மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க...தேவை அதிக கவனம்

பருவ மழை காலங்களில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி மனித மற்றும் விலங்கினங்கள் உயிரிழப்பும் ஏற்படக்கூடும்.
இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்தும் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் விழிப்புணர்வு கொள்வது அவசியம். அந்த வகையில் தமிழக அரசு மின் ஆய்வுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்தக்காரர் மூலம் மட்டுமே செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான சாதனங்களை மட்டும் பயன்படுத்துங்கள். மின்சார ப்ளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும் எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆஃப் செய்துவிடுங்கள்.* உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்காதீர்கள்.

* கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.

* சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ‘வயரிங்’குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள்.

* மின்சார கம்பத்துக்காக போடப்பட்டுள்ள ‘ஸ்டே வயரின்’ மீதோ அல்லது மின் கம்பத்தின் மீேதா கொடி கயிறு கட்டி துணி காய வைப்பதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவது கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளைக் கட்டவும் கூடாது.

* மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ‘ஸ்டே வயர்கள்’ ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.

* மழை, காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாதீர்கள். இதுகுறித்து உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுங்கள்.

* மின்வாரியத்தின் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அதிகாரிகளை அணுக வேண்டும். அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில் மின்கருவிகளின் ‘சுவிட்சு’கள் அமைந்திருக்க வேண்டும்.

- அ.வின்சென்ட்