யார் அவர் சம்மோஹனப் பெருமாள்?



-சேலம்

மகாவிஷ்ணு வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் ஏகாந்தமாகப் பேசிக்கொண்டு தனக்கு மரியாதை செய்யாததால் கோபம் கொண்ட பிருகு முனிவர், மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். இதைப் பார்க்க சகிக்காத தாயார் கோபித்துக் கொண்டு சென்றுவிட, விஷ்ணு, பிருகு முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரை சக்தி இழக்கச் செய்தார். தவற்றை உணர்ந்த முனிவர் தன்னை மன்னிக்கும்படி வேண்ட, தாயாரை நினைத்து தவம் இருந்தால் தவறு மன்னிக்கப்படும் என விஷ்ணு அறிவுரை கூறினார்.



அதன்படி முனிவர் இத்தலத்தில் வில்வ மரத்தடியில் தவம் இருந்தார். ஒருநாள் அந்த வில்வ மரத்தடியில் அழகிய பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதைக் கண்டு, குழந்தைக்கு யாரும் உறவு இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு தன்னுடன் அழைத்துச் சென்றார். அதற்கு சுந்தரவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். பின்னாளில் அவ்வாறு தன்னால் வளர்க்கப்பட்டு வரும் குழந்தை மகாலட்சுமிதான் என்பதைத் தெரிந்துகொண்டார்.

அவளை மணம் முடிக்கும் உரிமை பெருமாளுக்கு மட்டுமே உள்ளது என்பதையும் புரிந்துகொண்டு, விஷ்ணுவை வேண்டிக்கொண்டார். அவர் கோரிக்கையை ஏற்ற பெருமாள் ‘அழகியநாதராக’ வந்து தாயாரை இத்தலத்தில் மணந்து திருமணக்காட்சி கொடுத்து அருளினார். முனிவரின் வேண்டு கோளின்படி இருவரும் இத்தலத்தில் தங்கி விட்டனர். ஸ்ரீ என்ற மகாலட்சுமி குழந்தையாக பிறந்த தலம் என்பதால் ‘ஸ்ரீசைலம்’ எனப்பட்ட இவ்வூர், மருவி பிற்காலத்தில் ‘சேலம்’ என அழைக்கப்பட்டு வருகிறது.

இத்தலத்தில் அழகியநாதரின் அழகைக் கண்ட ஆஞ்சநேயர் மெய் மறந்துவிட்டார். அப்படியே சிலையாக உறைந்துவிட்டாரோ என்று வியக்கும்படியாக சுவாமிக்கு எதிரே 8 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயராக தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார். பிரம்ம பட்டம் பெறுவதற்காக ஆஞ்சநேயர் இவ்விடத்தில் பெருமாளை வணங்கியதாகவும் ஒரு புராணச் செய்தி கூறுகிறது.

இத்தல விமானத்தில் கிருஷ்ணரும், லலிதாம்பிகையும் இணைந்த சம்மோஹனப் பெருமாளைக் காணலாம். மிகவும் வித்தியாசமான அமைப்பு இது. வைணவ அம்சமும், சைவ அம்சமும் இணைந்த ‘அர்த்தநாரீஸ்வர’ தோற்றம்! ஆதிசேஷன் மீது அமர்ந்துள்ள நரசிம்மரை சுமக்கும் கருடாழ்வார் இன்னொரு அபூர்வமான அழகிய சுதை சிற்பம்! வேறு எந்த வைணவ திருத்தலங்களிலும் இது போன்ற சிற்பங்கள் காணக் கிடைக்காது!

சுவாமிக்கு வலப்புறம் தாயார் யோக பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆதியில் இத்தலத்தில் இருந்த வேணுகோபாலர் தனிச்சந்நதியில் உள்ளார். மூலவர் அழகியநாதர் எதிரே கருடன், கொடிக்கம்பம் ஆஞ்சநேயர் சந்நதி என வரிசையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தகுந்த சிறப்பாகும்.

- எஸ்.பவித்ரா