சப்த மங்கைத் தலங்கள்





ஆடி மாதம் பிறந்துவிட்டாலே ஆன்மிகக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். முக்கியமாக ஆடி மாதத்தில் அம்பிகை தரிசனம் எல்லா நலன்களையும் வழங்கவல்லது. அந்த வகையில் அம்பிகையே சென்று தரிசித்த சப்த மங்கைத் தலங்களை இங்கே நாமும் தரிசிப்போம். இன்றும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சக்கராப்பள்ளி பெருமான் மற்றும் அம்பாளோடு, அநவித்யநாதசர்மா, அனவிக்ஞையுடன் தனிப் பல்லக்கில் எழுந்தருளி மற்ற ஆறு தலங்களுக்கு சென்று வருவதையே சப்த ஸ்தான பல்லக்கு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையைச் சுற்றியே இத்தலங்கள் அமைந்துள்ளன.

ஆதிசக்தியானவள், முதலில் இன்று சக்கராப்பள்ளி என்றழைக்கப்படும் தலத்திற்குள் நுழைந்தாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் சக்ரவாஹம் எனும் பறவை, இத்தல ஈசனை பூஜித்து தவமியற்றி தான் வணங்கும் ஈசனே தன்னை தன் முக்திப்பதம் சேர்த்துக் கொண்ட அற்புதத் தலமாகும். அதனாலேயே இத்தல இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் போற்றப்படுகிறார்.

ஆதிசக்தி இத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக் கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயைக் கலப்பேயில்லாத பூரண ஞானத்தை உணர்ந்தாள். ஈசனே நீக்கமற நிறைந்திருக்கும் மாபெரும் பேருணர்வை தனக்குள்ளும் தானாக நின்றுணர்ந்தாள். அருவமாக அத்தலத்திலேயே தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டாள். இது, சப்த மாதர்களில் ஒருவளான பிராம்மி பூஜித்த தலமாகும். சப்த மாதர்களும் சண்ட, முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை சாமுண்டியான காளி வதைப்பதற்கு சகல தேவர்களும் காளிக்கு உறுதுணையாக நின்றனர். மகாகாளியான சண்டிகைக்கு வேறொருவர் தயவு தேவையில்லையெனினும் ஒவ்வொரு தேவர்களிடமிருந்தும் ஒவ்வொரு சக்தி வடிவினிலும் ஒவ்வொரு மாதராக சப்த மாதர்களும் வெளிவந்தனர். ஒவ்வொரு தேவனுக்குரிய வடிவம், வண்ணம், வாகனம், ஆயுதம், ஆபரணம் இவற்றினூடே சக்தியும் தோன்றினாள். அப்படித்தான் பிரம்மனிடமிருந்து அவரது சக்தியான பிராம்மணி வெளிப்பட்டாள். அவள், மோட்ச நிலையை குறிக்கும் ஹம்ஸ விமானத்தில் அமர்ந்து வந்தாள். அப்பேற்பட்ட பிராம்மணி கையில் அட்சமாலையுடனும் கமண்டலத்தோடும் அமர்ந்து இத்தல ஈசனை பூஜித்துச் சென்றாள். அவள் அரக்கர்களை அழிக்கத்தான் ஆயுதங்கள் பெற்றுச் சென்றதாகவும் கூறுவர்.

அநவித்யநாதசர்மா தம்பதி இவ்வாறு ஆதிசக்தியும் பிராம்மணியும் தவமியற்றிய தலத்தில் நின்றனர். சக்ரவாகேஸ்வரரை தரிசித்துவிட்டு சக்ர மங்கையான தேவநாயகியைப் பார்த்தபோது, பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை (சிறுமி) வடிவினளாக அம்பாள் காட்சி தந்தாள். பெண்ணின் பருவப் பயணத்தின் முதல் அம்சமான பேதையாக சக்தி அங்கு நிலை கொண்டிருப்பதை உணர்ந்து
வணங்கினார். இது, திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, மிகப் பழமையான ஆலயம். கோயிலின் கருங்கற் சுவரில் சக்ரவாஹப் பறவை பூஜிப்பது போன்ற சிற்பம் நம்மை நெகிழ்த்துகிறது. ஈசன் சக்ரவாகேஸ்வரர் மூலவராக கருவறையில் பேரருள் புரிகிறார். தியானத்தில் மூழ்கிக் கிடக்கும் ரிஷியின் சாந்நித்தியத்தை அளித்து திகைக்க வைக்கும் சந்நதி அது. அம்பாளின் வலது திருவடி பக்தர்களை ரட்சிக்க புறப்படும் பரபரப்பு தோரணையாக சற்று முன்வைத்திருப்பது விசேஷமாகும். பிராகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் மீது ஐந்து தலை நாகம் குடைபிடிக்கிறது. அதன்மேல் ஆலமரம். கரங்களில் நாகாபரணமும் அணிந்து தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது வேறெங்கும் காணமுடியாததாகும்.
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ள அய்யம்பேட்டை எனும் ஊருக்கு அருகே இத்தலம் உள்ளது.



வைகுண்டத்திலிருந்து திருமாலை பிரிய நேரிட்ட திருமகள் இனி எப்போதுமே எம்பெருமானை விட்டு அகலக்கூடாது என்று புவியில் பல்வேறு தலங்களில் தவமியற்றினாள். ஹரிக்கு எப்போதுமே நெல்லிக்கனி உகந்தது. அதனால், மகாலட்சுமி அரி நெல்லிக் கனியை மட்டும் உண்டு இத்தலத்தின் சத்திய கங்கை தீர்த்தத்தில் ஈசனை நோக்கி அருந்தவம் புரிந்தாள். அந்த தவத்தை மெச்சுவதுபோல சௌகந்திகா எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலர் மலர்ந்தது. இது திருமாலுக்கு திருமகளின் இருப்பிடத்தை வழிகாட்டியதால், இந்த தாமரை காட்டிய பாதையே ஸ்ரீமார்கம் ஆயிற்று. ஸ்ரீ - திருமகள், மார்க்கம் - பாதை அதாவது திருமகள் இருக்கும் இடத்தைக் காட்டிய தலம் - ஸ்ரீமார்கநல்லூர். இன்று சிறுமாக்க நல்லூர், செருமாக்க நல்லூர் என்றானது. இவ்வூர் அரிமங்கைக்கு அருகேயே உள்ளது. சிறுமாக்க நல்லூர் வழியாக பாதயாத்திரையாக அரிமங்கைக்கு சென்று வந்தால் எளிதில் திருமகளின் அருள் கிட்டும் என்பர்.

  கயிலாயம், ஸ்ரீவைகுண்டம் போன்ற இரு திவ்ய தேசங்களும் ஒருமித்து முக்தியைத் தந்தால் எப்படியிருக்குமோ அத்தகையது இத்தலம். இங்கு ஸ்ரீஞானாம்பிகை, ஹரி முக்தீஸ்வரர் எனும் திருநாமங்களோடு இறைவனும் இறைவியும் அருள்கின்றனர். ஸ்ரீதேவிக்கு சம்பூர்ண மகாலட்சுமி என்றும் பூதேவிக்கு சிந்தூர பூமாதேவி என்றும் நாமங்கள். ஸ்ரீஉதீட்சராஜப் பெருமாள் உடன் அருள்பாலிக்கிறார். இவ்வாறு இவர்கள் தனிச் சந்நதிகளில் தரிசிப்பது அரிதான விஷயமாகும். தீட்சம் என்றால் பார்த்தல் என்று பொருள். உதீட்சம் என்றால் எப்போதும் இமை மூடாது நோக்கியபடியே இருத்தல். இப்பெருமாள் அப்படித்தான் இருக்கிறார். சதாசர்வ நேரமும் ஈசனும் திருமாலும் கருணையை பொழிந்தபடி இருக்கின்றனர். இவர்களின் மீது  அதீத பக்தி கொண்டு வருவோரை புண்டரீக மகரிஷி ஹரிஹர சின்முத்திரை பொறித்து மோட்சப் பாதைக்கு திருப்புகிறார் என்கின்றனர், சித்த புருஷர்கள்.

  பார்வதி தேவியானவள் சக்ரமங்கையை வழிபட்டு சப்தமாதர்களின் வழிகாட்டுதல்படி ஹரிமங்கை என்கிற இன்றைய அரிமங்கைக்கு வந்தாள். தலம் தொட்டதும் தமையனாரான விஷ்ணுவின் நினைவும் கூடவே வந்தது. ஆஹா... அண்ணனும் அரனை இங்கு வழிபட்டிருக்கிறாரே என்று மகிழ்ந்தாள். ஹரிமுக்தீஸ்வரர் எனும் சுயம்பு லிங்கத்தினின்று பொங்கும் பேரருளின் முன்பு அமர்ந்தாள். நெஞ்சு நிறைய நிம்மதி பரவ புஷ்பங்களை கொண்டு அர்ச்சித்தாள்.

  அம்பிகை தீவிர தவத்தில் எல்லையில்லா பெருஞ்சக்தியான ஈசனோடு கலந்தாள். ஈசன் மாபெரும் ஒளிக்கு மத்தியில் உச்சி சிரசில் கங்கை பொங்க காட்சியளித்தார். இன்றும் இத்தலத்தின் தீர்த்தமாக சத்திய கங்கைத் தீர்த்தம்தான் விளங்குகிறது. நேத்ர தரிசனம் ஞானாக்னி மயமானது. இந்த கங்கையோ தண்ணிலவான தெள்ளிய ஞானம் கொண்டவள். ஆனால், இரண்டும் ஞானத்தைத்தான் தரும். சப்த மாதர்களின் ஒருவளான மாகேஸ்வரி என்பவள் வழிபட்ட தலமிது. தேவி பாகவதம் கூறும் சண்டிகைக்கு உதவியாக வந்த மாதர்களில் இவள் இரண்டாமவள். கம்பீரமாக காளையின் மீதமர்ந்து வந்தாள். காளை ஈசனுக்கு உரியது. இவளும் மகேஸ்வரனிடமிருந்து உத்பவித்தவள்தான். எனவேதான் மாகேஸ்வரி ஆனாள். கையில் திரிசூலத்தோடும் நாகத்தையே வளையலாக அணிந்தும் திருமுடியில் சந்திரகலை திகழ இத்தல ஈசனை பூஜித்து பலம் பெற்று அரக்கனை அழிக்கச் சென்றாள். ஆதிசக்தியும் மாகேஸ்வரியையும் தொடர்ந்து அநவித்யாசர்மா தம்பதி இத் தலத்திற்கு வந்தனர். குளிரக் குளிர ஞான கங்கையில் நனைந்து, ஹரிமுக்தீஸ்வரரை தரிசித்து ஞானாம் பிகையை தரிசித்தபோது சக்ரமங்கையில் பெண்ணின் பருவத்தில் பேதையாக காட்சியளித்தவள் இங்கு பெதும்பை (பள்ளிப் பருவம்) பருவத்தினளாக காட்சியளித்தாள்.

தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையிலுள்ள அய்யம்பேட்டை கோயிலடிக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செருமாக்கநல்லூரிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.



ஈசனின் ஆயுதங்களும் தனித்துவம் பெற்றவை. அவர் கைகளில் தாங்கியிருக்கும் சூலத்திற்கு, அஸ்திர தேவர் என்று பெயர். இவராலேயே ஈசனுக்கு சூலபாணி எனும் திருநாமமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட அஸ்திரதேவர் என்ற சூலதேவருக்குதான் சகலசிவாலயங்களிலும் முதல் பூஜை நடைபெறும். இத்தலத்தின் நாயகரான கிருத்திவாகேஸ்வரரும் சிறப்பு வாய்ந்தவராவார். கரிஉரித்த நாயனார் என்றொரு பெயரும் உண்டு. கயாசுரன் என்பவன், யானை உருவினன். எல்லா இந்திராதி தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப் படுத்தினான். அவனைக் கண்டு அஞ்சி ஓடியவர்கள் காசிக்கு சென்று விஸ்வநாதப் பெருமாளின் அருள் வேண்டினர். உடனே காசிநாதன் பெருஞ்ஜோதியாகத் தோன்றினார். அவனைத் தாக்கி, அவன் தோலை உரித்து போர்த்திக் கொண்டார். யானை உருவிலிருந்த அவன் தோலை இவ்வாறு உரித்து அணிந்ததால் இவர் கரி உரித்த நாயனாரானார். பிறகு காசியிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் லிங்கமாக எழுந்தருளினார். அவரை கிருத்தி வாகேஸ்வரர் என்று எல்லோரும் அழைத்தார்கள். அவரிடம்தான் சூல தேவர் வரம் பெற்றார். இவருடைய சிலையை கோயிலின் உள் வாயிலில் காணலாம்.

ஆதிசக்தியான பார்வதி தேவி சூலமங்கலத்திற்கு வந்தாள். லிங்க ரூபமான கிருத்திவாகேஸ்வர சுவாமியின் திருப்பாதம் படர்ந்தாள். தவத்தில் ஆழ்ந்தாள். செங்கதிர் வேந்தன் ஈசன், போரொளியாகத் தோன்றினார். கைகளில் சூலத்தை ஏந்தியவாறு ஈசன் காட்சியளித்தார். ஆணவம், கன்மம், மாயை இவை மூன்றும் விலக்கப்பட வேண்டியவை. எங்கு இது அதிகமாகிறதோ அதை அடக்கத்தான் இந்த சூலம் என்பதை சொல்லாமல் சொன்னார். சூலம் என்பது முக்குணங்களும் இணைந்ததான ஒரு சக்தி. இவற்றிற்கெல்லாம் அதிபதியே அந்த பரமேஸ்வரர். நான் எனும் அகங்காரத்தை நாசம் செய்பவர்தான் இந்த அஸ்திரதேவர். சப்த மாதர்களில் கௌமாரி வழிபட்ட தலமிது. சும்ப, நிசும்ப, ரக்த பீஜ வதத்திற்கு முன்பு சண்டிகைக்கு துணையாக வந்தவள். கோலமயில் வாகனத்தில் வந்த இவள் குமரப் பெருமானின் சக்தியான கௌமாரியே ஆவாள். வேலவனுக்கே உரிய வேலாயுதத்தையே ஆயுதமாக ஏந்தி வந்து இந்த ஈசனடி பரவி பலம் பெற்றாள்.

அநவித்யநாத சர்மா நெகிழ்ந்து இத்தலத்தை அடைந்தார். கீர்த்திவாகேஸ்வரரையும் அம்பாள் அலங்காரவல்லியையும் கண்குளிர தரிசித்தார். அம்பாளை மங்கையாக இங்கு தரிசித்தார்கள். இதை பூப்பருவம் என்பார்கள். கிருத்திகை என்பது ரிஷி பத்தினிகளையும் குறிக்கும் பதம். ரிஷி பத்தினிகளிடம் வாசம் செய்பவர் என்ற பொருளுடனும் இங்கே கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமம் பெற்றுள்ளதாக கூறுவர். பெண்களுக்கு உயர்வைத் தரும் சிவப்பதி இது. இத்தலத்தில் ஆலமரமின்றி ஜடாமுடியோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். சனி பகவான் தன் குருவான பைரவருடன் அருகருகே நின்று அருள் பாலிப்பது அரிதான தரிசனமாகும். சூல விரதம் என்றே தனியாக ஒன்றுண்டு. இதை சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசையன்று சிவபெருமானை உள்ளத்தில் வைத்து ஒரு பொழுது உணவு உட்கொண்டு சிவாலய தரிசனத்தை முக்காலம் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மகாவிஷ்ணு உட்பட பலர் இந்த விரதத்தை மேற்கொண்டதாகவும் இந்த விரதம் மேற்கொண்டோரை விரோதிகள் நெருங்க முடியாது என்றும் புராணம் பகர்கிறது.
தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.



திருவையாறு தலத்தில் ஐயாறப்பர்தான் நந்திதேவருக்கு பஞ்சாட்சரத்தை ஓதினார். தர்மத்தின் வடிவான நந்தியையே தமது வாகனமாக்கி ஈசன் அதன் மீதேறி அமர்ந்தார். திருமழபாடியில் நந்தி தேவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக ஏழு தலங்களிலிருந்தும் ஏழு விஷயங்கள் கொணரப்பட்டன. அவையே ஈசனின் சப்த ஸ்தானங்கள் ஆயின. அதேபோல இந்த நல்லிச்சேரி- நந்திமங்கையில் பஞ்சாட்சரத்தை ஜபித்து ஈசனை பூஜித்தார். இவ்வாறு நந்தி திருக்கழல் தரிசனம் பெற்ற தலம் இதுவேயாகும். நந்தி தேவர் வழிபட்டதற்கான புடைப்புச் சிற்பத்தை ஆலயத்தில் காணலாம். சூல தரிசனம் பெற்ற ஆதிசக்தி தாயானவள் இத்தலம் நோக்கி வீறு நடைபோட்டு வந்தாள்.

திருவானைக்கா போலவே ஈசனுக்கு இத்தலத்தில் ஜம்புநாத சுவாமி என்று பெயர். அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி எனும் அழகிய நாமம். லிங்க வடிவில் வீற்றிருந்த ஈசனின் முன்பு அம்பிகை அமர்ந்தாள். அடிமுடி காண முடியாத ஈசனின் திருவடியில் தன் சித்தத்தைப் பதித்தாள். எப்போதும் கால் தூக்கி நடனமாடியபடியிருக்கும் சிவனாரின் தாண்டவத்தையும் உலக இயக்கமே இந்த தாண்டவச் சுழற்சிதான் என்பதையும் தெளிவாக உணர்ந்தாள். திருப்பாதத்தின் மேலுள்ள அந்தக் கழலையும் கண்டாள். அன்று இத்தலத்தில் நந்தி தேவருக்கு திருக்கழல் காட்டியவன் இன்று அம்பிகைக்கும் அதே தரிசனத்தை காட்டியருளினார். தன்னில் ஓர் அம்சத்தை அங்கேயே அழகாக நிலைநிறுத்தி அலங்காரவல்லியானாள். பின்னாளில் எவரேனும் தன்னையும் சேர்த்தே தரிசிப்பார்கள் என்று எதிர்பார்த்தே!
சப்த மாதர்களில் வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. தேவி மகாத்மியத்தில் சண்டிகைக்கு உடனாக நின்றவள். கருடன் மீதேறி, சங்கு-சக்ரம், கதை-சார்ங்கம் இவற்றோடு நந்தகீ எனும் வாளும் ஏந்தியபடி தோன்றிய விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட நீலநிற நாயகி இவள். ஜம்புகேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றாள். வலிமையும் உற்றாள். அநவித்யநாத சர்மா தமது பத்தினியோடு இத்தலத்திற்கு வந்து ஜம்புகேஸ்வரரையும் அலங்காரவல்லியையும் தரிசித்தார். அம்பாள் மடந்தை எனும் கன்னியாக காட்சியளித்தார். இங்கே என்னவொரு அற்புதமான ஒப்புமை பாருங்கள். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி எப்படி கன்னிகையோ அதுபோல இங்கேயும் அகிலாண்டேஸ்வரி என்கிற அதே நாமத்தோடு கன்னிகையாகவே அருள்கிறாள். அதே தரிசனத்தைத்தான் அநவித்யநாத சர்மாவும் பெற்றிருக்கிறார். இத்தலத்தில் காசியைப்போல் அருகேயே மயானமும் அதை நோக்கிய சிவ சந்நதியும் இருக்கின்றன. சூரிய பூஜை நடைபெறும் தலம். வெள்ளெருக்கு இத்தலத்தின் தலவிருட்சம்.
தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பிரதான சாலையிலேயே
இக்கோயிலுக்குச் செல்ல வளைவு உண்டு. அதிலிருந்து 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.



கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் இது. காமதேனு எனும் பசுவானவள் பதியான ஈசனை நோக்கி தவமிருந்த தலம். பசு பால் சொரிந்து ஈசனுடைய திருமேனியை வெளிப்படுத்திய தலங்கள் நிறைய உண்டு. அதுபோல இங்கு எழுந்தருளியிருந்த ஈசனுக்கு பாலாபிஷேகம் புரிந்து சிவதரிசனம் பெற்றது காமதேனு. ஒரு பசு பூஜிக்கிறது என்றால், சகல தேவர்களும் அதனுள் உறைந்து பூஜிப்பதற்கு இணையாகும். இத்தல அம்பாளின் திருப்பெயர் பால்வளநாயகி. அகத்தியரும் இத்தலத்தை வழிபட்டிருக்கிறார்.

ஒவ்வொரு தலமாக தரிசித்தும் சிவச் சின்னங்கள் உணர்த்தும் சக்திகளின் பிரமாண்ட தரிசனங்களை பெற்றும் இத்தலத்திற்கு வந்தாள், அம்பிகை. தான் பாற்கடலுக்குள் வந்து விட்டதாகவே உணர்ந்தாள். பால் மணமும் ஈசனின் அருள் மணமும் அவளை உருக வைத்தன. பசு என்று சொல்லப்படும் உயிர்களுக்கெல்லாம் பதியான ஈசனின் எதிரில் அமர்ந்தாள். ஒவ்வொரு தரிசனமாகப் பெற்றவள் இத்தலத்தில் ஈசனின் ஆதிநாதத்தைக் கேட்டாள். உடுக்கை எனும் டமருகத்திலிருந்து பிரணவமான ஓம் எனும் நாதம் அகில உலகையும் அணைப்பதை கண்டாள். ஓம் எனும் பிரணவத்திலிருந்தே சப்த பிரபஞ்சமும் உருவாகிச் சுழல்வதை அறிந்தாள். அதுவே சகல ஓசைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பதை அறிந்தாள். சப்த பிரபஞ்சமாக அதே ஓம் உடுக்கையிலிருந்து அலை அலையாக வெளிப்படுவதை புறச் செவி வழியாயும் அகச் செவி மூலமும் உணர்ந்தாள். ஒலியின் ஆதாரமும் ஈசன்தான் என்று அறிந்து உடுக்கையை கைகூப்பித் தொழுதாள். சப்தங்களிலிருந்துதான் வேதங்கள், அந்த வேத சப்தங்களிலிருந்துதான் பிரபஞ்ச உற்பத்தி என்பதை அந்த கணமே அறிந்தாள். அடுத்த தலம் நோக்கி நகர்ந்தாள்.

சப்த மாதர்களில் வாராஹி வழிபட்ட தலம் இது. வேத தர்மங்களை காப்பதற்காக வராஹர் எப்படி பூமியை அசுரனிடமிருந்து காத்து, தூக்கி நிறுத்தினாரோ அதேபோல இங்கு மகாகாளி அசுரர்களை அழிப்பதற்காக எடுத்த அவதாரங்களின்போது வராஹரிடமிருந்து இவள் வாராஹியாக வெளிப்பட்டாள். அந்த வாராஹியே இத்தல பசுபதிநாதரை வழிபட்டாள். அநவித்யநாதசர்மா தம்பதி பசுபதி
நாதரையும் பால்வளநாயகியையும் கண்குளிர தரிசித்தபோது அம்பிகை, அரிவை எனும் தாய்ப்பருவத்தில் காட்சி தந்தாள். அகத்தியர் தரிசித்த கோயில்கள் பொதுவாகவே சிவசக்தி திருமண கோயில்களாகவே இருக்கும். இங்கே அநவித்யசர்மா தரிசித்தபோது தாயாகவும் இருந்தாள் என்பது கவனிக்கத்தக்கது. இக்கோயிலில் உள்ள உச்சிஷ்ட கணபதியையும் கன்னி மூலையில் உள்ள ஜேஷ்டா தேவியையும் தரிசிப்பது அவசியமாகும்.
தஞ்சாவூர்-கும்பகோணம் பாதையில் பாபநாசத்தை அடுத்து இத்தலம் அமைந்துள்ளது.



தட்சனுக்கு சந்திரன் மேல் கடுங்கோபம். அவன் மணந்துகொண்ட தன் 27 மகள்களில் ஒருத்தியான ரோகிணியை மட்டும் நேசித்து மற்றவர்களை அலட்சியம் செய்ததற்காக கொதித்துப்போய் சாபமிட்டான். சந்திரனைச் சந்தித்து, ‘‘நீ தகாத காரியம் செய்கிறாய்’’ என அறிவுறுத்தினான். அவன் அறிவுரையை சந்திரன் அலட்சியம் செய்தான். ஆரவாரமாய் பேசினான். தட்சன் தீப்பிழம்பானான். ‘‘உன் அழகு குறித்து உனக்கு இவ்வளவு கர்வமா! அப்படிப்பட்ட உன் அழகு குலையட்டும். உன் சக்தி குறையட்டும். உன் பிரகாசம் மங்கட்டும்’’ என்று கடுமையாய் சபித்தான். அவன் கோபம் சந்திரனை நிலைகுலையச் செய்தது. மெல்ல தான் சுருங்குவதைக் கண்டு மிரண்டான். சந்திரன் எனும் சோமன் தன் சோபையை இழந்தான். தன் ஒளி மங்கி, கருமையாய் மாற ஆரம்பித்தான். துண்டு துண்டாய் உடைய ஆரம்பித்தான். தான் செய்த தவறுக்காக மனதிற்குள் குமைந்தான். தாழமங்கை எனும் இத்தல ஈசனை வணங்கினான். முக்காலமும் இத்தலத்திலேயே அமர்ந்து பூஜித்தான்.

ஈசனும் சந்திரன் முன் தோன்றினான். ‘‘மூன்றில் முழுதாக்கி முத்தொளியை முன் முடியில் முத்தாய்பாய் முடிந்தோமே’’ என ஓதி, ஆதிசிவன் தன் சிரசில் மூன்றாம் பிறையை ஏற்றி அருளினார். ஒருகாலத்தில் தாழைவனமாக இருந்த இத்தலத்தில் நாகங்கள் நிறைந்த தாழையடியில் சந்திரனின் பத்தினி சதயதேவி கடுந்தவம் புரிந்து இத்தல அம்பாளான ராஜராஜேஸ்வரியின் தரிசனத்தைப் பெற்றாள். சந்திரன் பூஜித்ததால் சந்திரமௌலீஸ்வரர் என்று இறைவன் பெயர் கொண்டார். அம்பாள், ராஜராஜேஸ்வரி. மங்களகரமான, சுபிட்சமான திரவியங்களான மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றின் உற்பவிப்பிற்கு ஆதிமூல வித்தாக சிருஷ்டிக் காலத்தில் விளங்கிய தலமே தாழமங்கை.

இப்படிப்பட்ட மங்களகரமான தலத்தினுள் ஆதிசக்தியானவள் ஆனந்தமாக நுழைந்தாள். குளிர்ந்த தண்ணிலவாக மிளிர்ந்த சிவ சந்நதியின் அருகே அமர்ந்தாள். ஒவ்வொரு சிவச் சின்னங்களாக தவமிருந்தவளுக்கு, இங்கே, இப்போது அந்த பிறை தரிசனம் கிட்டாதா என்று வேண்டினாள். ஈசனும் பிறையோடு எழுந்தருளினார். பிறை என்பதுதான் சிருஷ்டியின் முக்கியத்துவம் என்பதை உணர்த்தினார். மனதை உற்சாகத்தில் ஆழ்த்துபவன் சந்திரன்தான். சந்திரனின் சக்தியைப் பொறுத்துதான் மனதின் திண்மை அமைகிறது. பிறை என்பது உலகை பார்க்க வைக்கும். நினைக்க வைக்கும். சிருஷ்டிக்க வைக்கும். ஆய கலைகளை உற்பத்தி செய்யும் விஷயம் என்பதை அறிந்து ஆனந்தப்பட்டாள். ஞான சூரியனான ஈசனிடமிருந்துதான் சந்திரன் சக்தியை கொணர்கிறான் என்பதையும் கண்டாள். அருவமாக தம் அம்சத்தை நிலைநிறுத்தினாள். ராஜராஜேஸ்வரியாக பேரழகுடன் பொலிந்தாள்.

சப்தமாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம் இது. தேவி பாகவத சண்டிகையின் அசுர வதை படலத்தில், வெள்ளை யானை மீது வஜ்ரப் படை தாங்கி, ஆயிரம் கண்களோடு எழுந்தருளிய இந்திராணி எனும் ஐந்த்ரீ இவள். இந்திரனின் சக்தியைத் தாங்கி அவனிடமிருந்து வெளிப்பட்டவள். அவளும் இத்தலத்திற்கு வந்து பூஜித்து பேறு பெற்று போர்க்களம் சென்றாள் என்பது தலபுராணம். சதய நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னனான ராஜராஜசோழன் மாதந்தோறும் சதய நட்சத்திரத்தன்று, மஞ்சள் குங்கும சந்தனாதிகளை அரைத்து அம்பாளுக்கும் ஈசனுக்கும் சாத்தி வழிபட்டான். அநவித்ய நாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் தெரிவை எனும் பேரன்னையாக காட்சி தந்தாள். அன்னையின் அருளை உள்ளத்தில் தேக்கி அடுத்த தலமான திருப்புள்ள
மங்கைக்கு நகர்ந்தார்.
தஞ்சாவூர்-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 12 கி.மீ. தொலைவில் பசுபதிகோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயிலுக்கு நடந்தே
செல்லலாம்.



திருப்புள்ளமங்கை திருத்தலம் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது தேவர்களும் அசுரர்களும் அமுதத்தை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்கிறது தலபுராணம். இதனாலேயே ஆலந்தரித்தநாதர் என்று அழைக்கிறார்கள். பொங்கி எழுந்த கடல் நஞ்சினை பரமன் பங்கி உண்ட திருத்தலம் என்று குறிப்பிடுகிறார்கள். பிரம்மா இத்தல ஈசனை பூஜித்து சாபவிமோசனம் பெற்றதால், ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அல்லியங்கோதை எனும் திருப்பெயரில் அம்பாள் அருள்கிறாள்.
இக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை மிகவும் அழகாக அமைந்திருக்கிறாள். மகிஷனுடைய தலையை பீடமாக கொண்டு சமபங்க நிலையில் நிற்கிறாள். ஒரு பக்கம் சிம்ம வாகனமும் மறுபக்கம் மான் வாகனமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட கற்கோயில். சிற்பக் கலையின் மிக உயர்ந்த நேர்த்தியை இத்தலத்தில் காணலாம். மூலவர் விமானத்தின் கீழ் ராமாயணம், சிவபுராணம் மற்றும் நாட்டிய கரண சிற்பங்கள் அதிநுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளன.

ஆதிமாதாவான அன்னை சிவ தரிசனம் பெறும் பொருட்டு இத்தலத்தை அடைந்தாள். ஈசனின் ஒவ்வொரு சின்னங்களை தரிசித்தவள் ஈசனுக்கு அழகு சேர்க்கும் நாகாபரண தரிசனம் தனக்கு கிட்டாதா என்று கண்மூடி அமர்ந்தாள். அம்பாளின் தீந்தவத்தில் தனக்குள்ளேயே பொதிந்து கிடக்கும் நாகமான குண்டலினி எனும் சக்தி கிளர்ந்தெழுந்தது. ஒவ்வொரு சக்ரங்களாக மேலேறியது. இறுதியில் சகஸ்ராரம் எனும் உச்சியை அடைந்து, அதற்கும் ஆதாரமான இருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கியது. இந்த நாகாபரணம் எனும் குண்டலினியைத்தான் ஈசன் தன் கழுத்திலே அணிந்திருக்கிறார். சகல ஜீவர்களுக்குள்ளும் இந்த சக்தி பொதிந்து கிடப்பதையும் காலக்கிரமத்தில் யோக ரீதியில் மேலேறுவதையும் காட்டுவதற்காக நாகாபரணத்தை பூண்டிருக்கிறான் ஈசன் என்பதை உணர்ந்து கொண்டாள்.

சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமிது. சகல சக்திகளும் ஒன்று சேர்ந்தாற்போல சண்டிகையுடன் சாமுண்டி நின்றாள். அஷ்டநாகங்களோடு சிவலிங்கத்திற்கு புஷ்பங்கள் சாத்தி பூஜித்தாள். இத் தலத்தை வணங்குபவர்களுக்கு நாக தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. அநவித்யநாத சர்மா தம்பதி இத் தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் பேரிளம்பெண் எனும் முதும்பெண் பருவத்து வடிவினளாக காட்சி தந்தாள். இந்த ஏழு தலங்களையும் தரிசித்து ஆத்மானுபூதி அடைந்த தம்பதி மயிலாடுதுறை மயூரநாதரை தரிசித்து உடலைத் துறந்தனர் என்றும் ஒரு புராண வரலாறு உண்டு. தஞ்சை-கும்பகோணம் பாதையில் பசுபதி கோவிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.