ஐந்தில் வளையத் தெரிந்தால், ஐம்பதிலும் வளையலாம்!





கொடுக்கல் வாங்கல் உலகிற்கு அப்பால், ஒரு வித்தியாசமான பரிமாணத்தை வழங்குகிறது கோயில். சந்தை வாழ்வால் சரிந்து போனவர்களே கோயிலைக் கட்டியிருக்க வேண்டும்!
பேரம் பேசும் இடமல்ல கோயில். உலக வாழ்வின் செயல்பாடுகளால் சக்தி வற்றித் தளர்ந்து, நிம்மதி இழந்து போனவர்களுக்கு ஆறுதலும் அமைதியும் நிம்மதியும் தரும் இடம் கோயில்.
கோயிலுக்குள் பிரவேசிக்க நிபந்தனை எதுவும் இல்லை. இவ்வளவு பணம் இருந்தால்தான், இவ்வளவு அறிவு இருந்தால்தான், இவ்வளவு கௌரவம் இருந்தால்தான் கோயில் பிரவேசம் சாத்தியம் என்றெல்லாம் இல்லை. நீங்கள் எப்படி இருந்தாலும் கோயில் உங்களை ஏற்றுக் கொள்ளும். உங்களை நீங்களாகவே ஏற்பதுதான் கோயிலின் எளிய சிறப்பு.

வாழ்க்கை அடிக்கடி சலித்துப்போய் விடுகிறது. அந்த வேளைகளில் பிரார்த்தனைக் கதவு திறந்து கிடப்பதை நீங்கள் உணர வேண்டும். ஒருமுறை அதைத் திறந்து பார்த்து விட்டால் மறுபடியும் மறுபடியும் திறக்க முடியும். நீங்கள் வீட்டிலிருந்தாலும் கடையிலிருந்தாலும் அதைத் திறக்க முடியும்.

எப்போது விரும்பினாலும் எந்த நேரத்திலும் திறந்து விடும் அளவுக்கு, அது கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கணங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மகாவீரரையோ புத்தரையோ தேடித் தீர்த்த யாத்திரை போக வேண்டியதில்லை. அந்தக் கணங்கள் மிகத் தற்காலிகமானவை. எளிதில் நுழையக் கூடிய இடங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும்.
குழந்தைப் பருவ நினைவுகள் மிக முக்கியமானவை. ஒரு குழந்தை, தனது ஏழாவது வயதிலேயே எல்லா அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு விடுகிறது என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். அதன் அடிப்படை மீதுதான் வாழ்வின் மேல் கட்டுமானம் அமைகிறது. அப்புறம் சேரும் அறிவெல்லாம் கொஞ்சமே; ஏழாவது வயதில் அமைவதே அடித்தளம்
என்கிறார்கள்.

ஒரு குழந்தையின் ஏழாவது வயதில், கோயிலின் முக்கியத்துவத்தை நாம் ஊன்றவில்லையானால், பிற்காலத்தில் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் சிரமமாகிவிடும்; பெரும்பாடு படவேண்டியிருக்கும். அப்போதும் கூட அந்த நம்பிக்கை மேலோட்டமாகவே இருக்கும்.

அதனால்தான் பிறந்தவுடனே குழந்தையின் மனதில் அது நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கோயிலின் சூழலில் அது வாழவேண்டும். மெல்ல மெல்ல அது குழந்தைக்குள் ஆழப்பதிந்து விட வேண்டும். கோயில் குழந்தையின் பிரிக்க முடியாத பகுதியாகிவிடும்.

அது வளர்ந்து உலக வாழ்வில் ஈடுபடும்போது கோயில் அதற்குள் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். காரணம், அதுதான் வாழ்வின் இறுதியில் அந்தக் குழந்தைக்கு புகலிடமாக இருக்கப் போகிறது. அதனால்தான் பிறப்பு முதலே கோயில் ஒருவர் மனதில் ஆழப் பதிந்திருக்க வேண்டும் என்கிறோம். இல்லாவிட்டால் பிற்காலத்தில் சிரமம்.

கோயிலின் சுற்றுப்புறத்தில் வாழ்பவர் மனதில் அது ஒரு பதிவை ஏற்படுத்தி விடுகிறது. அது ஒரு கருத்தாக அல்லாமல், வாழ்வின் ஒரு பகுதியாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து விடுகிறது. அதனால்தான், உலகம் முழுவதிலும் கோயில்களின் உருவங்கள் மாறி இருந்தாலும் கோயில் என்ற ஒன்று தவிர்க்க முடியாதபடி இருக்கின்றது.


இன்று அது இன்றியமையாத ஒன்றாக இல்லை. அதன் இடத்தை வேறு விஷயங்கள் பிடித்துக் கொண்டு விட்டன. பள்ளிகள், மருத்துவமனைகள், நூலகங்கள் என இவையெல்லாம் கோயிலுக்கு இணையாக முடியாது. ஆழ்ந்த பொருளைச் சுட்டிக்காட்டவல்ல மையமே தேவைப்படுகிறது. அதிகாலையில் எழுந்தவுடன் கோயில் மணியோசை நம் காதுகளில் ஒலிக்க வேண்டும். இரவு படுக்கப் போகும்போது தேவகீதங்கள் நம் காதில் விழவேண்டும்.

மகாவீரர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி
திருடன் ஒருவன் மரணப் படுக்கையில் கிடந்தான். அவனுடைய மகன், ‘‘கடைசியாக ஏதாவது அறிவுரை சொல்லுங்கள் அப்பா!’’ என்று கேட்டான்.

‘‘மகனே, மகாவீரர் என்ற ஆளிடம் எதுவும் வைத்துக் கொள்ளாதே. அந்த ஆள் இந்த ஊருக்கு வருவதாக இருந்தால். நீ ஊரிலேயே இருக்காதே! எங்காவது ஓடிவிடு! எதிர்பாராமல் அவர் பாதையில் வருவது தெரிந்தால் ஓடி ஒளிந்துகொள்! எங்காவது அவர் பேசுவது உன் காதில் விழுந்தால், காதுகளை உடனே பொத்திக் கொள். எச்சரிக்கையாக இரு!’’ என்றான் திருடன்.

வியப்படைந்த மகன், ‘‘ஏன் அப்படி?’’ என்று கேட்டான். அதற்குத் திருடன், ‘‘சும்மா விவாதம் செய்யாதே! சொல்வதைக் கேள்! அந்த ஆளை நெருங்கினால் போதும். நம் தொழில் சர்வநாசம் அடைந்துவிடும். அப்புறம் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்’’ என்றான்.

அடுத்து நடந்ததுதான் சுவையானது!
திருடனின் மகன் முடிந்தவரை மகாவீரரை விட்டு விலகியே இருந்தான். ஆனால் ஒருநாள் தவறு நேர்ந்து விட்டது.
மகாவீரர் ஒரு மாமரத்தடியில் மௌனமாக அமர்ந்திருந்தார். அது தெரியாமல் திருடன் மகன் அந்தப் பக்கமாகப் போய்விட்டான். சட்டென மகாவீரர் பேச ஆரம்பித்து விட்டார். திருடன் மகனின் காதில் அரை வாக்கியம் விழுந்தவுடன் சட்டெனக் காதைப் பொத்திக் கொண்டான்.

ஆனால் அந்த அரை வாக்கியம் இருக்கிறதே, அது அவனை என்னவெல்லாமோ செய்து விட்டது. காவலர்கள் அவனை விரட்ட ஆரம்பித்தார்கள். சில வாரங்களில் அவன் பிடிபட்டு விட்டான்.
அவனது குலத்தொழிலே திருட்டுத்தான். ஆதாரம் எதுவும் இல்லாதபடி திருடுவதில் அவன் வல்லவன். ஏராளமான திருட்டுகள் செய்தும் அவன் அதுவரை அகப்படாதபடி நடந்து கொண்டான். இப்போது அவன் அகப்பட்டுவிட்டாலும் குற்ற ஆதாரம் எதுவும் இல்லை. அவனாக வாக்குமூலம் கொடுத்தால்தான் உண்டு.

அவனை எக்கச்சக்கமாகக் குடிக்க வைத்தார்கள். இரண்டு மூன்று நாட்கள் போதை மயக்கத்தில் சுருண்டு கிடந்தான். அவன் கண்களைத் திறந்து பார்த்தபோதும் கூட அரை நினைவுதான்.

அப்போது அவன் கண்டது. அவனைச் சுற்றிலும் அழகிய பெண்கள்!
‘‘நான் எங்கிருக்கிறேன்?’’ என்று கேட்டான் அவன்.

‘‘தம்பி, நீ செத்துப் போனாய். சுவர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அழைத்துப் போக ஆட்கள் காத்திருக்கிறார்கள். உன் குற்றங்களை ஒப்புக் கொண்டு விட்டால் இந்த அழகிகளுடன் சுவர்க்கம் போகலாம்’’ என்று சொன்னார்கள்.

உண்மை சொல்லிவிட்டால் சுவர்க்கம் போகலாம் என்று நினைத்த அவனுக்கு மகாவீரர் சொல்லக் கேட்ட அரை வாக்கியம் நினைவிற்கு வந்தது.

மகாவீரர் பேசியது கடவுள்களையும் பேய்களையும் பற்றி. எமதூதர் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். எமதூதருக்குக் கால் தரையில் படியாது என்றும் அவன் காதில் விழுந்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் அப்படியெல்லாம் இல்லை! அதனால், அவன் எச்சரிக்கை அடைந்தான். என்ன செய்வார்கள்! பேசாமல் அவனை விட்டுவிட்டார்கள்.

அதற்குப் பிறகு அவன் நேராக மகாவீரரிடம் ஓடினான். அவர் பாதங்களில் விழுந்தான். அவன் முன்பு கேட்ட அந்த அரை வாக்கியத்தை முழுசாகக் கேட்க விரும்புவதாகச் சொன்னான். அரை வாக்கியமே தன்னை இவ்வளவு தூரம் காப்பாற்றியதென்றால், முழு வாக்கியம் எவ்வளவு பயனுடையதாக இருக்கும்!
அதன்பிறகு அவன் அவரிடம் பரிபூரண சரணாகதி அடைந்தான்.

அவன் சிக்கித் தூக்குமேடை ஏறியிருப்பான். மகாவீரரின் அரை வாக்கியம் கேட்டு அவன் தப்பினான்.

‘‘ஒரு ஞானியின் அரை வாக்கியம் கூட, கடைத்தேறப் போதுமானது’’ என்று மகாவீரர் அடிக்கடி சொல்லுவதுண்டு.
அதேபோல, கோயிலருகே ஓடுகிறவனோ,
கவனமின்றிக் கடந்து செல்கிறவனோ கூட, கோயிலிலிருந்து வெளிப்படும் ஒலி அதிர்வுகளுக்கு ஆட்பட்டு விடுவான். அதன் நறுமணத்தை நுகர்வான்... அது அவனுக்கு உதவும்படியாகவே அமையும்.
(தொடரும்)
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600 017