கோழி முட்டையிலிருந்து இன்சுலின்
புதுமை
சர்க்கரை நோயாளிகளின் வாழ்வாதாரம் காக்கும் இன்சுலினை, கோழி முட்டையிலிருந்து உற்பத்தி செய்யலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். Journal of American Society வெளியிட்டிருக்கும் இந்த புதிய தகவல், மருத்துவ உலகில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
 இன்சுலின் பயன்பாட்டில் வேறுபாடுகள் உண்டு. சிலர் ஊசியாகப் போட்டுக் கொள்வார்கள். சில பிரிவினர் இன்சுலின் பம்பினை இடுப்பில் அணிந்துகொள்வார்கள். ஊசியாகப் போட்டுக் கொள்வதில் சிரமம் அதிகம் இல்லை. நோயாளிகள் தாங்களாகவே ஊசியைப் போட்டுக் கொள்ளும் அளவு அது எளிமையான செயல்முறையாகவே இருக்கிறது. ஆனால், இன்சுலின் பம்ப் என்பது கொஞ்சம் நுட்பமானது.
இடுப்பில் இன்சுலின் பம்ப் கருவியை அணிந்துகொள்ளும்போது, அடிக்கடி மாற்ற வேண்டி வரலாம். 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரையிலான இன்சுலின் பம்ப் பயன்பாட்டில், உள்ளிருக்கும் இன்சுலின் திரவமானது பாலானது திரிந்துபோவது போல சில நேரங்களில் Fibrils-ஐ உண்டாக்கிவிடும்.
இதனால், இன்சுலின் ஓட்டத்தில் அடைப்பு உண்டாகிவிடலாம். இந்த சிக்கலை கவனத்தில் கொண்டு புதிய முயற்சியில் இறங்கினார்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஃப்ளோரே பல்கலைக்கழகத்தினர். இந்த ஆய்வில் ஜப்பானின் ஒஸாகா பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து கொண்டனர்.
ஆராய்ச்சியின் முடிவில் கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து இன்சுலினைத் தயாரிக்க முடியும் என்பதையும், இந்த இன்சுலினானது Fibrils-ஐ உண்டாக்காது என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த புதிய இன்சுலினுக்கு க்ளைக்கோ இன்சுலின் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
6 நாட்களுக்கு ஒரு முறை இந்த இன்சுலின் பம்பினை மாற்றினால் போதும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.இதன் மூலம் சர்க்கரை நோயாளிகளின் நலம் காக்கப்படுவதுடன், பொருளாதார விரயமும் கட்டுப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கௌதம்
|