சோதனைகளும்... சிகிச்சைகளும்!



நரம்புகள் நலமாக இருக்கட்டும்

சில வருடங்களுக்கு முன், ஒரு பள்ளிக்கூட ஆசிரியர், 10-வது படிக்கும் தனது 15 வயது மகன் இரவு நேரங்களில் தூங்கும்போது திடீரென்று கத்துவதாகவும், கை கால்களை வேகமாக வில்லைப்போல் சில நிமிடங்கள் வளைப்பதாகவும், பிறகு அப்படியே தூங்கி விடுவதாகவும், தன் மகனை கூட்டிக் கொண்டு வந்தார்.

‘ஆரம்பத்தில் இதன் தன்மை புரியாமல் தூக்கத்தில் கனவுகண்டு விட்டு, இவ்வாறு செய்கிறான் என்று இருந்தோம். ஆனால், இப்போது அடிக்கடி இவ்வாறு செய்வதால் தினமும் இரவு நேரம் வந்தாலே கவலையாக உள்ளது. என்ன செய்வது டாக்டர்’ என்று மிகுந்த சங்கடத்துடன் வினவினார். இதுபோன்று தூக்கத்தில் வருவதற்கு, இரண்டு காரணங்கள் உள்ளன.

தூக்கத்தில் ஏற்படும்((Night Terror, Nightmare) என்று சொல்வது அல்லது அது ஒரு வகை வலிப்பு நோயின் வெளிப்பாடாக இருக்கலாம். அந்த பையனுக்கு ஸ்லீப் ஈ.ஈ.ஜி எடுத்துப் பார்த்ததில் அவரது முன்பகுதி மூளையான ஃப்ராண்டல் லோப்(Frontal lobe) இருந்து வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. எனவே, இரவு நேரங்களில் இவ்வாறான அறிகுறிகள் வலிப்பு நோயின் வெளிப்பாடாக இருக்கலாம். இதனை ஆங்கிலத்தில் நாக்டர்னல் பிராண்டல் லோப் எபிலெப்ஸி(Nocturnal frontal lobe epilepsy) என்று கூறுவர் மற்றொரு நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறினார்.

 ‘தனது மகள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது படித்துக் கொண்டிருக்கும்போதோ திடீரென அவரது குணாதிசயத்தில் மாறுபாடு ஏற்பட்டு வெறித்துப் பார்ப்பது, வாயை சப்பு கொட்டுவது, கை கால்களை எதையோ தேடுவது போன்று அங்கும் இங்கும் துழாவுவது, நடக்க, ஓட முயற்சிப்பது, எச்சில் துப்புவது, குழப்பமாக பதில் கூறுவது, சிறிது நேரத்திற்கு தான் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் இருப்பது, நாம் கூப்பிட்டாலும் அதற்கு தக்க பதில் கூறாமல் இருப்பது, இப்படியே ஒரு 10 -15 நிமிடம் கழித்து, மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவது என்று இவ்வாறு சில நாட்களாக இருந்து வருகிறாள்.

இதற்கு என்ன காரணம், என்ன செய்வது என்று தெரியவில்லை. செய்வினை என்று கூறுகிறார்கள்; கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, எனக்கு ஒரு வழி கூறுங்கள்’ என்று தன் மகளை கூட்டிக் கொண்டு வந்தார். இவர் மகளுக்கு இருப்பது ஒருவித வலிப்பு நோய்க்கான வெளிப்பாடு.

இதனை காம்ப்ளக்ஸ் பார்ஷியல் சீசர்ஸ்(Complex partial seizures) அல்லது டெம்போரல் லோப் சீசர்(Temporal lobe seizure) என்று கூறுவோம். மூளையின் வலது இடது பக்கங்களில் இருக்கும் ‘டெம்போரல் லோப்பில்’(Temporal  Lobe) ஏற்படும் மின்னலை மாற்றத்தினால் வருவதே இதற்கான காரணம்.
5 வயதுக் குழந்தைக்கான தாய் ஒருவர், ‘தன்னுடைய குழந்தை அடிக்கடி வாந்தி எடுப்பதாகவும், கடந்த மூன்று மாத காலமாக குழந்தை நல மருத்துவ நிபுணரிடமும் மற்றும் குடல்நோய் சிகிச்சை நிபுணரிடமும் காண்பித்து வந்ததாகவும் வாந்திக்கான மருந்து மாத்திரைகள் பலவாறு கொடுத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

ஆகவே, அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் ஒருமுறை காண்பித்துவிட்டு வருமாறு கூறினர்’ என்று என்னை அணுகினார், அக்குழந்தைக்கு ஈஈஜி எடுத்துப் பார்க்கையில் குழந்தையின் பின்பகுதி மூளையான ஆக்ஸிபிடல் லோப்பில்(Occipital lobe) மின் அலை மாற்றங்கள் ஏற்படுவது தெரிய வந்தது. இதனை ஆக்ஸ்பிட்டல் லோப் வலிப்பு(Occipital lobe seizures) என்று கூறுவோம். இவ்வாறு பின்பக்க மூளையில் ஏற்படும் மின்னலை மாற்றம் மூளையில் இருக்கும் ஆட்டோனமிக் சென்ட்ர்ஸை(தன்னியக்க நரம்பு மண்டலத்தை) தூண்டிவிடுவதின் மூலம் வாந்தி, வேர்வை ஆகியவை வெளிப்படுகின்றன. ஆகவே, எந்தவித மருந்துக்கும் கட்டுப்படாத தொடர்ச்சியான வாந்தியும் கூட மூளையில் உண்டாகும் வலிப்பு நோயின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

இன்னொரு 50 வயது மதிக்கத்தக்க நபர், தனது வலது பக்க பாதி உடம்பும் வலது பக்க கையும் காலும் அடிக்கடி மரத்துப்போய் உணர்வற்று போவதாகவும், ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை அவ்வாறு நேர்வதாகவும், சராசரியாக ஒவ்வொரு முறையும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை உணர்ச்சியற்ற நிலைமை ஏற்படுவதாகவும் கூறினார். அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது இடது பக்க பக்கவாட்டு மூளையான பேரியட்டல் லோப்(Parietal lobe)-ல் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது.

உணர்ச்சிகள்(தொடுதல், வலி, சூடு, குளிர்) அனைத்தும் இறுதியாகச் சென்று சங்கமிக்கும் இடம்தான் மூளையில் இருக்கும் பேரியட்டல் லோப்(Parietal lobe) என்பது. வலதுபக்க உணர்வுகள் இடது மூளையில் உள்ள பேரியட்டல் லோப்புக்கும், இடது பக்க உணர்வுகள் மூளையின் வலது பக்கத்தில் உள்ள பேரியட்டல் லோப்புக்கும் செல்லும். மூளையில் உணர்வுகள் கூடும் இடத்தில் இருந்த கட்டியின் தாக்கத்தினால் அவருக்கு சென்சரி சீஸர்ஸ்(Sensory seizures) என்று சொல்லக்கூடிய உணர்வற்ற தன்மை அடிக்கடி அவருக்கு ஏற்பட்டது.

மூளை இரு அரைக் கோளங்களாக இருக்கும், இவ்விரு அரை கோளங்களிலும் நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன. ஃபிராண்ட்ல் லோப்(Frontal lobe) முன்பக்க மூளை, பக்கவாட்டு டெம்போரல்(Lateral Temporal) மற்றும் பேரியட்டல் (Parietal lobe) லோப், பின்பக்க ஆக்ஸிபிட்டல்(Occipital lobe) லோப்.

மேற்கூறிய உதாரணங்களின்படி இந்த நான்கு பகுதிகளிலிருந்தும் வலிப்பு நோய்க்கான ஆரம்பப்புள்ளியான மின்னலை மாற்றம் உண்டாகலாம். நோயாளிகளுக்கு வலிப்பின்போது உடலில் ஏற்படும் வெளிப்புற மாற்றங்களை கருத்தில் கொண்டு வலிப்பானது மூளையின் எந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். மூளையின் ஒரு சிறிய பகுதியில் ஏற்படும் மின்னலை மாற்றமானது மூளையில் இருக்கும் மற்ற பகுதிகளுக்கும் பரவி வலிப்பாக வெளிப்படும்.

எடுத்துக்காட்டாக, பின்புற மூளையான ஆக்ஸிபிடல் லோபில் ஆரம்பிக்கும் மின்னலை மாற்றம் முன்னே பரவி முன்பகுதி முளையான ஃப்ராண்டல்(Frontal lobe) வரை சென்றடையும். இதற்கான வெளிப்பாடு வலிப்பு ஆரம்பிக்கும்போது கண் சிமிட்டுவதில் (Occipital Lobe) ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து கை, கால் வெட்டுவதைப்(Frontal Lobe) போன்று அமையும்.

இவ்வாறு வலிப்பின்போது மூளையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய EEG என்னும் ஆய்வு மிக முக்கியமானது. ஈஈஜியின் மூலம் வலிப்பிற்கான அறிகுறி மூளையின் இடது பக்கத்திலிருந்து அல்லது வலது பக்கத்திலிருந்து   ஆரம்பிக்கிறதா? அவ்வாறு ஆரம்பிக்கும் பட்சத்தில் மூளையின் அரைக்கோளத்தில் இருக்கும் நான்கு முக்கியப் பகுதிகளில் எந்த பகுதியில் இருந்து வெளிப்படுகிறது என்பதை தெளிவாக அறிந்துகொள்ள
முடியும்.

பெரும்பாலும் பக்கவாட்டு மூளையான டெம்போரல் லோபிலிருந்து(Temporal lobe) வெளிப்படும் மின் மாற்றமே முதன்மையானதாக இருக்கும். அதனைத் தொடர்ந்து முறையே ஃப்ராண்ட்ல்(Frontal), ஆக்ஸிபிட்டல்(Occipetal) மற்றும் பெரைட்டல் (Parietal) லோப்பில் இருந்து மின் அலைமாற்றம் உண்டாகி வலிப்பு ஏற்படலாம். இதயத்தை ஆராய்வதற்கு இ.சி.ஜி உள்ளதுபோல் மூளையின் செயல்திறனை ஆராய்வதற்கு ஈஈஜி(EEG) எலக்ட்ரோ என்செபலோகிராம் (Electroencephalogram) முக்கிய பங்காற்றுகிறது.

மூளை ஸ்கேன்

சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்று இரண்டு விதமான ஸ்கேன்கள் உள்ளன. இதில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மூளையின் அமைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை துல்லியமாக சுட்டிக்காட்டும். மூளையில் இருக்கும் கட்டி, மூளையில் இருக்கும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு, மூளை காய்ச்சலினால் ஏற்படும் மாறுபாடுகள் ஆகியவற்றை மிகத்துல்லியமாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.

மூளை காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு நோய்க்கு, முதுகுத் தண்டுவடத்தில் இருந்து நீரெடுத்து டெஸ்ட் செய்து பார்த்து, என்ன கிருமியினால் மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்த முடியும்.

வலிப்பு நோயை ஆராய்வதற்காக,  புதிதாக வந்திருக்கும் கருவி, மேக்னெட்டோ என்செபலோகிராபி (Magnetoencephalography). மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையே ஏற்படும் மின்னலை மாற்றத்தினைக் கண்டறிய உதவும் ஈஈஜியை போல் நியூரான்களுக்கு இடையே ஏற்படும் காந்த அலை மாற்றத்தினை முதன்மையாகக் கொண்டு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும் உபகரணமே மேக்னட்டோஎன்செபலோகிராபி (Magnetoencephalography) என்னும் வலிப்பு நோய்க்கான ஆய்வு.

தற்போது இந்தியாவில் 2 இடங்களில் மட்டுமே உள்ளது. ஒன்று பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனை மற்றும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த வலிப்பு நோய்க்கான ஆய்வு ஈஈஜியை விட பல மடங்கு துல்லியமாக ஆராயும் தன்மை கொண்டது.

வலிப்பு நோய்க்கான மருத்துவம்
90 சதவீத வலிப்பு நோய்கள், மாத்திரை மருந்துகளின் மூலமாகவே குணப்படுத்த முடியும். வலிப்பு நோய்க்கென இப்போது பலவிதமான மருந்துகள் வந்துவிட்டன. புதிதாக வந்திருக்கும் மருந்துகளுக்கு பக்க விளைவுகள் மிகவும் குறைவு. இம்மருந்துகள் அனைத்தும் மூளையில் உள்ள வெவ்வேறு விதமான சேனல்களிலும் சென்று செயலாற்றி வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையன. சோடியம் சேனல், குளோரைடு சேனல், கால்சியம் சேனல், க்ளூட்டமேட் சேனல், காபா சேனல் என்று பல சேனல்களின் வழியாக இம்மருந்துகள் வலிப்பு நோயை கட்டுப்படுத்துகின்றன.

மருத்துவர்களின் அறிவுரைப்படி வலிப்பு நோய்க்கான மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயை வெல்ல முடியும்.
மருந்துகளினால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோய்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.

அவை கீட்டோஜெனிக் டயட், வேகல்(Vagal Nerve) நரம்பினை  தூண்டுவது மற்றும் அறுவை சிகிச்சை முறையில் வலிப்பினை கட்டுப்படுத்துவது. இதில் கீட்டோ ஜெனிக் டயட் என்பது கார்போஹைட்ரேட் இல்லாமல், புரதச்சத்து குறைவாக, கொழுப்பு சத்து உள்ள பொருட்களை மட்டும் உட்கொள்வது, இந்த டயட்டின் மூலம் தீர்க்க முடியாத வலிப்பு நோயும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

வேகல் நரம்பு என்பது மூளையிலிருந்து கீழிறங்கி கழுத்தின் வழியாக உடம்பில் உள்ள பல முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் நரம்பு. இதயத்திற்கு பேஸ்மேக்கர் கருவி வைத்து இதயத்துடிப்பை தூண்டி விடுவதைப் போன்று இந்த வேகல் நரம்பினை தொடர்ந்து தூண்டுவதன் மூலம் வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்பது அறிவியல்பூர்வமான உண்மை.

மூன்றாவதாக அறுவை சிகிச்சைமுறை. முன்பே கூறியபடி வலிப்பு பெரும்பாலும் மூளையின் பக்கவாட்டில் இருக்கும் டெம்போரல் லோப்பில்(Temporal lobe) இருந்தே அதிகமாக வெளிப்படும். மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத டெம்போரல் லோபிலிருந்து வெளிப்படும் வலிப்பினை அறுவைசிகிச்சையின் மூலம் டெம்போரல் லோப்பின் ஒரு பகுதியை அகற்றினால் வலிப்புநோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

ஆகவே, வலிப்பு நோயை பரிபூரணமாக குணப்படுத்தவும் முடியும், குணப்படுத்த முடியாத சில வகை வலிப்பு நோய்களை மேற்கூறிய சிகிச்சை முறைகளின் மூலம் கட்டுப்படுத்தவும் முடியும் என்பது  ஆறுதல் அளிக்கும் விஷயம்.

( நலம் பெறுவோம்)