மறதியும் நல்லதுதான்!மாத்தி யோசி

வயது காரணமாக ஏற்படும் அல்ஸைமர், டிமென்ஷியா போன்ற நினைவு இழப்பு நோய் என்பது தீவிரமான மருத்துவ சிகிச்சைகளுக்குட்பட்டது. ஆனால், தினசரி வாழ்வில் ஏற்படும் ஞாபக மறதி என்பது இயல்பானதுதான். ஆனால், இதையே சிலர் அதிகம் யோசித்து கவலை கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சிலருக்கு குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மையைக் கூட ஞாபக மறதி உண்டாக்கிவிடுகிறது. ஆனால், இதை விஞ்ஞானிகள் வேறுவிதமாக பார்க்கிறார்கள். உண்மையில் ஞாபக மறதி, மூளையின் செயல்பாட்டில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அடிக்கடி பயன்படுத்தப்படாத விஷயங்களை மூளை மறக்கச் செய்கிறது. தேவையற்ற நிகழ்வுகளை நமது நினைவில் இருந்து குப்பையைப் போல் அகற்றி, முக்கிய நிகழ்வுகளை மட்டுமே நினைவில் வைக்க இந்த அமைப்பு உதவுகிறது.

ஆரோக்கியமான மூளைக்கு மறதி அவசியம். நம் மூளைகளில் மறதி எனும் செயல்பாடு நிகழவில்லையெனில், அதன் செயல்பாடு குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறதி இல்லையென்றால் நாம் எப்போதும் தேவையற்ற மற்றும் வேதனையான நினைவுகளால் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவர்கள், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். விஷயங்களை மறப்பதில் சிரமங்கள் உள்ளவர்கள் உளவியல் பிரச்னைக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மறதி நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைவில் வைத்துக் கொண்டேயிருந்தால், நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமது மூளையில் மறதியை நாம் அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிக விஷயங்களை நினைவில் வைத்திருப்பது நினைவாற்றலை மந்தமடையவே செய்யும். அதனால், பொருத்தமற்ற விஷயங்களை மறந்துவிடுவது ஒரு வகையில் நல்லது. எனவே, மறதி குறித்து அதிகம் வருத்தமடைய வேண்டியதில்லை.

இருப்பினும் நினைவாற்றலை அதிகரிக்க யோகாசனம், உடற்பயிற்சி, பிராணாயாமம் செய்வதோடு ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

- கௌதம்