ஆளவந்தாரின் மூன்று ஆசைகள்!





திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சார்ங்கபாணி என்ற ஆரா அமுதன். இவர் மூலமாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன்தான் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார்குடியில் அவதரித்தவர்களே.

நாத முனிகளின் விருப்பப்படியே இவருக்கு யமுனைத்துறைவன் என்ற திருப்பெயர் சூட்டப்பட்டது. தமது இளமைப் பருவத்திலேயே சகல கலைகளிலும் தேர்ந்து சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். இவர் சோழராஜனின் புரோகிதரான ஆக்கியாழ்வானை வாதில் வென்றார். இவரின் வெற்றிக்கு பரிசாகக் கிடைத்த பாதி ராஜ்யத்தை திறம்பட நிர்வகித்தார். யமுனைத் துறைவனின் தேஜஸைக் கண்டு சோழ அரசி இவரை வாழ்த்தி வணங்கி, ‘‘எமை ஆளவந்தீரோ?’’ என்று கேட்டு வியந்தாள். அதனால் இவருக்கு ஆளவந்தார் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே நிலைத்து விட்டது.

தனக்குப் பரிசாகக் கிடைத்த நாட்டை ஆண்டபடி, மிகவும் ஆனந்தமாக நாட்களைக் கழித்த இவரை மணக்கால் நம்பி என்ற மகான் தடுத்தாட்கொண்டார். ‘‘உமது பரம்பரை சொத்து திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள திருவரங்கனே’’ என்று அறிவுறுத்தினார். அதையடுத்து அவரின் வாழ்க்கை திசை மாறியது. அரங்கத்தரவணையானை சரணடைந்து அரங்கத்தையே வைணவத் தலைநகரமாகக் கொண்டு வைணவம் வளர்த்தார். பெரும் விற்பன்னர்களால் சூழப்பட்ட ஆசார்யனாய்த் திகழ்ந்தார்.

இவருக்கு பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, மாறநேரி நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, திருமாலையாண்டான், வானமாமலை ஆண்டான் என்ற பின்னாளைய மகான்கள் சீடர்களாய் அமைந்தார்கள். இவர்களில் சிலர் பகவத் ராமானுஜருக்கே ஆசார்யர்களாய் விளங்கினார்கள். ஒரு முறை காஞ்சிபுரம் வந்தபோது, யாதவப்பிரகாசரின் சீடராய் விளங்கிய ராமானுஜரை திருக்கச்சி நம்பி மூலம் அறிந்து, இவரே ‘‘ஆம் முதல்வன் - பிற்காலத்தில் வைணவத்தின் சிறப்பினை பெருக்குவார்’’ என்று ஆசி வழங்கினார். இதனையறிந்த ராமானுஜரும் ஆளவந்தாரையே தனது ஆசானாக ஏற்க விரும்பி திருவரங்கம் செல்ல முனைந்தார். ஆனால் ஆளவந்தார் இறையுடன் இணைந்து விட்டதைக் கண்டு மனம் வருந்தினார். ஆளவந்தாரின் பூதவுடலில் மூன்று விரல்கள் நீண்டு இருந்ததைக் கண்டு அங்கு கூடியிருந்தவர்களிடம், ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகள் பற்றி அறிந்து, ‘அவரது அருளாலே அந்த ஆசைகளை அடியேன் நிறைவேற்றுவேன்’ என்று சூளுரைத்தார். அவ்வாறு அவர் உறுதி எடுத்துக்கொண்ட உடனே ஆளவந்தாரின் நீண்டிருந்த விரல்கள் மடிந்துகொண்டன; ராமானுஜருக்கு ஆசி வழங்கின.

அதன்படியே வியாஸ சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதினார் ராமானுஜர். நம்மாழ்வார் திருவாய் மொழிகளுக்கு விரிவுரை அளித்தார். முதன்முதலில் வைணவ சம்பிரதாயத்தில்
ஸ்லோகங்களை செய்தருளிய மகான் ஆளவந்தாரே.
- எம்.என்.ஸ்ரீனிவாசன்