ஆட்டிசம் அச்சம் வேண்டாம்!Autism Awareness

மன இறுக்கம்(Autism spectrum disorder- ASD) அல்லது ஆட்டிசம் என்பது மூளை மற்றும் சிக்கலான நரம்பு வளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாக உள்ளது. மன இறுக்கம் உடைய சிறுவர்கள் பிறரோடு தொடர்பு கொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ளவும் சிரமப்படுவார்கள். மேலும் அவர்கள் நம்மால் கணிக்க இயலாத நடத்தை உள்ளவர்களாகவும், எளிதில் எரிச்சலடையக் கூடியவர்களாகவும், கல்வி கற்க சிரமப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சிறு சிறு விவரங்களிலும் கவனம் செலுத்தி, ஒரு சில செயல்பாடுகளில் பிறரைவிட அதிக திறமை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பின் புள்ளிவிவரப்படி, உலகில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் 80% பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன இறுக்கக் கோளாறால் ஏற்படுகிற வளர்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் சமூகப் பிரச்னைகள் பெரும்பாலும் பாகுபாடுகளுக்கு வழிவகுப்பது அல்லது சிறப்பு பெற்றோர் பராமரிப்பு மற்றும் மருத்துவ தேவைக்கு வழி வகுக்கும்.

ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள்

 ஆட்டிசக் கோளாறு ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால், அது மரபியல் மற்றும் சூழல் காரணிகளோடு தொடர்புடையதாக இருக்கலாம். இந்தக் கோளாறுடன் தொடர்புடைய பல மரபணுக்கள் இனம் காணப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மூளையின் பல பகுதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவர்களின் மூளையில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் Serotonin அல்லது வேறு நரம்புக் கடத்திகள் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மூளை வளர்ச்சியையும், மூளை உயிரணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் இருக்கிறது. இந்த மரபணுக்களின் செயல்பாடுகள் மீது சூழல் காரணிகளின் தாக்கமும் இருக்கக்கூடும். இந்த மரபணுக்களில் ஏற்படுகிற குறைபாடுகளால், கரு வளர்ச்சியின்போது இயல்பான மூளை வளர்ச்சியில் ஏற்படும் பிரச்னைகளே ஆட்டிசக் கோளாறாக வெளிப்படுகிறது.

ஆட்டிசம் அறிகுறிகள்

 ஆட்டிசம் பொதுவாக 3 வயதுக்கு முன் தோன்றி ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. பிறந்து சில மாதங்களிலேயே இந்தக் கோளாறு உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் உண்டாகப்போகும் பிரச்னைகளின் அறிகுறிகள் புலப்படும். சிலருக்கு 24 மாதம் வரை அல்லது அதற்கு மேலும் அறிகுறிகள் தென்படும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் 18 முதல் 20 மாதங்கள் வரை இயல்பாக வளர்கிறார்கள். அதன் பின்னர் அவர்களிடம் புதிய திறன்களைப் பெறுவது நின்று போதல் அல்லது இருக்கும் திறன்கள் இழந்துபோகிற நிலை ஏற்படுகிறது.

ஆட்டிசம் அறிகுறிகள்

இந்தக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தை 12 மாதம் வரை தனது பெயரைப் புரிந்து கொள்ளாது. 18 மாதங்கள் வரை விளையாடாது. பிறர் கண்களை பார்ப்பதைத் தவிர்த்து தனியாக இருக்கும். பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிரமப்படும்.

பேச்சும், மொழித்திறனும் காலம் கழித்தே வெளிப்படும். சொற்களையும், சொற்றொடர்களையும் திரும்பத் திரும்ப கூறும் (எதிரொலிப்புநோய்) பிரச்னை இருக்கும். கேள்விக்குத் தொடர்பில்லாத பதிலைத் தரும். சிறுசிறு மாற்றங்களைக்கூட விரும்பாது. அந்தக் குழந்தைகளை ஆட்டிப் படைக்கும் சில விருப்பங்கள் இருக்கும். சில வேளைகளில் கை தட்டுவது, உடலை ஆட்டுவது அல்லது வட்டமிட்டுச் சுழல்வது போன்ற நடத்தைகள் இருக்கும். ஒலி, மணம், சுவை, பார்வை, உணர்வு ஆகியவற்றிற்கு இந்தக் குழந்தைகள் அசாதாரணமான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

மன இறுக்கத்தின் வகைகள்

* Autistic Disorder (Classic Autism): இது மன இறுக்கத்தின் பொதுவான ஒரு வகையாக உள்ளது. இந்த வகை பிரச்னை உடையவர்களுக்கு மொழித்தடங்கல், சமூகம் மற்றும் தொடர்பு சார்ந்த பிரச்னைகள், இயல்பற்ற நடத்தைகளும் விருப்பங்களும் இருக்கும். இந்த வகை பிரச்னையுடைய பலருக்கு அறிவுத்திறன் குறைபாடும் இருக்கலாம்.

* Asperger Syndrome: இந்த வகை பிரச்னை உடையவர்களுக்கு மனவிறுக்கக் கோளாறின் லேசான அறிகுறிகள் இருக்கும். இவர்களுக்கு சமூகரீதியான சவால்களும், அசாதாரண நடத்தைகளும், விருப்பங்களும் இருக்கலாம். ஆனால், இவர்களுக்குப் பொதுவாக மொழி அல்லது அறிவுத்திறன் குறைபாடு இருப்பதில்லை.

* Pervasive Developmental Disorder- Not Otherwise Specified (PDD-NOS): இது படர் வளர்ச்சிக் கோளாறு அல்லது பிறழ்வு மனவிறுக்கம் என்று அழைக்கப்படுகிறது. மனவிறுக்கக் கோளாறு, அஸ்பெர்ஜர் கோளாறு ஆகிய இரண்டின் ஒரு சில அறிகுறிகள் இவ்வகையில் காணப்படும். ஆனால், அவற்றின் அனைத்து அறிகுறிகளும் காணப்படுவதில்லை. இந்த வகையில் மனவிறுக்கக் கோளாறைவிட லேசான, சில அறிகுறிகள் இருப்பதோடு, சமூக மற்றும் தொடர்பு சார்ந்த பிரச்னைகளும் உண்டாகிறது.

ஆட்டிசத்தைக் கண்டறிய...

ரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ சோதனைகள் எதுவும் இல்லாத காரணத்தால் இந்தப் பிரச்னையைக் கண்டறிவது கடினம். ஒரு குழந்தையின் நடத்தை மற்றும் வளர்ச்சியைக் கொண்டே இந்தப் பிரச்னையைக் கண்டறிய முடியும். சிறு குழந்தைகளில் ஆட்டிசம் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு அவர்களின் வளர்ச்சி மற்றும் நடத்தைகளை சரிபார்ப்பதற்கான ஒரு பட்டியல் உள்ளது. அதற்கு அவர்களைப் பற்றி கேட்டறிவது, தர்க்க முறையில் மதிப்பீடு செய்வது மற்றும் பொதுப் பரிசோதனை முறைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

மன இறுக்கக் கோளாறினை குணமாக்கும் சிகிச்சை என்று எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னையை மருந்துகள் மற்றும் சிறப்புப் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம். ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகள் பேச, நடக்க, பிறரோடு பழக என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாக பயிற்சிகள் உள்ளது.

இந்தக் கோளாறின் அறிகுறிகள் வெளிப்பட்ட ஆரம்ப நிலையிலேயே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி இப்பயிற்சிகளை மேற்கொள்வது, அந்தக் குழந்தையின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட உதவியாக இருக்கும். தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு ஏற்ப, நடத்தை, பேச்சு, கல்வி மற்றும் பணி ரீதியான பயிற்சிகளை அளிக்கலாம். தனிப்பட்ட அளவில் கவனம் செலுத்தினால் காலம் செல்லச் செல்ல அவர்களுடைய நிலைமைகள் சீரடையலாம்.

- தொகுப்பு: க.கதிரவன்