வயிறும் வாழ்வும் இயல்பாகட்டும்!Irritable Bowel Syndrome

உலக அளவில் 6 முதல் 18 சதவிகித மக்கள் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெருங்குடலை பாதிக்கும் இது பயப்படக்கூடிய அளவுக்கு பெரிய பிரச்னை இல்லை. ஆனாலும் பாதிக்கப்பட்டவரின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும்.

வயிற்றில் ஏற்படக்கூடிய ஒருவித அசௌகர்ய உணர்வுடன் வலியும், மலம் கழிப்பதில் மாற்றமும் இருக்கும். அதாவது அடிக்கடி மலம் கழித்தல் அல்லது மலச்சிக்கல் இரண்டில் எதுவும் வரலாம். மலத்தின் தன்மையிலும் மாற்றம் இருக்கும். டீன் ஏஜ் முதல் நடுத்தர வயது வரை பாதிக்கும் இந்தப் பிரச்னையை இரிடபுள் பவல் சிண்ட்ரோம்(IBS - Irritable Bowel Syndrome) என்கிறோம்.

அறிகுறிகள்?

* கடுமையான வயிற்றுவலி
* வயிற்றுப் போக்கு
* வயிற்று உப்புசம்
* மலம் கழிக்கும்போது சிரமம் ஏற்படுதல்
* வாய்வுக்கோளாறு அதிகரித்தல்
* அடிவயிற்றுப்பகுதியில் வீக்கம்
* வயிறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தசைப்பிடிப்பு
* உணவு உண்பதில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல்
* வலதுபுறத்தில் மேல் வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுதல்காரணங்கள்...
* பெருங்குடல் மற்றும் சிறுகுடலின் சீரற்ற இயக்கம்.
* வாய்வு வெளியேறும்போது அல்லது மலம் வெளியேறும்போது வயிறு மற்றும் ஆசனவாயில் வலியுடன் வெளியேறுதல்.
* இனிப்பு மற்றும் அமில உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது.
* வயிற்றுக்கோளாறு, வயிறு தொடர்பான நோய்கள் அல்லது பாக்டீரியா தொற்று.
* பதற்றம், மனச்சோர்வு.
* ஹார்மோன் சுரப்பில் மாற்றம்.
* சிறுகுடலில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகரிப்பது எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

இதற்கென பிரத்யேக பரிசோதனை எதுவும் கிடையாது. அறிகுறிகளை வைத்து சில பரிசோதனைகளை மருத்துவர் மேற்கொள்ளச் சொல்வார். அதன்படி Flexible sigmoidoscopy அல்லது Colonoscopy மூலம் குடல் அழற்சி உறுதி செய்யப்படும். நெஞ்செரிச்சலோ, அஜீரணமோ இருந்தால் எண்டோஸ்கோபி தேவைப்படும். தவிர எக்ஸ்ரே, ரத்தம் மற்றும் மலப்பரிசோதனை, லாக்டோஸ் இன்டாலரன்ஸ், குளூட்டன் அலர்ஜிக்கான
டெஸ்ட்டுகள்.

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோமின் 3 வகைகள்

* வயிற்றுப்போக்குடன் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் : இந்த வகையில் வயிற்றுப்போக்குடன் ஆசனவாயில் எரிச்சல், வலி, வீக்கம், அடிக்கடி மலம் கழித்தல், மலம் கழித்து முடித்த உணர்வின்மை, குமட்டல், வாய்வுத்தொல்லை, வயிற்றுவலி, திடீரென மலம் வருதல் போன்றவை ஏற்படும்.

* மலச்சிக்கலுடன் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் : இந்த வகையில் மலச்சிக்கலுடன் ஆசனவாயில் எரிச்சல், வலி, மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது வலி ஏற்படுதல், மலம் கழித்து முடித்த உணர்வற்றுப்போதல், கடுமையான வயிற்றுவலி, வாய்வுத்தொல்லையுடன் கூடிய தசைப்பிடிப்பு வலி, வீக்கம் போன்றவையும் ஏற்படும்.

* மலச்சிக்கல், வயிற்றுப்போக்குடன் கூடிய இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம்: இந்த வகையில் கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலுடன் ஆசனவாயில் எரிச்சல், வலி, வீக்கம் போன்றவையும் ஏற்படும்.

சிகிச்சைகள்...

இதற்கென தனியே மருந்து மாத்திரைகள் கிடையாது. வாழ்வியல் மாற்றம், உணவு முறையில் மாற்றம் மற்றும் மன அமைதியே இரிட்டபிள் பவல்
சிண்ட்ரோமுக்கான சிகிச்சைகள்.

உணவுமுறை மாற்றங்கள்

நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். முழு தானியங்கள், சிவப்பரிசி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவைகொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதப் படுத்தும் பால் பொருட்கள், டீ, காபி, கார்பனேட்டட் பானங்கள், கஃபைன் மற்றும் ஆல்கஹால் நிறைந்த பானங்கள், காரம் மற்றும் மசாலா அதிகம் சேர்த்த உணவுகள், பொரித்த உணவுகள், நிறமூட்டிகள் நிறைந்த இனிப்புகள், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் வாய்வுத்தொல்லையை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க முடியுமா?

* சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும். அளவான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.
* புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கைக்குப் பழக வேண்டும்.
* செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும்.

- ராஜி

பிரேக்லைன் : உணவுமுறையில் மாற்றம் மற்றும் மன அமைதியே இரிட்டபிள் பவல் சிண்ட்ரோமுக்கான முக்கிய சிகிச்சைகள்.