டியர் டாக்டர்



*  நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய உடல் உபாதைகளின் உள்ளர்த்தங்களை விளக்கியிருந்த ‘உடல் கூறும் எச்சரிக்கைகள்’ அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதொரு அவசியமான கட்டுரை!
- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.

*  இளமையில் வறுமையும் முதுமையில் தனிமையும் கொடுமை என்பார்கள். இதில் முதுமையின் தனிமை, உடல் பலவீனம் போன்றவற்றைப் போக்கி முதுமையிலும் இனிமை காண்பதற்கு ‘முதியோர்களுக்கும் விளையாட்டு மைதானங்கள் தேவை’ என்பதை எடுத்துரைத்த குங்குமம் டாக்டருக்கு நன்றி.
- அன்பு, நெல்லை.

*  நரம்புகள் நலம் தொடர்பாக சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களைக் கூறியிருந்தார் மருத்துவர் வினோத் கண்ணா. கண் பார்வையில் ஏற்படும் கோளாறுகள், கண் இமைகள் மூடுவது திறப்பதில் ஏற்படும் சங்கடங்கள், குளிர்நேரத்தில் வெளியில் சென்று வரும்போது முகத்தில் ஏற்படும் பலவிதமான தொந்தரவுகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விளக்கங்கள் பயனுள்ளதாக அமைந்திருந்தது.
- செல்வராஜ், சென்னை.

*  முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை அட்டை டூ அட்டை ஒரு மாபெரும் ‘மருத்துவ வழிகாட்டி’ எனலாம். மழைகாலத்தில் பல்வேறு நோய்கள் பரவி வரும் இந்த தருணத்தில் தரப்பட்டுள்ள ‘கவர் ஸ்டோரி’ ஒரு மகத்தான மருத்துவத்தொண்டு. காய்ச்சல் வந்தால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பாயின்ட் பாயின்ட்டாக
எடுத்துக் காண்பித்தது அருமை.

ஃபிட்னஸ் விஷயத்தில் சில மைனஸ் பாயின்ட்டுகளும் உண்டு என்பதும், ஃபுரூட் டீயும்(தேநீர்) இதுவரை கேள்விப்படாதது. வரலாறு படைத்த மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சில குறைகளை எடுத்துக்காட்டியதில் உங்களின் துணிச்சல் தெரிந்தது.
- சிம்மவாஹினி, வியாசர் நகர்.

*  நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறையைப் பற்றி கடந்த இதழில் தெளிவாக விளக்கியிருந்தது எது எனக்கான டயட்? என்னைப் போன்ற டயாபட்டீஸ் பேஷன்ட்டுகளுக்கு நல்லதொரு ஆலோசனையாகவும் இருந்தது என்றால் மிகையில்லை.
- எஸ்.நித்யானந்தம், கீழ்கட்டளை.

*  மார்பகப் புற்றுநோயால் எலும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்ற தகவல் அதிர்ச்சி தந்தது. பெண்கள் இனி இந்த விஷயத்திலும் சற்று கூடுதலாக இருக்க வேண்டும்.
- ஏ.மேகலா, சுப்ரமணியபுரம்.

*  நாம் ஒரு பொருட்டாகவே கருதாத குப்பைமேனிக்குள் இத்தனை மகத்துவமா என்று வியந்துபோனேன். இப்போது குப்பைமேனியைப் பற்றிய என் பார்வையே மாறிவிட்டது. இயற்கையில்தான் எத்தனை அதிசயங்கள்?!
- காசி, வள்ளியூர்.

*  சரியான தருணத்தில் காய்ச்சலும் கடந்து போகும் என்று அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்தியவிதம் பாராட்டுக்குரியது. பிரபலங்கள் விரும்பும் சிரோதரா சிகிச்சை, கீட்டோஜெனிக் உணவு முறை, மயோனைஸ் உணவுகள் ஆகிய கட்டுரைகளில் பல புதுமையான தகவல்களை அறிந்துகொண்டோம்.
- முத்து, மதுரை.