வேலவன் வில்லேந்தியது ஏன்?-சித்ரா மூர்த்தி

சப்தஸ்தானக் கோயில்கள் பற்றிப் பார்த்தோம். சப்தரிஷிகளும் இத்தலங்களில் ஆசிரமங்கள் அமைத்து ஈசனைப் பூசித்தனர். அவர்கள்: கண்டியூர் - காஸ்யபர்; பூந்துருத்தி - கௌதமர்; சோற்றுத்துறை - ஆங்கிரசர்; பழனம் - குத்ஸர்; திருவேதிகுடி - அத்திரி; நெய்த்தானம் - பிருகு; ஐயாறு - வசிட்டர். ஐயாறப்பர், நந்தி-சுயம்பிரகாசை தம்பதியை அழைத்துக் கொண்டு, அவர்கள் முனிவர்களின் ஆசியைப் பெற வேண்டி இவ்வேழு ஆசிரமங் களுக்கும் சென்றார் என்பது புராணம். இதை ஏமூர் விழாவாக முதலில் கொண்டாடியவர் ராஜராஜ சோழனின் மனைவியான ஓலோகமாதேவி. ஆதலால் கோயிலிலுள்ள வடகயிலாயம் ஓலோக மாதேவீச்சரம் என்றும், சோமாஸ்கந்தர், ஓலோக மாவீதிவிடங்கர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


காவிரியின் வடகரைத்தலமான திருவையாறு சப்தஸ்தானங்களுள் முதன்மையானது. ‘‘‘ஐ’ என்றால் சுபம் என்று பொருள். மனிதனின்
இறுதிக்காலத்தில் இது நெஞ்சில் தங்கி மூச்சை அடைக்கும்போது அஞ்சேல் என அபயம் தந்து அப்பன் ஆறுதலளிக்கிறான். இதையே ‘‘ஐயாறு வாயாறு பேசாமுன் ஐயாறு வாயால் அழை’’ என்பார் ஐயடிகள் காடவர் கோன்’’ என்று வித்தியாசமாக விளக்கம் அளிக்கிறார் தமிழ்ப்பேராசிரியர் சுவர்ண காளீஸ்வரன். சம்பந்தப்பெருமானது ஐயாறு பாடலும் இத்துடன் ஒத்து வருகிறது.

‘‘புலன் ஐந்து பொறி கலங்கி நெறி மயங்கி
அறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி
அலமந்தபோது அஞ்சேலென்று அருள்
செய்வான் அமரும் கோயில்’’
பட்டினத்தடிகள் கூறுகிறார்:
‘‘மண்ணும் தணலாற, வானும் புகையாற,
எண்ணரிய தாயும் இளைப்பாற, பண்ணும் அயன்
கையாறவும், அடியேன் காலாறவும் கண்
பார் ஐயா திவையாறா’’

பொருள்: இம்மண்ணுலகமும் எனது கணக்கற்ற உடல்களைச் சுட்டதால் ஏற்பட்ட வெம்மை தணியும்படியும், இந்த வானமும் என் உடம்புகளைச் சுடுவதால் எழுந்த புகை நீங்கித் தூய்மை உடையதாய் ஆகுமாறும், பல பிறவிகளில் என்னைப் பெற்ற தாய்மார்களும் இளைப்பாறும்படியும், எனக்கு எண்ணற்ற உடல்களைப் படைக்கின்ற நான்முகனும் தம் கைகளை இளைப்பாறுமாறும், அடியேனின் கால்கள் இளைப்பாறுமாறும் என்னைக் கடைக்கண் பார், ஐயா! ஐயாறப்பனே!’’ திருவையாறு - கால் தேய நடந்து கயிலை சென்று கொண்டிருந்த அப்பரைத் தடுத்தாட்கொண்டு ஆடி அமாவாசையன்று ஈசன் கயிலைக் காட்சி தந்த திருத்தலம்;

சுசரிதன் எனும் சிறுவனை யமனிடமிருந்து விடுவித்து ஜோதி சொரூபராய் அவனை ஆட்கொண்ட தலம்; (ஆட்கொண்டார் எனும் தனிச்சந்நதி உள்ளது. இவர் காலின் கீழே யமன் கண்கள் பிதுங்க, நா தொங்க, உடல் நடுங்கக் கிடக்கிறார்.) இறைவன் தந்த இரு நாழி நெல்லால் அம்பிகை 32 அறங்களை வளர்த்த திருத்தலம்;

தியாகப் பிரம்மத்தின் இசைக்கு மயங்கி ராமன் அவருக்குத் தரிசனமளித்த இடம். சிலாத முனிவருக்குக் குழந்தையாக நந்திதேவரைத் தோன்றச் செய்து, வியாக்ரபாதரின் மகள் சுயம் பிரகாசையை (சுயஸாம்பிகை என்றும் கூறுவர்) திருமழபாடியில் திருமணம் செய்து வைத்தார் இத்தல நாயகனான ஐயாறப்பர். சேரமான் பெருமானும், சுந்தரரும் இங்கு வந்தபோது காவிரி பெருக்கெடுத்து ஓட, ‘‘பரவும் பரிசொன்றறியேன் பண்டே உம்மைப் பயிலாதேன்’’ என்று துவங்கி சுந்தரர் பதிகம் பாட, ஈசன் வெள்ளத்தை ஒதுக்கி வழிவிடச் செய்தார். எதிர்க்கரையிலிருந்த விநாயகர் ஓலம் ஓலம் என்று அபாயக்குரல் கொடுத்ததால் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலினுள் நுழைந்ததும் இடப்புறம் உள்ள மயில் மண்டபத்தை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் எதிரே நூற்றுக்கால் மண்டபம். உள்ளே ஞான தண்டபாணி கோயில் அமைந்திருக்கிறது. பூஜை வேளையில் மட்டுமே சந்நதி திறக்கப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் பிருத்வி லிங்கமான ஐயாறப்பரைத் தரிசிக்கிறோம். கருவறையை ஒட்டிய முதல் பிராகாரத்தில் அறுபத்து மூவரையும், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம்.குருவின் மேல் நோக்கிய வலது கையில் கபாலம்.

கீழ் நோக்கிய வலது கை சின் முத்திரை காட்டுகிறது. மேல் நோக்கிய இடக்கையில் சூலம், கீழ் நோக்கிய இடக்கையில் சிவஞான போதம், திருவடியின் கீழ் ஆமை. உ.வே.சாமிநாத அய்யர், இவரை சுரகுரு தட்சிணாமூர்த்தி எனக் குறிப்பிடுகிறார். ஆனால், கோயிலில் ஹரிகுரு தட்சிணாமூர்த்தி என்று எழுதப்பட்டுள்ளது. (திருவீழிமிழலையில் கண்மலர் கொண்டு அர்ச்சித்து சக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இங்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்ற புராண குறிப்பும் உள்ளது. அதனாலும் ‘ஹரி குரு’ என்றழைக்கப்படுகிறார் போலும்!)

ஞான குருவைத் தரிசித்துத் தொடர்ந்து கருவறையைச் சுற்றிவர இயலாதபடி வழி அடைக்கப்பட்டுள்ளது. இறைவனின் சடை கருவறைக்குப் பின்னும் விரிந்து கிடப்பதாக ஐதீகம். அதனால் அதை மிதித்துவிடக் கூடாது என்பதற்காக, சுற்றி வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சந்நதியைவிட்டு வெளியில் வரும்போது நந்தியெம்பெருமானையும், சுயஸம்பிகையையும் தரிசிக்கலாம்.

அடுத்த பிராகாரத்தில் அமைந்திருக்கிறது ஜெப்பேசர் மண்டபம். இறைவனால் இப்பெயர் சூட்டப்பட்ட நந்தி அமர்ந்து ஜபம் செய்த மண்டபம். இதுவே முத்தி மண்டபம் எனப்படுகிறது. நாகப்பட்டினம், காசி தவிர திருவையாறில் மட்டுமே முத்தி மண்டபம் உள்ளது. தியாகராஜ சுவாமிகளும் இங்கு அமர்ந்து பஞ்ச நதீஸ்வரர் மீது 4 கீர்த்தனைகளும், இறைவி தர்மசம்வர்த்தினி மீது 8 கீர்த்தனைகளும் பாடியுள்ளார்.

நான்காம் பிராகாரத்தில் வலம் வரும்போது தென்புறம் அப்பர் திருக்கயிலை காட்சி கண்ட வைபவத்தை நினைவூட்டும் ஒரு கற்கோயிலைக் காணலாம். இது தென்கயிலாயம் எனப்படுகிறது. கோயில் கோபுர வாயில் அவருக்குக் கயிலை மலையாகக் காட்சி தர, மனமுருகி,

‘‘மாதர் பிறைக் கண்ணியான மலையான்
மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்
பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற
போது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன
கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியா
தன கண்டேன்’’

- எனப் பாடி நெகிழ்ந்திருக்கிறார் அப்பர் சுவாமிகள். கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நதிகள் உள்ளன. திருவோடு மரம் என்று ஒரு மரம் உள்ளது. இறைவன் சந்நதிக்குப் பின்புறமுள்ள கோஷ்டத்தில் உமையை வலப்பாகம் கொண்டு விளங்குகிறார் அர்த்தநாரீஸ்வரர். மூன்றாம் பிராகார மதிற்சுவரின் கோடியில் நின்று ‘ஐயாறா’ என்று உரக்கக் கூவினால் ஏழு முறை எதிரொலிக்குமாம். திருவையாறு கோயிலிலுள்ள முருகன், தனுசு சுப்ரமண்யன் எனப்படுகிறான். மயில், சுவாமியின் வலப்புறத்திலுள்ளது. ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்ட முருகன் கிழக்கு நோக்கி தேவியருடன் நிற்கிறான்.

முருகன் கையில் வில் இருப்பது பற்றி ‘சுப்ரமண்ய பராக்ரமம்’ எனும் நூல் விவரிக்கிறது. வனவாசம் முடிந்து திரும்ப வருவேன் என்று சொல்லிச் சென்ற ராமன், யுகங்களாகியும் திரும்பவில்லையே என்று ராமனின் பிரிவாற்றாமையால் குகன் மிகவும் துயருற்றிருந்தான். வள்ளி - தெய்வயானையரை, சீதா - லட்சுமணனாகவும், தன்னை ராமராகவும் (கோதண்டராமன்) உருமாற்றி, குகன் கனவிலே தோன்றிய சுப்ரமண்யப் பெருமான் நடந்தவையனைத்தையும் நாடகமாக நடத்திக் காட்டினான். அது கண்டு குகன் மிகவும் சாந்தமடைந்தானாம்.

‘‘சுந்தரச் சிலை இராமன் தோற்றமும் காட்டி,
ஞான
முந்திய பிரமானந்த சித்தியும் கொடுத்து
வேத
மந்திர குக சுவாமி என்னவும் வாய்ந்த பேர்
ஆனந்த நாயகனென்று ஓது நாமமே குமரன்
பெற்றான்’’

- என வரும் செய்யுளால் இதை அறியலாம். வில்லேந்திய வேலனைக் கண்டதும் அருணகிரியாருக்கு ராமாயணக் காட்சிகள் மனக்கண் முன் நிழலாடின போலும், பின்வருமாறு பாடுகிறார்:

‘‘கரிய மேனியன் ஆனிரை ஆள்பவன்
அரி, அரா அணை மேல் வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாள் அரி கனமாயக்
கபடன், மாமுடி ஆறுடன் நாலுமொர்
கணையினால் நில மீதுற நூறிய
கருணை மால் கவி கோப கிருபாகரன்
மருகோனே
திரிபுராதிகள் தூளெழ வானவர்
திகழவே முனியா அருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதி இலாதவர் தருசேயே
சிகர பூதர நீறு செய் வேலவ,
திமிர மோகர வீர திவாசுர,
திருவையாறுறை தேவ, கிருபாகர,
பெருமாளே!’’

- என்பது திருவையாறு திருப்புகழ். கருத்து: ‘‘கருமை நிறத்தவனும், பசுக்கூட்டத்தை மேய்த்து ஆள்பவனும், பாம்பணை மேல் துயில் கொள்ளும் திருமாலும், ெபான்னிறத்தனான இரணியனுடைய மார்பைக் கிழித்த ஒளி வீசும் நரசிங்கமும், ராவணனது பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலமீது விழும்படித் தூளாக்கியவனும், (கவி)வாலி எனும் குரங்கைக் கோபித்து அழித்தவனும், கருணாகரனும் ஆன திருமாலின் மருமகனே!

திரிபுர அரக்கர்கள் சாம்பலாகுமாறும், தேவலோகத்தவர் வாழுமாறும், திரிபுராதியரைக் கோபித்து, தேவர்களுக்கு அருள்பாலித்தவரும், தேவிக்கு உடலின் பாதியை அளித்தவரும், சாதி என்பதே இலாதவருமான சிவபிரானின் குழந்தையே! சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி அழித்த வேலனே! இருளாகிய அஞ்ஞானத்தை நீக்க வல்ல வீரசூரியனே! திருவையாறில் வீற்றிருக்கும் தேவனே! கிருபாகரனே! பெருமாளே’’

கோயிலை வலம் வந்து, பர்வதவர்த்தினி, ராமநாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஜுரஹரேஸ்வரர், சண்டிகேசர், பிராணதார்த்திஹரர் ஆகியோரைத் தரிசித்து, ஆடல் வல்லானையும், சப்தஸ்தான லிங்கங்களையும் ஒரே இடத்தில் தொழுகிறோம். (மற்ற ஆறு இடங்களிலும் இதே போன்று சப்தஸ்தான லிங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது) தனிச்சந்நதியில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தி னியைத் தரிசிக்க, கோயிலுக்கு வெளியே போகும் வழியிலுள்ள விக்ரம சோழ கோபுரத்தருகே வர வேண்டும்.

மேற்புறம் காணப்படும் அலங்கார வளைவு வழியே தர்மசம்வர்த்தினியைத் தரிசிக்கச் செல்லலாம். தமிழில் அறம் வளர்த்த நாயகி என்று பெயர். இறைவன் அளித்த இருநாழி நெல்லால் முப்பத்திரண்டு அறம் வளர்த்த காரணத்தினால் அம்பிகைக்கு இப்பெயர். இதைக் காஞ்சியில் அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்:

‘‘கம்பையினூடே, தவமுயன்றப் பொற்றப்படி
கைக்கொண்டு,
அறம் இரண்டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
தலைவி’’
‘‘குறைவற முப்பத்திரண்டறம் புரிகின்ற
பேதை’’

தெருவிலிருந்து நேரடியாகவும் அம்பிகை சந்நதிக்குள் வரலாம். நவராத்திரி மண்டபம், நந்தி மண்டபம் கடந்து விசாலமான உட்பிராகாரத்தை அடைகிறோம். திரிபுரசுந்தரி, சரபேஸ்வரர், முருகன், விநாயகர் ஆகியோரை வணங்கி அம்பாள் சந்நதிக்கு நேரே நின்று மெய்ம்மறக்கிறோம். கருணை கனிந்த நோக்குடன் நம்மைப் பார்த்து புன்முறுவல் பூக்கும் அன்னையின் தத்ரூப  உருவத்தை பிரமிப்புடன் கண்டு வியக்கிறோம். அம்பிகையின் கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. ஆம், இங்கு அம்பிகை விஷ்ணுரூபிணியாக இருக்கிறாள்! இடக் கீழ்க்கரத்தைத்ெதாடையில் ஊன்றி விஷ்ணுவைப் போலவே நிற்கும் அழகும், நளினமும், கம்பீரமும் கலந்த திருவுருவம்! பொதுவாக வெள்ளிக்கிழமையன்று பஞ்சநதீஸ்வரர் சந்நதிக்கு அருகில் ஒரு நிலைக்கண்ணாடி முன் மகாலட்சுமிக்கு அலங்காரங்கள் நடக்கும் என்றும், அவர் விஷ்ணுரூபிணியாக நிற்கும் தர்மசம்வர்த்தனியைத் தொழ வருகிறார் என்றும் தகவல் கிடைத்தது.

இரவு இருவருக்கும் ஒன்றாக தீபாராதனை நடத்தப்படுகிறது. எனவேதான் அப்பர் பெருமான் பாடுகிறார், ‘அரியல்லால் தேவியில்லை, ஐயன் ஐயாறனார்க்கே’ என்று! காஞ்சி காமாட்சி, நாகை நீலாதாட்சி, ஐயாறு தர்மசம்வர்த்தினி இம்முவர் பேரில் மட்டுமே சங்கீத மும்மூர்த்திகளும் கீர்த்தனை இயற்றியுள்ளனர். கல்வெட்டுகளில், முற்காலத்தில் அன்னை, திருக்காம கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்றும், உலகுடை நாச்சியார் என்றும் குறிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ‘புவனமுழுதுடையான் வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாறு’ என்றும் இத்தலம் அழைக்கப்பட்டதாம்! அருணகிரியாருடன் அடுத்த தரிசனம் - திருப்பழனம்.

 (உலா தொடரும்)