மூன்று வகை சிகிச்சைகள்!Dengue Alert

மழை காலத்தில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. டெங்கு ரத்தக்கசிவு (Dengue hemorrhagic fever), டெங்கு அதிர்ச்சி பாதிப்பு (Dengue shock syndrome) மற்றும் மூளைக்காய்ச்சல் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் இதன் மூலம் ஏற்படலாம் என்ற பேராசிரியரும், மருத்துவருமான முத்துச்செல்லக்குமாரிடம் டெங்கு பற்றி மேலும் விளக்கமாகக் கேட்டோம்...

காய்ச்சலின் வகைகள்

மழை காலத்தில் ஏடிஸ் ஏஜிப்டி(Aedes aegypti) கொசு உற்பத்தி அதிகமாவதால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் காய்ச்சலும் உண்டாகிறது. மழைக் காலம் இல்லாத பிற காலங்களில் டைபாய்டு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், எலிக்காய்ச்சல் என்று பல்வேறு காய்ச்சல்களும் உண்டாகிறது. சிறுநீரகத்தொற்று, நிமோனியா காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவையும் ஏற்படலாம்.

இவற்றை எல்லாம் Acute Febrile illness (AFI) என்று சொல்கிறோம். இந்த வகை காய்ச்சல்கள் சமீபத்தில், உடனடியாக சில தினங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் குறுகிய கால காய்ச்சல்களாக உள்ளது. ஒரு வாரம் அல்லது மாதக்கணக்கில் சில வகை காய்ச்சல்கள் இருக்கும். எய்ட்ஸ், காசநோய், புற்றுநோய், இணைப்புத்திசு நோய் இருப்பவர்களுக்கு இந்த வகை நீண்டநாள் காய்ச்சல்கள் ஏற்படுகிறது. தற்போது மக்களுக்கு பீதியை உண்டாக்குவது AFI வகையைச் சேர்ந்த உடனடியாக ஏற்படக்கூடிய காய்ச்சல்களே.

டெங்கு பரவும் விதம்

தமிழ்நாடு மட்டுமின்றி நம் நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே மழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிமாகி வருகிறது. இதற்கு மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்கள் சரியாக அமைக்கப்படாததே முக்கியக் காரணமாக உள்ளது. பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள், பூந்தொட்டிகள், நீர்த்தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் உற்பத்தியாகிறது. தேங்கி நிற்கும் சுத்தமான தண்ணீர் சிறிதளவு இருந்தாலே, அதில் முட்டையிட்டு பல்கிப் பெருகக்கூடியது இந்த டெங்கு கொசு. இந்த கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் உலகளவில் 40 கோடி பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

டெங்கு ஆபத்துடையவர்கள்

கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள், ஆஸ்துமா பாதிப்புடையவர்கள், உறுப்பு தானம் பெற்றவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், ரத்தம் உறையாமை நோயுள்ளவர்கள் ஆகியோர் டெங்கு ஏற்படும் ஆபத்தினை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு டெங்குவால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையானதாக இருப்பதோடு
உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும்.

காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்ட பின்னும் காய்ச்சல் குறையாமலேயே இருப்பது, தொடர்ந்து வாந்தி, தாங்க முடியாத வயிற்றுவலி, பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது, படபடப்பு, சிறுநீர்போகும் அளவு குறைவது, மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சல் இருந்தால் உடனடியாக உரிய பரிசோதனைகள் செய்து மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

டெங்குவை கண்டறிவது எப்படி?

ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையைக் கண்டறிவது மற்றும் PCV (Packed cell volume) பரிசோதனையும் டெங்குவைக் கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது. நமது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் முதல் நான்கு லட்சம் வரை இருக்க வேண்டும். டெங்கு பாதிப்பால் இந்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைய குறைய உடலில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதனால் இருமும்போதும், சிறுநீரிலும், உடலிலும் ரத்தம் வரலாம். மலத்தில் ரத்தம் கருப்பு நிறத்தில் வரலாம்.

ரத்தப் பரிசோதனையில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது மற்றும் முதல் இரண்டு மூன்று நாட்களில் டெங்கு NS1 ஆன்டிஜென் பரிசோதனை செய்கிறபொழுது பாசிட்டிவ்வாக இருப்பது போன்றவற்றின் மூலம் டெங்கு நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. 5 நாட்களுக்குப் பிறகு உடலில் டெங்குவுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதம் (IgM antibodies) உருவாகிறது. இப்படி காய்ச்சல் ஏற்பட்ட நபர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து தினசரி அவர்களுடைய பிளேட்லெட்டுகள் அல்லது ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் கண்டறியப்படுகிறது.

இந்த எண்ணிக்கை குறைகிறபோது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரத்தக்கசிவுகள் அதிகமாதல், வாந்தி, மயக்கம், நுரையீரலைச் சுற்றி நீர் சேர்வது, ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே செல்வது, தொடர்ச்சியாக வயிற்றுவலி இருப்பது ஆகிய அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களை காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டெங்குவுக்கான சிகிச்சை

மழை காலங்களில், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கென்று தனித்தனியாக சிறப்பு காய்ச்சல் பிரிவுகள் அமைக்கப்படுகிறது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்றும் தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில், சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வீட்டிலுள்ள ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் மற்றவர்களும் அதற்குரிய பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. இந்த நோயாளிகள் Aspirin மருந்தினை பயன்படுத்தக்கூடாது. இதனால் ரத்தக்கசிவு உண்டாவதோடு, தட்டணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை தானாகவே வாங்கி சாப்பிடக்கூடாது.

டெங்கு நோயாளிகளுக்கு தசை ஊசி போட்டால் ரத்தக்கசிவு ஏற்படும் என்பதால் அந்த வகை ஊசி போடக்கூடாது. தேவைப்பட்டால் சிரை ரத்தக்குழாய் வழியாக குளுக்கோஸ் செலுத்துவதைப் போன்ற Intravenous (IV Injection) முறையில் காய்ச்சலைக் குறைக்கக்கூடிய பாரசிட்டமால் மருந்து கொடுக்கப்படுகிறது.  

டெங்கு நோயை குணப்படுத்துவது என்பது நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலை, ஏற்கெனவே உள்ள நோய்கள் மற்றும் கொடுக்கப்படும் மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தது. ஏற்கெனவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அடுத்தமுறை பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற நபர்களுக்கு ரத்தக்கசிவு பாதிப்புகள் உண்டாகிறது. மேலும் மூக்கு மற்றும் உடலில் இருந்து ரத்தக்கசிவு, மலம் கருப்பு நிறத்தில் போவது போன்ற பிரச்னைகளும் உண்டாகிறது. இதுபோன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ள நேரங்களில் கொடுக்கப்படும் சிகிச்சையால் சிலர் குணமடையலாம். சிலருக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

காய்ச்சல் வந்தவுடனே மருத்துவரை அணுகி மருத்துவர் ஆலோசனைப்படி முழுவதுமாக மருந்துகள் எடுத்துக் கொள்வதே காய்ச்சலை குணப்படுத்த உதவியாக இருக்கும். டெங்கு காய்ச்சல் குறைகிற நேரத்தில்தான், அதனால் ஏற்படுகிற ரத்தக்கசிவு போன்ற பிற பிரச்னைகள் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருந்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம்.

மூன்று வகை சிகிச்சைகள்

டெங்குவைப் பொறுத்தவரையில் மூன்று வகையான சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறது. முதலாவது டெங்கு நோயாளிகளுக்கு உடலில் நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் போன்றவை குறைவாக இருப்பதால் திரவ மருந்துகள் மூலம் அவற்றை உடலுக்குள் செலுத்துவார்கள். இதை Supportive treatment என்று சொல்கிறோம். இது நோயாளியின் உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இரண்டாவது காய்ச்சலைக் குறைப்பது, உடல்வலியைக் குறைப்பது, வாந்தியைக் குறைப்பது, வயிற்றுவலியைக் குறைப்பது என்று இந்நோயின் அறிகுறிகளைக் குறைக்க கொடுக்கப்படும் மருந்து மற்றும் சிகிச்சையினை Symptomatic treatment என்று சொல்கிறோம். இந்த வகை சிகிச்சை டெங்குவால் ஏற்படும் தொந்தரவுகளைக் குறைக்க உதவுகிறது.

மூன்றாவதாக டெங்கு போன்ற வேறு எந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோ அதற்குரிய மருந்துகளை கொடுப்பதை Specific treatment என்று சொல்கிறோம். ஆனால், டெங்கு வைரஸை ஒழிக்க எந்த வைரஸ் மருந்துகளும் இல்லை. இந்த நோய்க்கான தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது. ரத்த தட்டணுக்கள் குறைந்தால் அதை உடலில் செலுத்துவதற்கும், ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடலில் ரத்தம் செலுத்துவதற்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் உரிய வசதிகள் உள்ளது.

டெங்குவைக் கட்டுப்படுத்த...

தமிழக அரசின் சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை வழங்கி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் நோயைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கொசு ஒழிப்பிற்காக மட்டும் தமிழக அரசு 13 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு வகை காய்ச்சல்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு ஒருங்கிணைந்த காய்ச்சல் கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தடுப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.

வீடு, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியாவதைக் குறைக்கலாம். கொசு வலைகள், கொசுவை விரட்டும் திரவ மருந்துகள் போன்றவற்றை உபயோகிக்கலாம். வேகமாக மின்விசிறியை பயன்படுத்துவது மற்றும் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் கொசுக்கடியைக் குறைக்கலாம். வீட்டு ஜன்னல்களை கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

நீர் வைத்து பயன்படுத்தும் குடம், வாளி போன்ற பிற பொருட்களை மூடி வைத்து பயன்படுத்தலாம். மேற்கத்திய வகை கழிப்பறைகளை பயன்படுத்திய பிறகு மூடி வைக்க வேண்டும்.

கொசு மருந்து அடிக்கும் பணியினை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். கொசு ஒழிப்பில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசும், பொதுமக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் டெங்குவைக்
கட்டுப்படுத்த முடியும்.  

நம்மில் பலர் காய்ச்சல் வந்தவுடன் மருத்துவர் பரிந்துரையின்றி, அருகிலுள்ள மருந்தகத்திற்கு சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர் அல்லது சுயவைத்தியம் செய்து கொள்கின்றனர். இப்படி செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்ட உடனே காலதாமதப்படுத்தாமல் மருத்துவரை அணுகி உடனடியாக உரிய பரிசோதனையும், சிகிச்சையும் பெறுவதன் மூலம் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

- க.கதிரவன்