ஆன்மிக அலமாரி



வேதமோதும் உரிமை கோருவதேன்?


அவர்  யாரைப் பார்த்துத் திட்டுகிறாரோ, யாரை அடிக்கிறாரோ அவர்களின் கர்மங்கள் ஒழிந்தது என்றும் அவர்கள் வாழ்க்கையில் உயர்வு ஏற்படும் என்றும் மக்கள் நம்பினர். அஃது உண்மையும்கூட. திருவண்ணாமலை சுடுகாட்டு வெட்டியானின் மகன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு அதற்குரிய தண்டனைகளையும் பெற்று வந்தான். தன் மகனைப் பற்றி சுவாமியிடம் கூறி வருத்தப்பட்டான் அந்த வெட்டியான். சுவாமி அவன் மகனை அழைத்து அவன்  கன்னங்களில் பளார் பளார் என்று அறைந்தார். அவ்வளவுதான் அவன் கர்மா ஒழிந்தது. அவனுக்கு நல்ல காலம் பிறந்தது. அவனுக்கு அரசாங்க வேலையே கிடைத்தது. என்ன வேலை தெரியுமா? போலீஸ் வேலை. இதுதான் மகானின் அற்புதம், மகிமை, வரம் எல்லாம்.

1929ஆம் ஆண்டு வந்தது. கோயிலில் அமர்ந்திருந்த மகான் சேஷாத்ரி சுவாமிகள் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். தன்னைப் பார்க்க வருபவரிடம் ‘‘நான் வேறு ஒரு வீடு கட்டிக்கொண்டு போகப் போகிறேன்’’ என்றார். ஒரு பக்தையிடம் அப்படிக் கூறும்போதும் அந்த வாக்கியத்தில் மறைந்திருக்கும் உண்மையை உணராத அந்த அம்மையார் சுவாமி விளையாட்டாகப் பேசுகிறார் என்று கருதி ‘‘சரி சரி போங்கள்’’ என்றார். உடனே சுவாமி துள்ளிக் குதித்து ‘‘அம்மா உத்தரவு கொடுத்துட்டா, அம்மா உத்தரவு கொடுத்துட்டா’’ என்று கூத்தாடியபடியே மலை வலம் சென்றார்.
(மண்ணில் உலவிய மகான்கள், ஆசிரியர்:
க. துரியானந்தம், பக்: 120, ரூ.50/- எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தியாகராயநகர், சென்னை-600 017. தொலைபேசி: 24361141, 24340599.)

அம்மா உத்தரவு கொடுத்துட்டா...


வேதத்தில் நிஜமான பக்தி இருந்துதான் அதைப் படிப்பேன் என்று ஸ்த்ரீகள் புறப்படுகிறார்களா என்றால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. வேதத்தில் நிஜமான பக்தி இருந்தால் அதன் ஸ்பிரிட்டை ரக்ஷித்துக் கொடுக்கிற தர்ம சாஸ்திரத்திலும் பக்தி-நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்யும். ஆனபடியால் இப்போது சில பேர் இப்படி ஒரு போர்க்கொடி தூக்கியிருப்பதற்குக் காரணம் (ஆழ்ந்த, அழுத்தமான குரலில்) nonconformism   தான் (மரபுக்குக் கட்டுப்படாமைதான்) ‘இதுவரை சாஸ்த்ர ரீதியிலும் சட்ட ரீதியிலும் எதெதற்கு ஜனங்கள் கட்டுப்பட்டு வந்தார்களோ, நேற்று தாத்தா, அப்பா வரை எப்படி ஒரு ஒழுங்கு முறையில் போனார்களோ, அந்தக் கட்டு எதற்கும் உட்படாமல் அறுத்துப் போட்டுவிட்டு, இஷ்டப்படி மனம் போனபடிப் பண்ணுவேன்’ என்பதுதான் காரணம். லோகம் பூராவிலும் பரவியுள்ள ‘நான்-கன்ஃபார்மிஸ’த்துக்கு இது இன்னொரு உதாரணம்தான்.

ஒரு பக்கம், சாஸ்த்ரம் அத்யயனம் பண்ணு என்று சொல்கிற புருஷன், எதற்குப் பண்ண வேண்டும் என்று அதை விடுகிறான்; இன்னொரு பக்கம், அத்யயனம் பண்ணாதே என்று சொல்கிற ஸ்த்ரீ, ஏன் பண்ணாமலிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தான் பண்ண வேண்டாததை, பண்ணக் கூடாததை எடுத்துக் கொள்ள வருகிறாள். இதே சாஸ்த்ரம் ஸ்த்ரீகளையும் அத்யயனம் பண்ணச் சொல்லியிருந்தால் அப்போது, ‘‘வேதாத்யயனம் பண்ணினால்தான் ஆச்சா? பக்தி பண்ணினால் போதாதா? நாமஸ்மரணமே போதாதா?’’ என்று புருஷர்கள் இன்றைக்குக் கேட்கிற கேள்விகளை அவர்களும் கேட்பார்கள்!

ஸ்த்ரீகள் வேதத்தில் நேராக ப்ரவேசிக்க வேண்டாம்; அவற்றின் பரம தாத்பர்யத்தை ஓரளவுக்குத் தெரிந்து கொண்டால் போதும்.
(பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்,  ஆசிரியர்: ஸ்ரீரா. கணபதி, பக்: 112, ரூ.50/- கருடா பியூச்சர்ஸ்,  1, சர்ச் தெரு, புழுதிவாக்கம், சென்னை-091 தொலைபேசி: 99405 52516.)

கோபுரக் கதவுகளே கடவுள்!


திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயிலில் பதினெட்டுப் படியுடைய கருப்பண்ணசாமி காவல் தெய்வமாக உள்ளார். இவர் இங்கு வந்ததின் வரலாறு ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருந்தது.

‘‘ஒரு சமயம் மலையாளத்தைச் சேர்ந்த அரசன் ஒருவன் இக்கோயிலுள்ள உற்சவ பெருமாளான சுந்தரராஜனை தான் எடுத்துச் சென்று பூஜிக்க நினைத்தான். ஆனால் அழகாபுரியின் அதிக காவலால் அவரை எடுத்துச் செல்ல முடியவில்லை. பின் மந்திர, தந்திர, சாஸ்திர நிபுணர்கள் 18 பேரை அனுப்பி, யார் கண்ணிலும் படாமல் எடுத்துவரப் பணித்தான். அவர்களுக்கு அம்மூர்த்தியின் சக்தியை தங்கள் மந்திர சக்தியினால் வேறொரு விக்ரஹத்தில் வைத்து தம் நாட்டில் அதை ஸ்தாபிக்க முயற்சித்தனர். சாஸ்திரங்களில் தேர்ந்த இங்கு உள்ள பட்டர்கள் அச்சூழ்ச்சியினைக் கண்டுபிடித்து அந்த பதினெட்டு பேர்களையும், பிரதான கோபுர வாசலில் 18 படிகளின் கீழ் வைத்துப் புதைக்கச் செய்துவிட்டனர். பிறகு அந்த  சூழ்ச்சிக்காரர்களுக்கு உதவியாக வந்த ஒரு தெய்வம் இனிமேல் தானும் இங்கேயே கோபுர வாயிலில் இருந்து கோயில் சொத்துகள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வதாகவும் அதற்காக தினந்தோறும் அழகரின் அர்த்தஜாம பூஜையின் நைவேத்தியங்களை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அதன்படியே இன்றும் நைவேத்தியம் கொடுக்கப்படுகிறது. இத்தெய்வம்தான் பதினெட்டாம்படி கருப்பர். அழகர், கோயிலை விட்டு வெளியே புறப்படும்போதும் திரும்பும்போதும் இவருக்கு சேவை சாதித்து கற்பூர தீபம் காட்டப்படுகிறது. இத்தெய்வத்தின் முன் ஒருவரும் பொய் சொல்லத் துணிய மாட்டார்களாம். பெரிய பெரிய வழக்குகளில் கூட உண்மை அறிய இச்சந்நதியில் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லும் வழக்கம் சமீபகாலம் வரை இருக்கிறது. இக்கருப்பண்ண சாமிக்கு இங்கே உருவம் இல்லை. இங்கு பதினெட்டாம்படி ‘கோபுரக் கதவுகளை’யே இத்தெய்வமாக எண்ணி பூஜைகள் நடக்கின்றது. கதவுகளுக்கு சந்தனம், குங்குமம் முதலின பூசி மாலை, புஷ்பம் இவற்றால் அலங்கரித்துப் பூஜை நடக்கும்.

(108 திவ்ய தேசங்களும் 276 தேவாரத் தலங்களும், ஆசிரியர்கள்: பி. கனக சபாபதி- எஸ். பாலகுமாரன், பக். 192, ரூ.200/- திருச்சிராப்பள்ளி ஸ்ரீஐயப்ப சங்கம், 2, லாசன்ஸ் ரோடு, திருச்சிராப்பள்ளி-620 001. போன்: 0431-2461415.)

ஞானத்திற்கு அடையாளம் விளக்கு


விளக்கெரிய அகல் வேண்டும். எண்ணெய் வேண்டும். தீ தொட்டு நிற்க திரி வேண்டும். தீ பற்ற ஆக்சிஜன் வாயு வேண்டும். இத்தனையும் அமையத் தீ மூட்டுகிறோம். பிரபஞ்சத்தின் அடிப்படை ஆற்றல்களில் ஒன்றான தீ, அந்த விளக்கில் உயிர் பெற்று நிற்கிறது. விளக்கின் ஆன்மாவாகப் பிரகாசிக்கிறது. இடையிடையே திரி உருக, ஒளி மங்குகிறது. தூண்டி விட்டால் திரும்பவும் சுடர் விடுகிறது. கிட்டத்தட்ட மனிதனைப்போல உயிர்க் காற்றை உண்டு, கார்பன் உள்ளிட்ட கழிவுகளைக் காற்றில் தூவி, இறுதியில் விடை பெறுகிறது. வாழும்வரை பிரபஞ்சத்தில் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வழங்குகிறது.

அந்த வெளிச்சமும் வெப்பமும் நன்மைக்கும் பயன்படுகிறது, தீமைக்கும் பயன்படுகிறது. அந்தத் தீ விளக்கில் தோன்றுவதற்கு முன் எங்கிருந்து வந்தது? விளக்கில் இருந்து விடை பெற்றதும் எங்குச் சென்றது? கேள்விகள் ஞானத்திடம் விடை கேட்கின்றன.

‘தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றான், மகாகவி. ஜோதியில் தரிசனம் கண்டார் வள்ளலார். ஆன்ம ரகசியத்தை விளக்குகிறது விளக்கு.

மனிதனின் உடல் விளக்கு. உணவு என்னும் தாதுக்கள் எண்ணெய். தண்டுவடம் விளக்குத் திரி. தீயே ஆன்மா. சற்றே அந்தரத்தில் தீப்பற்றி நிற்கும் இடம் நெற்றிச்சுழி. அதைத் தூண்டிவிடுதலே தொண்டு செயல்கள். தூய்மைப்படுத்தலே தியானம். விளக்கின் ஆரோக்கியம் ஒளியைப் பிரகாசிக்கும். வெப்பம் உடலில் சீராகப் பரவும். வெளிச்சம் கண்களில் தெரியும். நோய் வந்தால் ஒளி மங்கும். காற்று என்னும் சிற்றின்பங்கள் அலைக்கழித்தால் தீயும் அலைக்கழியும். ஒருமுகப்பட்டால் தீயின் நுனி, உச்சந்தலைவரை உயரும்.

(பாவ புண்ணியக் கணக்குகள், ஆசிரியர்: யாணன், பக்: 128, ரூ.90/- பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண்.7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083. செல்பேசி: +91 9600123146.)