இதய நோய்களில் மரபணுக்களின் பங்கு!



இதயமே…இதயமே…ஹெல்த் கைடு!

இதய நோய் (Heart Disease) உலகளவிலும், இந்தியாவிலும் இறப்புக்கான காரணிகளில் முன்னணி வகிக்கும் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு பொதுவாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் இயக்கம் அதிகம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே மேற்கொள்ளும் பணி முறையிலான வாழ்க்கை முறை போன்ற அபாயக் காரணிகள்தான் காரணம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. 

இருப்பினும், உடல் திறன் மிக்கவர்களாகத் தோன்றும், சரியான உணவுப் பழக்கம் உள்ள நபர்களுக்கும் கூட இளம் வயதிலேயே தீவிரமான இதயப் பாதிப்புகள் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இங்குதான் ‘மரபியல்’ (Genetics) முக்கிய பங்கு வகிக்கிறது. பரம்பரை பரம்பரையாகத் தொடரும் மரபணுக்களை நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து பெறும் போது, இதய நோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. 
இதயத் துடிப்பு கோளாறுகள் (Arrhythmia), பிறவியிலேயே இருக்கும் இதயக்குறைபாடுகள், இதய தசை கோளாறுகள் (Cardiomyopathy), உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு (Cholesterol) போன்ற பல இதய நோய்கள் மரபணு வழியாகத் தொடரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபத்துக் காரணிகள்

பலருக்கு, இதய நோய் என்பது பல்வேறு ஆபத்து காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மரபணு குறைபாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல சிறிய மரபணு மாறுபாடுகள், உடல் நலத்தைப் பாதிக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுடன் சேரும்போது, அது கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease) அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. 

குடும்பத்தில் யாருக்கேனும், குறிப்பாக இளம் வயதில் இதய நோய் வந்திருந்தால், இத்தகைய பரம்பரைத் தன்மை அடுத்தவர்களுக்கும் தொடர வாய்ப்புள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாகும்.

ஒற்றை மரபணுக் குறைபாடு

ஒரு சிலருக்கு, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் ஒரேயொரு குறைபாடுள்ள மரபணுவால் (Faulty Gene) இதயம் தொடர்பான பிரச்சினை ஏற்படுகிறது. இது ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி (Hypertrophic Cardiomyopathy), டைலேட்டட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy) மற்றும் அரித்மோஜெனிக் கார்டியோமயோபதி (Arrhythmogenic Cardiomyopathy) போன்ற நிலைமைகளில் அதிகம் காணப்படுகிறது. 

இந்நிலைகளில் இதயத் தசை வழக்கத்திற்கு மாறாக தடிமனாகவோ, பலவீனமாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ மாறக்கூடும். சில மரபணு பிறழ்வுகள், மரபுவழியாகத் தொடரும் இதயத் துடிப்பு சம்பந்தமான நோய்களை உருவாக்குகின்றன. 

இவை இதயத்தின் மின் அமைப்பைப் பாதிப்பதோடு இதயத்துடிப்பில் அபாயகரமான மாற்றங்களையும் உருவாக்குவதோடு, சில சமயங்களில் இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்களிடத்தில் திடீர் மாரடைப்பு மரணத்தையும் (Sudden Cardiac Death) ஏற்படுத்தலாம். 

இளம் வயதினர் மற்றும் ஆரோக்கியமாகத் தோற்றமளிப்பவர்களுக்கு உண்டாகும் திடீர் மரணங்கள் பல மரபணு சார்ந்த இதய நோய்களுடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வு பரவ வேண்டியது மிக மிக அவசியம்.

எச்சரிக்கை அறிகுறிகள்

பரம்பரையாக வரும் மரபணு சார்ந்த இதய நோய்கள் பல ஆண்டுகளாக எவ்வித அறிகுறியையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். எனவே குடும்ப வரலாற்றில் உள்ள எச்சரிக்கை அறிகுறிகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். 

குடும்பத்தில் யாருக்கேனும் 50 வயதுக்கு முன்பே மாரடைப்பு, இதயச் செயலிழப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலோ, காரணமில்லாமல் அடிக்கடி மயக்கம் வருதல், வலிப்பு அல்லது தூக்கத்திலோ உடற்பயிற்சியின் போதோ ஏற்படும் திடீர் மரணங்கள் நிகழ்ந்திருந்தாலோ அவற்றை எச்சரிக்கை மணி (Red flags) என்று எடுத்துக்கொள்ள வேண்டும். 

உறவினர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால், இதய தசை நோய் (Cardiomyopathy) அல்லது பேஸ்மேக்கர் (Pacemaker) பொருத்தப்பட்டிருந்தாலோ, அவற்றை பரம்பரையாகத் தொடரும் மரபணு சார்ந்த பிரச்சனைக்கான சாத்தியக்கூறுகளாக இருக்கலாம் என்று கவனத்தில் கொள்ள வேண்டும். 

குடும்பத்தில் ஒருவருக்கு இதுபோன்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கு நோய் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், பிரச்சனைகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற உதவும்.

மரபணுப் பரிசோதனையின் பங்கு

இந்தச் சூழலில் மரபணுப் பரிசோதனை (Genetic Testing) ஒரு முக்கியமான கருவியாகச் செயல்படுகிறது. ஒருவரின் ரத்தம் அல்லது உமிழ்நீர் மாதிரி ஆய்வு செய்யப்பட்டு, குடும்பத்தில் ஒருவருக்கு குறிப்பிட்ட மரபணு மாற்றம் கண்டறியப்பட்டால், மற்ற உறவினர்களுக்கும் அதே மாற்றம் உள்ளதா எனப் பரிசோதிக்கலாம். 

முடிவு ‘பாசிட்டிவ்’ (Positive) என்று வந்தால், நோய் வருவது உறுதி என்று பொருளல்ல; ஆனால் நோய் வரும் ஆபத்து அதிகம் என்பதையும், தொடர் மருத்துவக் கண்காணிப்பு தேவை என்பதையும் அது குறிக்கிறது. முடிவு ‘நெகட்டிவ்’ (Negative) என்று வந்தால், அது உறவினர்களுக்கு நிம்மதியை அளிப்பதுடன், தேவையற்ற சோதனைகளைத் தவிர்க்கவும் உதவும். 

தெளிவான காரணமின்றி திடீர் மரணங்கள் நிகழ்ந்த குடும்பங்களில், இறப்பிற்குப் பிந்தைய மரபணு ஆய்வு (Molecular Autopsy) மூலம் காரணத்தைக் கண்டறிய முடியும். இதன் மூலம், உயிருடன் இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கான முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்

மரபணுப் பரிசோதனை செய்யாவிட்டாலும், குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு குறித்த வரலாற்றைப் பற்றி தெரிந்திருப்பது மிகவும் மதிப்புமிக்க தகவலாகும். இந்த தகவலை உங்களது மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, உங்களுக்கு ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இசிஜி மற்றும் எக்கோகார்டியோக்ராம் போன்ற பரிசோதனைகளை முன்கூட்டியே மேற்கொண்டு உங்களுக்குப் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறியவும், தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் இந்தப் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் பாதிப்பு குறித்த முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள மருத்துவர் உதவுவார். 

இதய நோய் பரம்பரையாகத் தொடரும் வாய்ப்பு உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக முக்கியம். உயர் கொலஸ்ட்ரால் அல்லது பிறைத் தமனி நோய்க்கான மரபணுப் போக்கு உள்ள ஒருவருக்கு, உணவுக்கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, புகைப்பழக்கத்தை தவிர்த்தல், மது அருந்துவதை கட்டுப்படுத்துதல், சரியான உடல் எடையைப் பராமரித்தல் மற்றும் மன அழுத்தத்தைக் கையாளுதல் ஆகியவை நோயின் தீவிரத்தை கணிசமாகத் தாமதப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். 

இதற்காக ரத்த அழுத்தம் அல்லது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் உங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்படலாம். தொடர்ந்து கண்காணிப்பு சோதனைகளையும் மேற்கொள்ள பரிந்துரைக்கப்படலாம்.

சிகிச்சை முறைகள்

பரம்பரை இதயத் துடிப்பு கோளாறுகள் அல்லது இதயத் தசை நோய்கள் உள்ள நபர்களுக்களுக்கான சிகிச்சையில், பீட்டா பிளாக்கர்கள் (Beta blockers) போன்ற மருந்துகளும், அதேபோல், கடினமான போட்டி விளையாட்டுகளைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்படலாம்.சில நேரங்களில் சில மருத்துவ நடைமுறைகளும், சாதனங்களின் உதவியும் தேவைப்படலாம். 

சில நேரங்களில் இம்ப்ளாண்டெபிள் கார்டியோவெர்டர் டீஃபிப்ரிலேட்டர் [Implantable Cardioverter Defibrillator (ICD)] போன்ற சாதனங்கள் இதய துடிப்பு கோளாறுகளை சில விநாடிகளில் கண்டறிந்து சரிசெய்யும் திறன் உடையவை. இதன் மூலம், திடீர் இதய செயலிழப்பைத் தடுக்க உதவும். மரபணு அறிவு, துல்லியமான கண்காணிப்பு மற்றும் நவீன சிகிச்சைகள் இணைந்து திடீர் மரண அச்சத்துடன் வாழும் பல குடும்பங்களின் எதிர்காலத்தை மாற்றியுள்ளது.

சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை

‘மோசமான மரபணுக்கள்’ (Bad genes) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, நமக்குள் நம்மையும் அறியாமலேயே பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால், மரபியலை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், உயிர் காக்கும் ஒரு தகவலாகப் பார்க்க வேண்டும்; அது உங்களை முன்கூட்டியே தற்காத்துக் கொள்ள உதவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உதவும் ஒரு வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மரபணு வழி ஆபத்து இருப்பதை அறிந்தவுடன், பலர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு, தங்களின் இதய நலனை சீராகக் கண்காணிக்க ஆரம்பிக்கின்றனர். அவர்களைப் போலவே, உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் தீவிரமான இதயப் பாதிப்பு இருந்தால், மரபணு ஆலோசனை (Genetic Counselling) மற்றும் விரிவான இதயப் பரிசோதனை உங்களுக்குத் தேவைப்படுமா என்பதை உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும். போதிய விழிப்புணர்வுடன் இருப்பது உங்கள் இதயத்தையும், உங்கள் பாசத்திற்குரியவர்களின் 
இதயத்தையும் பாதுகாக்க உதவும்!

இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது