கிடைத்தற்கரிய மருந்து திப்பிலி



பாட்டி வைத்தியம்

பொதுவாக கபம் மிகுதியால் விக்கல் ஏற்படும் அல்லது ஏதாவது எரிச்சல் இருந்து அது வயிற்றையும், நெஞ்சையும் பிரிக்கிற உதரவிதானத்தில் எரிச்சல் உண்டாக்கி விக்கல் ஏற்படுத்தும். பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.
இளம் வறுப்பாக வறுத்த திப்பிலி 8 பங்கு சீரகம் 10 பங்கு பொடி செய்து வைத்துக்கொண்டு 1 -2 கிராம் வரை ஒருவரின் உடல் எடைக்குத் தகுந்தாற்போல், தேனுடன் குழைத்து கொடுக்கிறபோது விக்கல் நின்று போகும். ஒருவேளை அப்படி நிற்காவிட்டால் மயிலிறகை சேர்த்து கொடுக்கும்போது நிச்சயமாக நின்று போகும். அப்படியும் விக்கல் நிற்காவிட்டால் தேரன் என்ற என் பெயரை மாற்றி கொள்கிறேன் என்ற பொருள்பட உறுதியாக சொல்கிறார் இந்த சித்தர்.

வயதானவர்களுக்கு இறுதி காலத்திலும், மரணத்தறுவாயிலும், கபத்தின் மிகுதியால் விடாது விக்கல் ஏற்படும். அப்படிபட்டவர்களைக்கூட காக்கிற தன்மை இந்த திப்பிலி சீரகம் சேர்ந்த மருந்துக்கு உண்டு.

‘எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டு தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகும் விடாவிடிற் போத்தகம்
சுட்டு போடு நான் தேரனும் அல்லனே’
மேலே சொன்ன சித்தர் பாடல் விக்கலை நீக்குவற்கான எளிய வழிமுறையைச் சொல்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை 5 வயதுக்குக் கீழே இருக்கிற குழந்தைகள் பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ 90% பேருக்கு மூச்சுத் திணறலுடன் சளியும் இருக்கிறது. இதன் காரணமாக சுவாசம் கடினமாக இருப்பதும் இயல்பு. இதனை ஆஸ்துமா நோய் என்று சொல்லாவிட்டாலும்கூட ஒவ்வாமையால் ஏற்படுகிற மூச்சுத்திணறல் என்று நாம் கருதிக்கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கும் சரி, வயதானவர்களுக்கும் சரி மூச்சுத்திணறல் அல்லது சுவாசப் பாதையில் ஏற்படுகிற நோய்க்கும், ஒவ்வாமையின் காரணமாக ஏற்படுகிற ஆஸ்துமா நோய்க்கும் திப்பிலி மிகச் சிறந்த மருந்தாகும்.திப்பிலி ஒவ்வாமையைக் குணப்படுத்துவதற்கு ஏற்ற சரியான மருந்து. செரிமானத்தை அதிகப்படுத்துவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு.

நம் உடலில் இருக்கிற தீயை நான்கு வகையாகப் பிரிப்பர். அதிக பசி, குறைந்த பசி, தவறான உணவுகளை சேர்த்து உண்கிற காரணத்தினால் ஏற்படுகிற நஞ்சாகிற உணவு, இதனைப் போக்குவதற்கு குறிப்பாக பசியை மந்தப்படுத்தும் கபத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் செரிமானத்தை அதிகப்படுத்தி பசியைக் கூட்டுவதற்கும் முக்கியமான மருந்துப் பொருளாகவும் திப்பிலி இருக்கிறது.

மேலும் ஈரல் நோய்களைத் தடுப்பதிலும், ஈரலை பாதிக்கும் நஞ்சுகளை நீக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக, சில வகையான மருந்துகளை உட்கொள்கிறபோது அந்த மருந்துகள் எல்லாம் ஈரலில் சேர்ந்து ஈரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக நாள் உட்கொள்கிற மருந்துகளுக்கும் ஈரலைப் பாதிக்கும் தன்மை உண்டு. மதுப்பழக்கமும் ஈரல் பாதிப்பை உண்டாக்கும். இது போன்ற பல்வேறு வகை சார்ந்த உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுகிற நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மை திப்பிலிக்கு உண்டு.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை நாம் திரிகடுகம் என்று சொல்வோம். கடுகம் என்ற சொல்லுக்கு காரம் என்று பொருள். இவை மூன்றும் காரத்தன்மை உடையதாக இருப்பதால் இவற்றை ‘திரிகடுகம்’ என்று சொல்கிறோம். ஒவ்வாமையால் மூக்கில் ஏற்படுகிற சளி, அதனை தொடர்ந்து வருகிற இருமல், சுவாசப் பாதையில் ஏற்படுகிற அழற்சி ஆகியவற்றை எல்லாம் கட்டுப்படுத்துகிற தன்மை உடையது திப்பிலி.

திப்பிலி ஒரு கொடிவகையைச் சார்ந்த தாவரம். காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட இத்தாவரம் மிக நன்றாக வளர்ந்துவிடும். கடற்கரையை ஒட்டி இருக்கிற பகுதிகளிலும் கூட திப்பிலி நன்றாக வளரும். ஒரு முறை நட்டு விட்டால் 10 ஆண்டுகளில் அதிலிருந்து நாம் பலனைப் பெற முடியும். மலைப்பகுதிகளில் வளரும், நெய்தல் நிலமான சென்னை போன்ற பகுதிகளிலும் வளரும் தன்மையும் உடையது.

பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படுகிற ரசத்தில் கண்டதிப்பிலி ரசம் என்பது ரொம்ப முக்கியத்துவம் பெற்றுள்ளது. கண்டத் திப்பிலி என்பது திப்பிலியின் தண்டுப் பகுதி ஆகும். இதேபோலவே திப்பிலி மூலமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. திப்பிலியின் மூலம் அதாவது திப்பிலியின் வேர் நன்றாக உறக்கத்தை ஏற்படுத்தும். எனவேதான் பிரசவத்திற்குப் பின் முதுகு வலி, வயிற்று வலி ஆகிய காரணமாக சரியாக தூங்க முடியாத இளம் தாய்மார்களுக்கு கண்டத்திப்பிலி ரசம் செய்து கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.

திப்பிலியில் இருக்கிற Piperine, Piperidine என்று சொல்கிற இரண்டு வேதிப்பொருட்களும் ஒவ்வாமைக்கு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. இது  மட்டுமல்லாமல் இது வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுப்பதில் மிக முக்கியமான பங்காற்றுகிறது.

சங்க கால இலக்கியங்களில், திரிகடுகம் என்ற ஒரு நூல் உண்டு. எப்படி திரிகடுகு (அதாவது சுக்கு மிளகு திப்பிலி சேர்ந்த திரிகடுகம்) நோய்களை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறதோ. அதுபோன்றே வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகளைக் சொல்கிற நூல் என்ற காரணத்தால் இந்நூலுக்கு திரிகடுகம் என்ற பெயர் வந்தது.

பொதுவாக காரம் நமக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும்கூட, இந்த திரிகடுகம் எப்படி உடலுக்கு நன்மை பயக்கிறதோ, அதுபோலவே திரிகடுகம் நூலில் சொல்லப்பட்ட விஷயம் இன்றும்கூட நமக்கு நன்மை பயக்கிறது. இந்தப் பெயரின் மூலமாக திரிகடுகம் என்ற மருந்துப்பொருள் நெடுங்காலமாக வழக்கில் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

- விஜயகுமார்