கஷ்டங்கள் போக்கும் கருட பஞ்சமி விரதம்





‘‘பிறக்கற குழந்தை ஆரோக்கியமா இருக்கறது ரொம்பவும் முக்கியம். அப்படி ஆரோக்கியமா இருந்தா, புத்திசாலித்தனமாகவும் இருக்கும். வினதையோட மகன் கருடன் மாதிரி..’’என்று ஆரம்பித்தாள், மாமி.
‘‘யாரது மாமி வினதை?’’ புவனேஸ்வரி கேட்டாள்.
‘‘அது ஒரு கதை. கதையோட விரத விஷயமும் இருக்கு.’’
‘‘அப்படியா, அதைச் சொல்லுங்களேன்... நாங்களும் தெரிஞ்சுக்கறோம்’’ என்றார்கள் கிருத்திகாவும் தீபாவும்.
‘‘காஸ்யபர்னு ஒரு முனிவர் இருந்தார். இவர் சப்த ரிஷிகள்ல ஒருத்தர். இவருக்கு வினதை, கத்துருன்னு இரண்டு மனைவிகள். வினதைக்கு ஒரு மகன். பேரு கருடன். கத்துருவுக்கு நிறைய பிள்ளைகள். ஆனா எல்லோரும் பாம்புகள்...’’
‘‘ஒரு மனைவிக்கு
கருடன், இன்னொரு மனைவிக்கு பாம்புகளா? ஒண்ணுக்கு ஒண்ணு விரோதமாச்சே. கருடனுக்கும் பாம்புக்கும் ஆகாதும்பாங்களே..’’ புவனேஸ்வரி கேட்டாள்.

‘‘ஆமாம்,. ஆனா அப்படி ஆகாமல் போனதற்குக் காரணம், அடிப்படையிலே அந்தக் குழந்தைகள் இல்லே.. அவங்களோட அம்மாக்கள்தான். ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் எதிர்மறை குணம் கொண்டிருந்தாலும் போதுமே... அந்த வகையில் கத்துரு எப்பப் பார்த்தாலும் வினதையைக் கரிச்சுக் கொட்டிகிட்டே இருப்பா..’’
‘‘சக்களத்தின்னாலே அப்படித்தானே?’’ கிருத்திகா கேட்டாள்.

‘‘அதுசரி, சக்களத்தின்னு எப்படி வந்தது?’’ தீபா இடைச்செருகலாக ஒரு தகவல் விளக்கம் கேட்டாள்.
‘‘களத்திரம்னா சமஸ்கிருதத்திலே திருமண வாழ்க்கைன்னு அர்த்தம். களத்தின்னா மனைவி. சக்களத்தின்னா கூடவே வாழும் தன் கணவரின் இன்னொரு மனைவின்னு அர்த்தம். அதாவது சக களத்தி..’’
‘‘ஆமாம். சரி, அப்படிக் கரிச்சுக் கொட்டிகிட்டிருக்கறது மட்டுமல்ல. வினதையைத் தனக்கு அடிமையாகவே வெச்சுக்கணும்னு கத்துரு நினைச்சா. அதனால் ஒரு போட்டியை அவளே உருவாக்கினா. இந்திரன் கிட்ட ‘உச்சைஸ்ரவஸ்’னு ஒரு வெள்ளைக் குதிரை இருந்தது. அந்தக் குதிரை சில சமயம் வானத்திலே பாய்ந்து போகும். அதைப் பார்த்ததும் கத்துருவுக்கு ஒரு ஐடியா தோணிச்சு. அவள் வினதையிடம், ‘உச்சைஸ்ரவஸ் என்ன கலர்?’னு கேட்டா. வினதையும் அந்தக் குதிரையைப் பார்த்திருக்கிறாள். அதனால் ‘வெள்ளை’னு பதில் சொன்னா. இல்லை, அது கறுப்புன்னா கத்துரு. ஆனா வினதைக்கு நல்லா தெரியும். அது முற்றிலும் வெள்ளைதான்னு; அதனால தான் சொன்னதுதான் சரின்னு அடிச்சுச் சொன்னா. உடனே கத்துரு, ‘அது முழுசுமாக வெள்ளையில்லே, அதனோட வால் கறுப்பு’ன்னா. வினதையோ, ‘கிடையவே கிடையாது’ன்னு தீர்மானமாகச் சொன்னா, கத்துரு உடனே, ‘பந்தயம் வெச்சுக்கலாம். உச்சைஸ்ரவஸ் ஏதாவது ஒரு பகுதியிலே கறுப்பா இருந்தா நீ எனக்கு அடிமையாகணும்னு சொன்னா. அப்படி இல்லேன்னா, தான் அவளுக்கு அடிமை’ன்னா, வினதையும் ஒப்புக்கிட்டா.


‘‘உச்சைஸ்ரவஸ் முற்றிலும் வெண்மைதான்னு கத்துருவுக்கும் தெரியும். ஆனா, தான் போட்டியில ஜெயிக்க அதனோட வாலை மட்டுமாவது கறுப்பாகக் காட்டணுமே! உடனே பாம்பாக இருந்த தன்னோட பிள்ளைகள்ல கறும்பாம்புகள் சிலவற்றைக் கூப்பிட்டா, ‘நீங்க உடனே போய் அந்த உச்சைஸ்ரவஸ் வால்ல போய் சுத்திக்கோங்க. இங்கேயிருந்து பார்த்தா, அந்த வால் கறுப்பாகத் தெரியணும்’னு சொன்னா. உடனே அந்தப் பிள்ளைகளும் அம்மா பேச்சைத் தட்டாம அப்படியே சுத்திகிட்டாங்க. வழக்கம்போல உச்சைஸ்ரவஸ் வானத்திலே வந்தபோது, இந்த சமயம் அதனோட வால் கறுப்பாக இருந்தது. அதை வினதைக்கு கத்துரு காட்டினாள். ‘பார், அதனோட வால் கறுப்பா இருக்கு. அதனால நீ எனக்கு அடிமை’ அப்படின்னா. குதிரையைப் பார்த்த வினதை திடுக்கிட்டாள். அது எப்படி கறுப்பாச்சு? இத்தனை நாள், தான் பார்த்தபோது வெள்ளையாக இருந்ததேன்னு வினதைக்கு ஒரே குழப்பம். ஆனா அதைத் தீர விசாரிக்காம, உண்மையைத் தெரிஞ்சுக்கணும்னு ஆத்திரப்படாம, வாக்குக் கொடுத்ததுபோல கத்துருவுக்கு அடிமையானா.

‘‘ஆனா கடவுள் ஒரு தாழ்வைக் கொடுத்தா உடனே வேறொரு அம்சம் மூலமா ஏற்றத்தையும் கொடுத்திடறார்..’’ என்றாள் மாமி.
‘‘அட, அது எப்படி?’’
‘‘ஆமாம். தான் அடிமைப்பட்டதைத் தன்னோட மகன் கருடன்கிட்ட சொன்னா வினதை. மகனுக்கோ கோபமான கோபம். தன்னோட தாயை ஏமாற்றி அடிமையாக்கிய சின்னம்மாவை அவன் உடனே பழி வாங்கத் துடிச்சான். ஆனா, அவனை வினதை சமாதானப்படுத்தினா. தன்னைப் போலவே தன்னுடைய மகனும் கத்துருவுக்கு அடிமையாகிடுவானோன்னு பயந்தாள். கருடனும் யோசிச்சான். போட்டின்னு வந்துட்டா எப்படியாவது ஜெயிக்கணும்னுதான் நினைப்பாங்க. அந்த வகையில கத்துரு ஜெயிச்சதிலேயும் அவளைப் பொறுத்தவரை நியாயம் இருக்கலாம். ஆத்திரப்பட்டு கத்துருவோட சண்டை போடறதைவிட, அவளை அனுசரிச்சுகிட்டுப் போகலாம்னு நினைச்சான். ஆகவே, கத்துருகிட்ட போய் அவளுக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்து, தன் தாயை விடுவிக்கணும்னு நினைச்சான். கத்துருகிட்ட போய், ‘எங்க அம்மாவை விட்டுடுங்க. உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க. நான் பண்ணித் தரேன்’ன்னான். உடனே கத்துரு ஒரு ஐடியா பண்ணினாள். அம்மாவை அடிமையாக்கியாச்சு. இவனையும் ஏதாவது கஷ்டமான வேலையைச் சொல்லி மடக்கிப் போட்டுட வேண்டியதுதான்னு நினைச்சா. அதனாலே, அவன்கிட்ட தேவலோகத்திலே இருக்கற அமிர்தத்தைக் கொண்டு வரும்படி சொன்னா. கருடனுக்கோ அது ஒண்ணும் பெரிய வேலையாகத் தெரியலே. ஏன்னா, அப்படிக் கொண்டு வந்துட்டானா அம்மாவை விடுதலை செய்துடலாமே?
‘‘கருடன் புறப்பட்டான். ஆனா அமிர்தத்தைக் கொண்டு வர்றது ஒண்ணும் அவ்வளவு சுலபமாக இல்லை. அமிர்தத்தை எடுக்க அந்நியன் ஒருத்தன் வர்றான்னு தெரிஞ்சதுமே அதைக் காவல் காத்துக்கிட்டிருந்தவங்க அவனைத் தடுத்தாங்க. ஆனா கருடனோ, கொஞ்சம் கூட தயங்காம பாய்ந்து பாய்ந்து அவங்களைத் தாக்கினான். அவங்கள்லாம் அவனோட தாக்குதலை சமாளிக்க முடியாம வீழ்ந்தாங்க. யாரோ அந்நியன் அமிர்தத்தைத் திருட வந்திருக்கான்னு தெரிஞ்ச தேவர்களும் தேவேந்திரனும் அவனை எதிர்க்க ஓடி வந்தாங்க. அவங்களை, குறிப்பாக தேவேந்திரனை எதிர்க்க தன்னால் முடியுமா? என்று கருடன் யோசிக்கும்போதே தேவேந்திரன், தன்னோட வஜ்ராயுதத்தையே கருடன் மேல வீச நினைச்சான்.’’
‘‘இதே வஜ்ராயுதம்தானே சூரியனைப் பழம்னு நினைச்சு பிடிக்கப் போன அனுமனைத் தாக்கினது?’’ கிருத்திகா கேட்டாள்.

‘‘ஆமாம், அதுவும் இந்திரன் அவனை நோக்கி வீசினதுதான். அனுமனுக்கு அந்த வஜ்ராயுதம் தாக்கி அவன் கன்னம் ஒட்டிப் போச்சு. ஆனா கருடன் ரொம்பப் பணிவோட அந்த வீச்சு தன்மேல படாதபடி தலை குனிஞ்சுண்டான். அதோட இந்திரனை நமஸ்காரம் பண்ணினான். ‘உங்களோட வஜ்ராயுதம் ரொம்பவும் விசேஷமானது. அந்த அற்புதமான ஆயுதத்திற்கு என்னோட காணிக்கை ஒண்ணு தரணும்னு ஆசைப்படறேன். என் இறக்கை ஒண்ணைத் தர்றேன்’ அப்படின்னு சொல்லி அதே மாதிரி கொடுத்தான்...’’
‘‘பரவாயில்லையே, கருடனா இருந்தும் நல்லா காக்கா
பிடிக்கறாரே!’’ தீபா சொன்னாள்.

‘‘கருடன் ஒரு சிறகைக் கொடுத்ததும் ரொம்ப சந்தோஷமாயிட்டுது இந்திரனுக்கு. ‘சரி, உனக்கு என்ன வேணும்?’னு கேட்டான். அதுதான் சமயம்னு நினைச்ச கருடன் ‘என்னோட அம்மா, கத்துருவிடம் அடிமையாக இருக்கறாங்க. அதுக்கு ஈடா உங்க லோகத்திலே இருக்கற அமிர்தத்தைத் தந்தா விட்டுடுவாங்க. எனக்கு அந்த அமிர்தத்தை தந்து உதவ முடியுமா?’ன்னு கேட்டான். அவன் பரிதாபமாகக் கேட்டது இந்திரனோட மனசை உருக்கிடுச்சு. ‘சரி, போ, போய் எடுத்துக்கோ’ அப்படீன்னு அனுமதி கொடுத்தான். உடனே அமிர்தத்தை எடுத்துக்கிட்டு தன்னோட இருப்பிடத்துக்கு ஓடி வந்தான்...’’
‘‘அப்பாடா, அவனோட அம்மா விடுதலையாயிட்டாங்களா?’’ புவனேஸ்வரி
கேட்டாள்.

‘‘வேற வழி? எது முடியாதுன்னு கத்துரு நினைச்சாளோ அதை இவ்வளவு சுலபமாக கருடன் முடிச்சுண்டு வருவான்னு அவ எதிர்பார்க்கலே. அவ்வளவு சிரமமான வேலையையே இவனால முடிஞ்சுதுன்னா, இவன் பராக்ரமசாலியாகத்தான் இருப்பான். இவனால நமக்கும் ஏதாவது ஆபத்து வரலாம்னு யோசிச்சா. அதனால மரியாதையா வினதையை விடுவிச்சா. தன் மகனோட புத்திசாலித்தனத்தால தான் விடுதலையானதை நினைச்சு வினதை ரொம்பவும் சந்தோஷப்பட்டாள். அவனோட வீரம், தேவேந்திரனையே சந்திக்கக் கூடிய தைரியம், சமயோஜிதம் எல்லாம்தான் அதுக்குக் காரணம்னும் தெரிஞ்சிக்கிட்டா. இந்த கருடனை நினைச்சு திருமணமான பெண்கள் வழிபட்டா, அவங்களுக்குப் பிறக்கப்போற குழந்தைகள் வீரம், தைரியம், சமயோஜிதம், விசாலமான அறிவாற்றல்னு பராக்ரமசாலியா விளங்குவாங்க,’’ மாமி கதையை சொல்லி முடித்தாள்.
‘‘சரி மாமி, இந்த விரதம் பத்தி சொல்லுங்க.’’புவனேஸ்வரி
கேட்டாள்.

‘‘கருட பஞ்சமி விரதம்னு இதுக்குப் பேரு. இந்த வருஷம் ஆடி மாசம், வளர்பிறை பஞ்சமி அன்னிக்கு (அதாவது ஜூலை-23) வர்ற இந்த விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் புதுசா கல்யாணம் ஆன பெண்கள் இந்த விரதத்தை அனுசரிச்சா ரொம்ப விசேஷம். காலையில குளிச்சிட்டு, சுத்தமான, வழக்கமான உடைகளை உடுத்திக்கிட்டு பூஜையறையிலே உட்கார்ந்துக்கோங்க. ஏற்கனவே வாங்கி வெச்சிருக்கிற உதிரிப் பூக்களால பூஜையறையை அலங்காரம் பண்ணிக்கோங்க. ஐந்து வண்ணங்களால அழகா ஒரு கோலம் போட்டுக்கணும். அந்த கோலத்தின் மேல ஒரு பலகையை வையுங்க. அதுக்கு மேல ஒரு தலைவாழை இலையைப் போட்டு அதிலே அரிசியைப் பரப்பி வைக்கணும். பரப்பிய அரிசிக்கு நடுநாயகமாக ஒரு ஆதிசேஷன் பொம்மையை வையுங்க. அவரவர் சக்திக்கேற்ப தங்கம், வெள்ளி, தாமிரம் அல்லது  மண்ணாலான ஆதிசேஷன் பொம்மையை வைக்கலாம். ஆதிசேஷனாகக் கிடைக் கலேன்னா ஏதேனும் பாம்பு
உருவத்தை வைக்கலாம்....’’
‘‘என்ன மாமி இது, கருட பஞ்சமின்னு சொல்லிட்டு பாம்பு சிலையை வைக்கச் சொல்றீங்க?’’ கிருத்திகா அவசரமாகக்
கேட்டாள்.

‘‘நியாயமான கேள்விதான். கருடபஞ்சமி விரதத்திலே நாகம் எங்கேயிருந்து வந்தது? இந்திரன்கிட்ட அமிர்தம் கேட்க கருடன் போயிருந்தான் இல்லையா, அப்ப கருடனுக்கு அமிர்தம் கொடுத்த இந்திரன், எந்தப் பாம்பு கூட்டத்தால அவனோட அம்மா கத்துருவுக்கு அடிமையானாளோ, அந்த பாம்புகள்லாம் கருடனுக்கு அடிமையாக, அவனுக்கு பயந்து வாழும்னு அவனுக்கு வரம் கொடுத்தார்...’’
‘‘ஓஹோ....அப்புறம்?’’ புவனேஸ்வரி கேட்டாள்.

‘‘அந்தப் பாம்பு வடிவத்துக்கு முன்னாலே மஞ்சள் தூளில் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விரல்களால பிடிச்சு சின்னதா கூம்பு வடிவம் ஒண்ணு பண்ணிக்கணும். இந்த மஞ்சள் பிடியை பார்வதி தேவியாக நினைச்சுக்கணும். உளமாற, ஆழ்ந்த ஈடுபாட்டோட மனமுருகி வேண்டிக்கோங்க. ஏதேனும், அம்மன் பாடல்களைத் தொடர்ந்து பாடுங்க. அம்மன் ஸ்தோத்திரம் சொல்லுங்க. ஆடியோ ஸி.டியில கூட போட்டுக் கேட்கலாம். பால் நைவேத்தியம் பண்ணலாம். கற்பூரம் காட்டி மணியடிச்சு பூஜையை முடிக்கலாம். காலையிலிருந்து இந்த பூஜை முடியறவரைக்கும் ஆகாரம் எதுவும் சாப்பிடாம விரதம் இருக்கறது நல்லது. இந்திரன் கொடுத்த வரத்தால இப்பகூட கருடன்னா பாம்புகளுக்கு பயம்தான். ஆனா ஜாதகத்தை நம்பறவங்க, அதிலே நாக தோஷம் ஏற்பட்டிருந்தா, அதனால தனக்கோ அல்லது தன்னோட குடும்பத்துக்கோ ஏதாவது பாதிப்பு வரக்கூடுமானா, கருடனைக் கண்டு ஒளிஞ்சிக்கிற பாம்பு போல, இந்த விரதத்தைக் கடைப்பிடிச்சவங்களைக் கண்டு நாக தோஷமும் ஓடியே போய்டும்னு பெரியவங்க சொல்வாங்க. அது மட்டுமில்லே. கருடனோட பொறுமை, வீரம், சாமர்த்தியம்னு எல்லா நல்ல குணங்களும் பிறக்கப் போற குழந்தைக்கு அமையும்னும் சொல்வாங்க. அப்புறம் என்ன, சந்தோஷம்தான், சுபிட்சம்தான்...’’ மாமி முடித்தாள்.
ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்