நெல்லை சொதி குழம்பு!உணவே மருந்து

சமையற்கலையை சாகாக் கலையாகவும், உணவை காய கல்பமாகவும் மாற்றி வாழ்ந்து காட்டியவர்கள் நம் முன்னோர்கள். நம் பாரம்பரியத்தின் பெருமையை பறைசாற்றும் சான்றுகளில் ஒன்று நெல்லை சொதி குழம்பு. இது பற்றி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் விக்னேஷ்வரனிடம் கேட்டோம்...

‘‘தமிழர்கள் உலகளவில் இன்றும் தனித்துவம் பெற்று பெருமையுடன் திகழ்வதற்கு, அவர்களுடைய பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் உலகமே வியக்கும் வாழ்க்கை முறைகளும்தான் காரணம். இவற்றுள் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பும், உணவு முறைகளும் மறுக்கவும், மறக்கவும் இயலாத பொக்கிஷம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிலும் காலசூழலுக்கு ஏற்றவாறு முறைகளை மாற்றி ஆரோக்கியத்தைப் பேணி வாழ்ந்து காட்டிய நம் முன்னோரின் பெருமையையும் அறிவாற்றலையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

உடல் ஆரோக்கியம் காக்கும் உணவுகளில் திருநெல்வேலியின் தொன்மையையும், அந்த நகருக்கே உண்டான தனித்தன்மையையும் தன்னுள்ளே கொண்டு நெல்லையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் சொதி குழம்பின் சிறப்புகள் மற்றும் செய்முறை பற்றி பார்ப்போம்.

தேங்காய்ப்பால் சேர்த்து சமைக்கப்பட்ட காய்கறி கலவைக்கு சொதி என்று பெயர். இந்தச் சொதி குழம்பானது பல வகைகளில் வைக்கப்பட்டாலும் எளிமையான, பிரபலமான முறையைப் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம். இந்தக் குழம்பு சற்று இனிப்புச் சுவையுடையது என்பதாலும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் இதனோடு இஞ்சித் துவையலையும் சேர்த்து பரிமாறுவார்கள்.

ஆரோக்கியம் தரும் ஆஹா சுவை சொதி குழம்பு நம் நாக்கிற்கு சுவை தருவதோடு மட்டும் அல்லாமல் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் அருமருந்தாகவும் உள்ளது. இந்தக் குழம்பிலுள்ள காய்கறிகளும், பருப்பும் நாளொன்றுக்கு நமக்கு தேவையான ஆற்றல், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது.

சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் குடல் புற்றுநோய், ரத்தக்கொதிப்பு போன்றவைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றிலுள்ள அலிசின், டை அலைல் டை சல்பைடு போன்றவை இப்பணியை செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. பாசிப்பயிறை ஒரு சத்துப்பெட்டகம் என்றே கூறலாம். ஏனெனில் அது B1, B2, B5 போன்ற வைட்டமின்களையும், அதிகப்படியான புரதச்சத்தையும், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுக்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

மேலும் பாசிப்பயிறில் உள்ள விடிக்சின், ஐசோவிடிக்சின் போன்றவை இளமையைக் காக்கும் பெருமருந்தாக உள்ளது. தேங்காய்ப்பாலானது குடல் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது. மேலும் இது உடலுக்கு பலத்தைக் கொடுப்பதோடு, பல சரும பிரச்னைகளையும் தீர்க்க வல்லது. இச்சொதி குழம்பில் தேங்காய்ப்பால் கனமாக சேர்ப்பதால் அது எளிதில் செரிமானமடைய இஞ்சித் துவையல் உதவியாக இருக்கிறது. இஞ்சி செரிமான ஊக்கியாக மட்டுமன்றி ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நிரம்பப் பெற்றுள்ளதால் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவாக திகழ்கிறது இந்த சொதி குழம்பு!

சொதி குழம்பு வைக்க தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
சீரகம் - 10 கிராம்
முருங்கைக்காய் - 1
பீன்ஸ் - 4
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு பல் - 10
சிறு வெங்காயம் - 10
உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கு
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை}-தேவைக்கு எலுமிச்சை பழம் - அரை அளவு

செய்முறை:

முதலில் தேங்காயை அரைத்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியான தேங்காய்ப்பால் எடுக்க வேண்டும். பின்பு இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப்பாலையும் நீர்விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசான மணம் வருமளவு வறுத்து வேக வைத்துக் கொள்ளவும். மூன்றாவதாக எடுத்த நீர்த்த தேங்காய்ப்பாலில் நீளவாக்கில் நறுக்கிய மேற்கண்ட காய்கறிகளையும், எண்ணெயில் லேசாக வதக்கிய பூண்டு, சிறுவெங்காயத்தைச் சேர்த்து வேக விடவும்.

காய்கறிகள் வெந்து வரும்போது இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை சேர்த்துக் கொள்ளவும். இதில் நாம் எடுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். இந்தக் குழம்பில் வேகவைத்த பாசிப்பருப்பை மசித்து சேர்த்துக் கிளறவும். நன்கு கொதித்ததும் அடுப்பிலிருந்து குழம்பை இறக்கிவிடவும்.

அடுத்ததாக வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி குழம்பில் கலந்து, மீண்டும் ஒரு கொதி வருமளவு குழம்பினை அடுப்பிலிடவும். கடைசியாக கெட்டியான முதல் தேங்காய்ப்பாலை குழம்பில் ஊற்றி சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து நன்றாக கிளறவும்.

கெட்டியான தேங்காய்ப்பாலை கலந்த பின்பு குழம்பை கொதிக்க விடக்கூடாது. இப்போது சுவையான சொதி குழப்பு தயார். இந்தக் குழம்பானது இடியாப்பம், தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு மட்டுமின்றி சாதத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பாக இருக்கிறது. இது மட்டுமன்றி சொதி குழம்பினை பின்வரும் மேலும் பல வகைகளில் வைக்கின்றனர் நம் நெல்லை மக்கள்.

உதாரணமாக பசும்பால் சேர்த்து பால் சொதி, அசைவம் சேர்த்து இறால் சொதி, மீன் சொதி, கீரைகளை சேர்த்து கீரைச்சொதி, தக்காளி சொதி, மாங்காய் சொதி என பல வகைப்பட்ட சொதி குழம்புகள் நெல்லை மக்களின் வீடுகளிலும், விசேஷங்களிலும் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றன.

- க.கதிரவன்