பருப்புகள் பல விதம்!
நமது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளில் பருப்பு வகைகள் முக்கியமாக இடம் பெறுகின்றன. இதனால்தான் இந்தியர்களின் அன்றாட உணவு கலாச்சாரத்தில் பருப்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பருப்பு வகைகளில் உடல் சுறுசுறுப்பாக இயங்க தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பருப்பு வகைகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறித்தும் பருப்புகளின் பயன்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் உணவியல் நிபுணர் சங்கீதா. அந்தவகையில் நாம் முதலாவதாக பார்க்கப்போவது துவரம் பருப்பின் பயன்கள்.  துவரம் பருப்பு முக்கியப் பயறு வகையைச் சார்ந்தது. இதன் தாவரப் பெயர், காஜனஸ் காஜன் (cajanus cajan). இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் துவரம் பருப்பு அதிகம் பயிரிடப்படுகிறது.
துவரம் பருப்பின் சத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடு
துவரம் பருப்பில் மனித உடலுக்கு தேவையான பல முக்கிய சத்துக்கள் உள்ளன. இதில் அதிக அளவில் புரதச்சத்து, உயர்ந்த நார்ச்சத்து, இரும்புசத்து, பொட்டாசியம், விட்டமின் பி கூட்டுச் சத்துக்கள் உள்ளன. துவரம் பருப்பை உணவில் அடிக்கடி சேர்ப்பது உடலின் வளர்ச்சி, தசைகளின் பலம், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது செரிமானத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடலின் ஆற்றலை அதிகரிக்கவும், ரத்தக் குறைவைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பும் நபர்களுக்கும் துவரம் பருப்பு மிகவும் பயனுள்ளதாகும்.
உணவில் துவரம் பருப்பின் முக்கியத்துவம்
இந்திய சமையலில் துவரம் பருப்பு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பாக தமிழ்நாட்டில் இதைக் கொண்டு சாம்பார், குழம்பு, பருப்பு ரசம், பொரியல் வகைகள், பிரசாத வகைகள், பருப்பு சாதம் போன்ற பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
துவரம் பருப்பு சமைக்க எளிதானது. அதை ஊற வைத்து சமைத்தால் விரைவாக வேகுவதோடு சுவையும் கூடுதலாக இருக்கும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவுப் பொருளாக இது கருதப்படுகிறது. இரண்டு வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்கு துவரம் பருப்பு கொடுக்கலாம்.துவரம் பருப்பு மலிவு விலை புரதச்சத்து உணவாக கருதப்படுகிறது. ஆனால், உண்மையில் இது உயர்ந்த புரொட்டீன் மற்றும் நார்ச்சத்தைக் கொண்ட சூப்பர் உணவு ஆகும்.
துவரம் பருப்பு (slow release energy)
ஒருமுறை உணவில் சேர்த்தால் உடலுக்கு நீண்ட நேரம் ஆற்றலை வழங்கும் தன்மை துவரம் பருப்புக்கு உண்டு. அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மலிவு விலையில் கிடைக்கக் கூடிய உணவாகும். இந்த பருப்பு புரதத்துடன், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆற்றலை மெதுவாக வழங்கும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றை தருகிறது.
தமிழர்களின் தினசரி ஊட்டச்சத்து திட்டத்தில் தவறாமல் இடம் பெறும் உணவாக துவரம் பருப்பு திகழ்வதால், இது உண்மையில் ஒரு சத்துப் பேரரசன் எனலாம். சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு தசை வளர்ச்சி மற்றும் உடல் ஆற்றலுக்கு தேவையான புரதம் துவரம் பருப்பிலிருந்து கிடைக்கும். இதன்காரணமாகவே, பருப்பு வகைகளில் துவரம் பருப்பு முதலிடத்தில் உள்ளது.
(தொடரும்)
- ஸ்ரீதேவி குமரேசன்
|