஞ்சபாண்டவர்களை சந்தித்து விட்டுத்தான் வருகிறார். பஞ்சபாண்டவர் களில் ஒருவனான பீமன் கிருமி என்று ஒரு அரக்கனை கொன்று போட்டதை பார்த்துவிட்டுத்தான் வருகிறார். அவர்களுடைய பலத்தை புரிந்துகொண்டு உன்னை எச்சரிக்க வருகிறார். என்னிடம் முறைப்பாக உட்கார்ந்ததுபோல அவரிடம் உட்கார முடியாது. அவர் கடுமையானவர்.

வேகமாக சபித்து விடுவார். பெரியவர்கள் பேச்சை கேட்பதில்லை. தந்தைக்கு கட்டுப்படுவதில்லை என்பதால் நாங்களெல்லாம் இங்கு நுழைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. மைத்ரேயரை பகைத்துக் கொள்ளாதே. அவர் சொல்வதைக் கேள். இனி உன் தலையெழுத்து’’ என்று விரக்தியாக சொல்லிவிட்டுப் போனார். அவர் சொன்னபடியே மைத்ரேயர் அரண்மனைக்குள் நுழைந்தார். எடுத்தவுடன் துரியோதனனை பார்த்துப் பேச ஆரம்பித்தார். ‘‘உள்ளே நுழைந்ததும் கேள்விப்பட்டேன். யுத்தத்திற்கு தயாராமே.

உனக்கு என்ன தெரியும், பீமனைப் பற்றி? உன்னால் கிருமியனை அடிக்க முடிந்திருக்குமா, கொல்ல முடிந்திருக்குமா? வெகு எளிதாக பந்தாடினான். சுற்றியுள்ள அந்தணர்கள் அந்த சண்டையை விவரித்தார்கள். கேட்டுவிட்டுத்தான் வருகிறேன். கிருமியன் இறந்து கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். முட்டாள் துரியோதனா, எவ்வளவு பெரிய படை திரட்டிக்கொண்டு போனாலும் அர்ஜுனனுக்கும், பீமனுக்கும் எதிராக உன்னால் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட முடியாது. அடிபட்டு சாவாய்.

பன்னிெரண்டு வருடங்கள் இருக்கின்றன. எங்கேயாவது போய் படுத்து புரண்டு கொண்டிரு. வாழ்க்கையை அனுபவி. அவர்களைத் தொடர்ந்து யுத்தம் செய்யப் போகாதே. மக்கள் மனதில் நீ ஒரு மோசமான அரசனாகக் கருதப்படுவாய். மக்களின் ஆதரவு இல்லாது எந்த அரசனும் அரசாட்சி செய்ய முடியாது. அது சிறந்து விளங்காது.’’ ஆனால், அவர் சொல்வதை துரியோதனன் காது கொடுத்துக் கேட்காமல் வேறுதிசை பார்த்தபடியும், காலால் பூமியை தேய்த்தபடியும் உட்கார்ந்திருந்தான். அவருக்கு கோபம் வந்தது.

கமண்டலத்திலிருந்து ஜலம் எடுத்து, எனக்கு எதிரே கால் ஆட்டிக் கொண்டிருக்கிறாயே உன் தொடைகள் பிளக்கப்படும் என்பது உறுதி என்று சபித்து அவன் மீது ஜலத்தை வீசி எறிய தயாராக இருக்க, திருதராஷ்டிரன் எழுந்து கை கூப்பி அவனை மன்னிக்கும்படி வேண்டினான். ‘‘தயவு செய்து இந்த சாபத்தை எடுத்து விடுங்கள்,’’ என்று கெஞ்சினான். ‘‘பீமனை பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் என் சாபம் நிறைவேறாது. பீமனை பகைத்துக் கொண்டால் நிச்சயம் இவன் மரணம் தொடை பிளந்துதான் நடக்கும்,’’ என்று மைத்ரேயர் சொல்லி விட்டு அமர்ந்தார்.
துரியோதனன் அந்தச் சபையிலிருந்து வெளியேறினான். யார் எது சொன்னாலும் கேட்கக்கூடாத ஒரு மனோநிலையில் அவன் இருந்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் வீம்பாக இருந்தால் அதன் விளைவு தேசத்தையும், தேசத்து மக்களையும் பாடாய்படுத்தும்.

துரியோதனன் அஸ்தினாபுரத்து சாபம், கிர்னீர் என்ற அரக்கனை பீமன் கொன்ற விதம், மகாபாரதத்தில் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. அழகான காமியவனம் அடர்த்தியாக மனிதர்களுடைய நடமாட்டம் இன்றி இருந்தது. அந்த வழியே வருகின்ற மனிதர்களை, தபஸ்விகளைகிர்னீர் என்ற அரக்கன் அடித்து, கொன்று சுவைத்து தின்னும் பழக்கமுடையவன். நள்ளிரவில் மிருகங்களை வேட்டையாடி அதை ருசித்து தின்கிறவன்.

தடேரென்று அந்த அரக்கன் பஞ்சபாண்டவர்கள் முன்பு தோன்றினான். அவன் உருவத்தைக் கண்டு திரௌபதி கண்களை பொத்திக் கொண்டாள். ‘‘யார் நீங்கள்?’’ என்று கிர்னீர் அவர்களை கேட்டான். பதிலுக்கு, ‘‘நீ யார் என்று சொல். உன்னை அறிமுகப்படுத்திக் கொள்’’ என்று தர்மர் சொல்ல, ‘‘நான் மதன் என்ற அரக்கனுடைய சகோதரன். இந்தக் காடு என்னுடையது. எனக்கு எதைப் பற்றியும் பயம் இல்லை. இங்கு வருகின்ற அத்தனை பேரையும் நான் அடித்துக் கொல்கிறேன்.

எனக்குத் தோல்வி என்பதே இல்லை’’ என்று கொக்கரித்தான். அவன் சிரிப்பில் மிருகங்கள் பயந்து ஓடின. மாயையான விஷயங்களை அவன் செய்யத் துவங்கினான். அவன் ஆட்டத்தை பஞ்சபாண்டவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் யார் என்று கேட்க, தர்மர் தன் குல, கோத்திரங்களைச் சொன்னார். ‘‘இவன்தான் பீமனா? அந்தண வேடம் பூண்டு, என்னுடைய சகோதரன் பகாசூரனை கொன்றவன் இவன்தானா? இவனை கொல்ல வேண்டுமென்றுதான் நான் காத்திருந்தேன். இவன்தானே என்னுடைய நண்பன் ரம்பனை கொன்றது? இவனை வஞ்சம் தீர்க்க நான் அலைந்தேன்.

என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது தானாக வந்து சிக்கிக் கொண்டான். வா வா’’ என்று பீமனை சண்டைக்கு அழைத்தான். பீமன் தன்னுடைய கைகளை விரித்தான். பெரிய மரத்தை பிடுங்கினான். இலைகளை உதிர்த்தான். மரத்தோடு முன்னேறினான். மல்யுத்தத்திற்கு தயாராக இருந்தான். மிகக் குரூரமான சண்டை துவங்கியது. அத்தனையும் தாங்கி கிர்னீர் எழுந்து நிற்க, மிகப் பலமான அடியை தலையில் கொடுத்தான். தலை சுற்றி கிர்னீர் கீழே விழ, அவன் இடுப்பை பற்றி மேலே தூக்கி வேகமாக சுழற்றத் துவங்கினான்.

அடியின் வலி தாங்காது தலைசுற்றிக் கிடந்த கிர்னீர் இப்பொழுது இன்னும் விரைவான இந்த சுழற்றலால் மூர்ச்சையானான். மேலே, உயரே தூக்கி தரையில் பலமுறை மோதி பீமன் கிர்னீரைக் கொன்றான். சகோதரர்கள் வியந்து பார்ப்பதும், அதையெல்லாம்விட தன்னுடைய மனைவி தன் வீரத்தை ஆச்சரியத்தோடு நோக்குவதும் அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தன. வீரம் என்பது மனிதர்களுடைய இயல்புகளில் ஒன்று. காமம், வெட்கம், சிரிப்பு, கோபம் போன்றவற்றில் வீரமும் ஒன்று. ஆழத்தில் பொதிந்து இருப்பது.

தன்னைத் தாக்க வருகின்ற ஒரு கெடுதலிலிருந்து தப்பித்துக்கொள்ள, தொடர்ந்து உயிர் வாழ எல்லா உயிரினமும் முயற்சி செய்யும். சனாதன தர்மத்தின் ஒரு பகுதியாக வீரம் என்பதும், கெட்டவர்களை அழிப்பது என்பது கடவுள் செயலாகவும், மன்னர்களுடைய கடமையாகவும், மனிதர்களுடைய இயல்பாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக எப்பொழுதும், எல்லா இடத்திலும் சமாதான வாழ்க்கை என்பது பூமியின் இயல்பே அல்ல. அது பூமியின் இயல்புக்கு எதிரானது. இந்த பூமி துவந்தமயமானது. இரண்டானது. மேல், கீழ், இடது, வலது, நல்லது, கெட்டது என்று பிரிவுபட்டிருப்பது.

எது பிரிவுபட்டாலும் ஒன்றை ஒன்று தாக்கும் என்பது அடுத்த விதி. ஒன்றை மற்றொன்று அழிக்கச் செய்யும் என்பது தொடர்ந்த விதி. தன்னை நிலைநாட்டிக்கொள்ள விரும்பும் இயல்பு இந்த பூமியில் நிரந்தரம். விரட்டி வருகிறவனை சமாதானம் பேசுவது என்பது கோழைத்தனம். அப்படி சமாதானம் பேசுவதற்கு பதில் அடிபட்டுச் செத்துப் போகலாம். மறுபடியும் பலத்தோடு பிறக்கலாம். தொடர்ந்து நடைபெற்றுத்தான் ஆகவேண்டும். யுத்தம் மரணத்தால் ஓய்வதில்லை.

சூதில் தோல்வியுற்றாலும் பஞ்ச பாண்டவர்களுடைய வீரம் தோற்கவில்லை. இதற்கு அடுத்தபடி காண்டீபத்தை வளைத்து அம்பு தொடுக்க அர்ஜுனன் காத்திருந்தான். ஆனால், அர்ஜுனனுடைய அம்புக்கு வேலை இல்லாமல் பீமன் கொன்று தீர்த்தான். இந்த விஷயம் திருதராஷ்டிரனுக்கு சொல்லப்பட்டது. திருதராஷ்டிரன் கவலையானான். அவர்கள் பலம் இழக்கவில்லை. அவர்கள் துவண்டுபோய் விடவில்லை.

சூதில் தோற்றாலும் அவர்கள் தங்கள் கீர்த்திகளை இழக்கவில்லை என்று தெரிந்தபோது அவனுக்கு சுரம்போலும் பயம் ஏற்பட்டது. சுருண்டு உட்கார தோன்றியது. தன் மகனின் அழிவு காலம் பற்றிய மிகப்பெரிய கவலை அவனை தாக்கியது. பஞ்ச பாண்டவர்களுடைய தோல்வி என்பது தோல்வியாக இல்லாமல் எடுத்தவுடனேயே ஒரு அரக்கனை கொன்று போடுகின்ற வெற்றியாக மாறியது. எனவே, நமக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல. இது ஒரு திசை திருப்பல். இது வேறு ஒரு அனுபவம். பல வனங்களை கடந்து நாம் போகவேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர்கள் வடக்கே இருந்து மேற்கே திரும்பி நடந்தார்கள்.

அதற்குப் பெயர் வனம். அந்த வனத்திற்குள்ளே யுதிஷ்டிரர் சகோதரர்களோடும், மனைவியோடும் குடிபுகுந்தபோது அவருக்கு நேர்ந்த துக்கத்தை கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக பாஞ்சால ராஜகுமாரன் திருஷ்டத்யும்னன், சேதி ராஜன், திருஷ்டகேசி, கேகய ராஜ குமாரர்கள் எல்லோரும் மிகுந்த கோபத்தோடு துரியோதனனையும், துச்சாதனனையும், கர்ணனையும் கண்டபடி ஏசிக்கொண்டு, கிருஷ்ணர் வருவாரா, எங்கிருக்கிறார் என்ற கேள்விகளோடும், புலம்பல்களோடும் வந்து சேர்ந்தார்கள். துக்கத்தால் அழுதார்கள்.

துக்கம் பெரிதல்ல என்பது மட்டுமல்ல, என் துக்கத்திற்காக எல்லாம் வல்ல கிருஷ்ணா நீ துக்கப்படாதே என்ற மகத்தான பிரேமை இங்கு வெளியாகிறது. பல அவதாரங்களை, பல வெற்றிகளை, பல இடங் களில் சண்டையிட்டு ஜெயித்ததை, செய்த யக்ஞங்களை, செய்த தான தர்மங்களை அவன் வரிசைப்படுத்தினான். கிருஷ்ணர் மனம் குளிர்த்தார். அந்தக் கடவுள், அந்த கிருஷ்ணர், அர்ஜுனனுடைய அபிமானத்தில் கோபம் தணிக்கும் செயலில் மனம் ஈடுபட்டவராய் மிகப்பெரிய வார்த்தைகளைச் சொன்னார். ‘‘பார்த்தா, நீ என்னுடையவன். நான் உன்னுடையவன். என்னுடையவர்கள் யாரோ அவர்கள் உன்னுடையவர்களுமாவார்.

உன்னிடம் துவேஷம் கொண்டவர், என்னிடம் துவேஷம் கொள்வராவார். உனக்கு அனுகூலமானவன் எனக்கு அனுகூலமாவான். ஹே வீரா, நீ நரன், நான் நாராயணன். நான் ஹரி. இச்சமயம் நாம் இருவரும் நர நாராயணரே. இப்புவிக்கு வந்திருக்கிறோம். குந்தி மைந்தா, நீ என்னுள்ளிருந்து விலகி இல்லாதவன். நான் உன்னிலிருந்து தனித்து இல்லை. நம் இடையே பேதமே கிடையாது’’ என்று ஆசீர்வதித்தார்.

‘‘உன்னுடைய கோபத்தைத்தான் நான் என்னுடைய கோபமாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய துக்கத்தால்தான் நான் துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னார். அதற்கு என்ன காரணம்? நீயும், நானும் பிரிக்க முடியாதபடி இந்தப் புவியில் பிறந்திருக்கிறோம். ஒரு செயலுக்காக பிறந்திருக்கிறோம்,’’ என்பதை மிக சூட்சுமமாகச் சொன்னார். தீர்வு எதுவும் இல்லை. சொடுக்கு நேரத்தில் மாயாஜாலம் இல்லை. ஒரு துரும்பை எடுத்துக் கிள்ளி துரியோதனன் ஒழிக என்று போடவில்லை.

வனவாசம் அனுபவி என்பது போலத்தான் அவருடைய பேச்சு இருந்தது. என்ன செய்வது என்பது போலத்தான் அவருடைய ஆறுதல் இருந்தது. திரௌபதி விடவில்லை. கேட்டாள். ‘‘எங்கே போனீர்கள்? உங்களுக்காக கதறினேன். என்னை நீங்கள் காப்பாற்றியிருக்க வேண்டாமா? நான் உங்கள் சகோதரி. உங்கள் பக்தை. நான் அக்னியிலிருந்து பிறந்தவள், என்னை நீங்கள் காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்னை நீங்கள் ரட்சித்திருக்க வேண்டாமா, ஏன் என்னை புறக்கணித்தீர்கள்? ஏன் வரவில்லை.

ஏன் என்னை அவமானப்படுத்தியவர்களை வதம் செய்யவில்லை? எதனால் அந்த அலட்சியம், எனக்கு ஏன் இந்த பாபம்?’’ என்று கதறினாள். அங்குள்ள க்ஷத்ரியர்கள் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நடுசபையில் கூந்தல் பற்றப்பட்டு தரதரவென்று இழுத்துப் போகப்பட்டேன். பயத்தால் நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். அத்தனைப் பெரிய சபையில் எனக்கு ஒருவர் கூட ஆதரவாக இல்லையென்று குமைந்து கொண்டிருந்தேன்.

அந்த காரணங்களால் ரத்தப் பெருக்கு அதிகமாயிற்று. தொடைகள் நனைந்தன. இதையெல்லாம் பார்த்து கர்ணன் சுட்டிக் காட்டி வாய்விட்டுச் சிரித்தான். ஒரு பெண்ணுக்கு இது எவவ்ளவு பெரிய அவமானம் தெரியுமா கிருஷ்ணா? கருவை தாங்குவதற்குண்டான விஷயம்தான் இது. இதில் கேலி செய்ய எதுவும் இல்லை. ‘உன்னை எப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறான் பார்த்தாயா!’ என்பதுதான் கர்ணனுடைய சிரிப்பாக இருந்தது. துரியோதனனுக்கு அது உவப்பாக இருந்தது. துச்சாதனன் மூடனைப்போல சேலையைப் பிடித்து இழுத்தான்.

இவையெல்லாம் என் சகோதரர்கள் முன்பும், க்ஷத்ரியர்கள் முன்பும், உன் முன்பும் நான் சொல்லி அழவேண்டியிருக்கிறதே, இது இன்னமும் மோசமான நிலைமை. நான் மாதவிலக்காக இருக்கிறேன் என்று சொல்ல பெண் பிரியப்படுவதேயில்லை. அவள் பிறர் கண்களுக்கு அகப்படாமல் ரகசியமாக மறைத்துவிடுகிறாள். ஆனால், இப்பொழுது என் நிலைமையைப் பார். நான் என் கணவர்களை வெறுக்கிறேன். அவர்கள் கையாலாகாதத்தனத்தை நிந்திக்கிறேன்.

ஆனால், உன்னை நோக்கி கதறு கிறேன். எனக்கு ஏன் இத்தனை வேதனை? மிக வலிமையுள்ள பாண்டவர்களுடைய மனைவியே இப்படிப்பட்ட சித்ரவதைக்குள்ளானபோது சாதாரண பெண்களின் கதி என்ன, என்பது அவளுடைய பேச்சில் தொக்கி நிற்கிறது. பெண்களை பதறடிப்பதும், பயப்படச் செய்வதும் அவர்கள் கதறி அழும்படி துன்புறுத்துவதும் ஒரு தேசத்தின், ஒரு குலத்தின் அழிவுக்கு வித்தாகிறது. பெண் அபலை. அவள் அழக்கூடாது என்பதே தர்மசாஸ்திரம். அவள் துன்புறுத்தப்படக்கூடாது என்பதே நாகரிகத்தின் நோக்கம்.

ஒரு தனித்த வனத்தில் கடவுளைப் போன்ற கம்பீரம் மிக்க ஒரு மனிதரின் முன்பு தன்னுடைய சகோதரர்களும், புருஷர்களும் இருக்க, எவருமே காப்பாற்றவில்லையே என்று திரௌபதி அழுதது, அங்குள்ளோரை நாணமுறச் செய்தது. எல்லோரிடமும் ஒரு கையாலாகாதத்தனம் இருந்தது. ஏன்,  கிருஷ்ணனிடமும் இருந்தது. திரௌபதிக்கு அவர் சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ‘‘நான் வராதது உண்மைதான் திரௌபதி. அதற்குக் காரணம் இருக்கிறது. துவாரகையை தாக்கி அதை சின்னாபின்னப்படுத்த சால்வன் என்கிற அரசன் முயற்சி செய்ததால் அவனை தடுப்பதற்காக முழு வேகத்தில் வேறு எந்த சிந்தனையும் இன்றி நான் போர்புரிய வேண்டியதாயிற்று.

அவனை சக்ராயுதத்தால் கொன்றேன். மிகப்பெரிய விமானம் வைத்து அதிலிருந்து அஸ்திரங்களை அவன் பிரயோகம் செய்து கொண்டிருந்தான். துவாரகா புரியை தரைமட்டமாக்க வேண்டுமென்று நினைத்தான். தைவதம் என்கிற அந்த விமானத்தை உடைத்து, அவனையும் கொல்ல நான் துரத்தித் துரத்திப் போக வேண்டியதாயிற்று. மாயாஜாலம் காட்டினான். எதிரே இருந்தான். மறைந்தான். தொடரவரச் செய்தான். நான் தொடர்ந்து போகும்போது, நான் இல்லாத துவாரகா புரியை கடுமையாகத் தாக்கினான். சற்று கவனம் திரும்பினால்கூட அவன் துவாரகபுரியை அழித்திருப்பான். என் மக்கள் வேதனைப்பட்டிருப்பார்கள்.

என்னுடைய முதன்மையான காரியமாக துவாரகபுரியை காப்பதும், சால்வனை கொல்வதுமாக இருந்தது.’’ அவர் திரௌபதி மானம் காத்தது பற்றி, புடவையாக அவளிடம் தன் சக்தியை செலுத்தியதுபற்றி கிருஷ்ணரும் சொல்லவில்லை. திரௌபதியும் அதை அவருக்கு முன் நன்றியோடு பேசவில்லை. இதைத் தாண்டி நிகழ்ந்த நிகழ்வுகள்தான் அங்குள்ள அனைவரையும் வேதனையுறச் செய்தன.

ரத்தக்கறையோடு கூந்தல்பற்றி தரையில் இழுத்து வந்த வேதனைதான், இழித்ததுதான், தொடைதட்டிக் காண்பித்ததுதான், நீ எல்லோருக்கும் தாசி என்று சொன்னதுதான், பெரும் சிரிப்பு சிரித்ததுதான், அவை எல்லாவற்றையும் பஞ்சபாண்டவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் முக்கியமாக இருந்தது. திரௌபதி தன் புலம்பலை நிறுத்தவில்லை. என்ன நடக்கிறது இங்கே? ஆரம்பத்திலிருந்து இடையறாது எத்தனை விதமான துன்பங்களை இந்த துரியோதனன் கொடுத்திருக்கிறான்!

பீமன் தன்னுடைய கைகளை விரித்தான். பெரிய மரத்தை பிடுங்கினான். இலைகளை உதிர்த்தான். மரத்தோடு முன்னேறினான். மல்யுத்தத்திற்கு தயாராக இருந்தான். மிகக் குரூரமான சண்டை துவங்கியது.

இவன்தானே என்னுடைய நண்பன் ரம்பனை கொன்றது? இவனை வஞ்சம் தீர்க்க நான் அலைந்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது தானாக வந்து சிக்கிக் கொண்டான். வா வா’’ என்று பீமனை சண்டைக்கு அழைத்தான்.

(தொடரும்)