தவறி விழுவதை தவிர்க்க முடியாதா?!



எலும்பே நலம்தானா?!

கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு. வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஏற்படக்கூடும்.

கீழே விழுவதால் தலையில் அடிபடுவது, தோள்பட்டை மற்றும் கைகளில் ஃபிராக்சர், முதுகெலும்பில் முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் கீழே விழுவதில் சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். அதையும் மீறி விழுந்தவர்களுக்கு பலமான காயங்கள் ஏற்படலாம்.

அதற்கான சிகிச்சைக்காக பல மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரலாம். ஏற்கெனவே முதுமையில் இருக்கும் அவர்களுக்கு அடிபட்டுக் கொண்ட நிலையில் யாரையாவது சார்ந்திருக்கிற நிலை ஏற்படும்.  சாதாரணமான நடமாட்டமே கேள்விக்குறியாகிவிடும்.

மொத்தத்தில் முதியவர்கள் விழுந்து அடிபட்டுக் கொள்வது அவர்களது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். இதில் ஆறுதலான ஒரு விஷயம் உண்டு. அதற்கு தவறி கீழே விழும் சம்பவங்களை பெரும்பாலும் தவிர்க்க முடியும். சில பாதுகாப்பு நடவடிக்கைகளும், வாழ்வியல் முறை மாற்றங்களும் அதற்கு அவசியம்.

முதியவர்கள் கீழே விழுதல் பற்றிய சில உண்மைகள்

கீழே விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களில் 65 வயதைக் கடந்த முதியவர்களே அதிகம். விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களில் இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. அவர்களில் பெண்களே அதிகம். இடுப்பெலும்பு முறிவு ஏற்படும் நபர்கள் பெரும்பாலும் அதிலிருந்து முழுமையாக விடுபடுவது இல்லை. பலருக்கும் அதற்கு பிறகு நடமாட்டம் முடங்கிப் போகிறது.  இன்னும் சிலருக்கு கைத்தடி அல்லது வாக்கர் உதவியின்றி நடமாடுவது சிரமமாகிறது. அரிதாக இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்துக்குள் உயிரிழக்கின்றனர்.

காரணங்கள்

கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் வாய்ப்பை அதிகரிப்பதில் சில உடல் நலக் கோளாறுகளும், சத்தில்லாத உணவுப் பழக்கமும் முக்கிய காரணிகளாகின்றன.

மருத்துவ ரீதியான காரணங்கள்

* எலும்பு மற்றும் தசைகளின் அடர்த்தி குறைந்து போதல், பலவீனமாதல்.
* ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னைகளின் பாதிப்பு.
* முறையற்ற ரத்த அழுத்தம், முறையற்ற இதயத்துடிப்பு மற்றும் இதயம் தொடர்பான கோளாறுகள்.
* மன அழுத்தம் மற்றும் அல்சைமர் பாதிப்பு.
* ஆர்த்தரைட்டிஸ், இடுப்பெலும்பு வலுவிழப்பு மற்றும் பேலன்ஸ் இல்லாத நிலை.
* நரம்பியல் மண்டலம் தொடர்பான கோளாறுகள், பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் போன்ற பாதிப்புகள்.
* சிறுநீர்ப்பாதை மற்றும் சிறுநீர்ப்பையின் செயலிழப்பு.
* பார்வை குறைபாடு மற்றும் கேட்கும் திறனில் ஏற்படும் குறைபாடு.
* எலும்புகளை வெகுவாக பாதிக்கும் புற்றுநோய்.
* சில வகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள்

பொதுவான காரணங்கள்

* வயதுஏற்கனவே பார்த்தது போல கீழே விழும் வாய்ப்பை அதிகரிப்பதில் முதுமைக்கு முக்கிய பங்கு உண்டு. வயதாக ஆக பார்வைத் திறன் குறைவது, உடலின் பேலன்ஸ் தவறுவது, சக்தியே இல்லாமல் உணர்வது, போன்றவை சகஜம். இவை எல்லாமே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பவை.

* உடல் இயக்கம் இல்லாமை

உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, உடலின் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கும். எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

* பழக்க வழக்கங்கள்

புகை மற்றும் மது பழக்கங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிப்பவை. குறிப்பாக குடிப்பழக்கம் ஒருவரது நிலைத்தன்மையை பெரிதும் பாதித்து கீழே விழும் வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும்.

* உணவுப்பழக்கம்

சரிவிகித உணவு உண்ணாதவர்களுக்கும், கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும், போதிய அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவர்களால் சாதாரணமாக செய்யக்கூடிய அன்றாட வேலைகளையே சிரமமின்றி செய்ய முடியாது. அடிக்கடி தடுமாறுவதும் அதன் விளைவாக கீழே விழுவதும் இவர்களுக்கு சாதாரணமாக நிகழும்.

* வீட்டிலுள்ள ரிஸ்க்

வழுவழுப்பான தரை, ஈரமான தரை, வெளிச்சமற்ற வீடு, கால்களுக்கு சரியான பிடிமானத்தை தராத காலணிகள், நடமாடும் இடங்களில் இடறி விழும் அளவுக்கு பொருட்களை அடைத்து வைப்பது...

முதியவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தவறி விழுகிறார்கள். மாடி படிகளில் ஏறி இறங்கும்போதும், குளியலறை மற்றும் கழிவறைகளிலும்,
சமையலறையில் வேலை பார்க்கும்போதும் இவர்கள் கீழே விழுவது அதிகமாக நடக்கிறது.

கீழே விழுவதை எப்படி தவிர்க்கலாம்?

குறிப்பிட்ட மாத இடைவெளிகளில் கண் பார்வையை சரி பார்த்துக் கொள்ளவும். கண்ணாடியின் தேவை இருந்தால் அணிந்து கொள்ளவும். ஏற்கனவே கண்ணாடி அணிபவராக இருந்தால் பவர் அதிகம் ஆகி இருக்கிறதா என்பதை பரிசோதித்து அதற்கேற்ற கண்ணாடியை மாற்றிக் கொள்ளவும்.
வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ளவும். ரத்த அழுத்த அளவும் இதயத்துடிப்பும் சீராக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும். புகை மற்றும் மது பழக்கங்களை முற்றிலும் தவிர்க்கவும்.

 வேறு பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் அதைன் பற்றி பேசவும். மருந்துக்கடைகளில் நீங்களாக மருந்துகள் வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அதிக களைப்பு, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின்  காலாவதி தேதியை கவனிக்கவும். எத்தனை வேளைகளுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல்களுடன் குறிப்பு எழுதி பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.

* உடற்பயிற்சி

மருத்துவரிடம் பேசி உங்கள் வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தெரிந்துகொண்டு ஆரம்பிக்கவும். வயதை பொருட்படுத்த வேண்டியதில்லை. உங்களால் முடியும் என நம்பும் பட்சத்தில் மருத்துவர் அல்லது உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனை யோடு உங்களுக்கு விருப்பமான உடற்பயிற்சிகளை செய்யலாம். சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை போன்றவை ஆக்டிவாக வைப்பதுடன் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தக் கூடியவை.

* காலணிகளில் கவனம்

கால்களுக்கு பிடிமானம் தரக்கூடிய சரியான அளவுள்ள காலணிகளை பயன்படுத்தவும். ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்.
ஷூ அணிபவராக இருந்தால் லேசை கட்ட மறக்கவேண்டாம். ஷூ அணிவதை இலகுவாக்க ஷூஹான்ஸ் பயன்படுத்தலாம்.
நிறைய நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்றால் அவ்வப்போது காலணிகளை மாற்றவும். தேய்ந்து கிழிந்து போன
காலணிகளை பயன்படுத்த வேண்டாம்.

வீடுகளில் தேவைப்படும் மாற்றங்கள்

* படுக்கை அறையில்...

உங்கள் படுக்கைக்கு அருகில் டார்ச் லைட், போன் போன்றவை இருக்கட்டும். சுலபமாக படுத்து எழுந்திருக்கும் படியான படுக்கையை பயன்படுத்தவும். படுக்கை விரிப்பு மற்றும் போர்வைகள் வழுவழுப்புத்தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். நைட் லாம்ப் பயன்படுத்துவதை பழகிக்கொள்ளவும். கழிவறைகளில் மெல்லிய ஒளி வீசும் பல்பு ஒன்று முழுவதும் எரியட்டும்.

* வரவேற்பறை...

நடமாடுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சோஃபா மற்றும் இருக்கைகளை அமைக்கவும். ஸ்விட்ச் போர்டு உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கட்டும். வீடு முழுவதும் எப்போதும் நல்ல வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.வீட்டின் கதவுகளை திறக்கும் இடத்தில் எந்தப் பொருளையும் வைக்க வேண்டாம். டெலிபோன் ஒயர், டிவி கேபிள் போன்றவை கால்களில் சிக்கும்படி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மிகவும் தாழ்வான இருக்கைகளில் அமர்வதை தவிர்க்கவும்.

* சமையலறை...

குப்பைகளை அகற்றவும். கீழே சிந்தும் திரவங்களை உடனுக்குடன் துடைத்து சுத்தப்படுத்தவும். உணவுப் பொருட்களை கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி வைப்பதைத் தவிர்க்கவும். வழுவழுப்புத்தன்மை இல்லாமல் சற்றே சொரசொரப்பாக இருக்கும்படி அமைத்துக் கொள்வது நல்லது.

* படிக்கட்டுகள்

படிக்கட்டுகளில் எந்தப் பொருட்களையும் வைக்க வேண்டாம். படிக்கட்டுதானே என்று அலட்சியமாக இல்லாமல் வெளிச்சம் இருக்கும்படி பல்பு பொருத்தவும். படிக்கட்டுகளில் மிதியடிகள், தரை விரிப்புகள் வேண்டாம். கைப்பிடிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

* குளியலறை

குளியலறையின் தரை ஈரமின்றி காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். குளியலறையில் ஆங்காங்கே கைப்பிடிகள் இருக்கட்டும். வழுக்காத வழவழப்பு இல்லாத மிதியடிகளை குளியல் அறை வாசலில் போட்டு வைக்கவும். கூடிய வரையில் வெஸ்டர்ன் டாய்லெட்டாக இருப்பது சிறந்தது.
விழுந்துவிட்டால் பதற்றம் வேண்டாம்...

இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் தவறி விழுந்துவிட்டால் பதற்றப்பட வேண்டாம். விழுந்ததால் எந்த இடங்களில் அடிபட்டு இருக்கிறது என்பதை கவனிக்கவும். விழுந்த நிலையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லையா? உட்கார்ந்த நிலையிலேயே நகர்ந்து
அருகிலுள்ள நாற்காலிக்கு செல்லவும்.

அதுவும் முடியவில்லையா? உதவிக்கு ஆட்களை அழைக்கவும். உங்கள் அருகில் உதவிக்கு ஆட்கள் இல்லையா? மெல்ல மெல்ல நகர்ந்து தொலைபேசி இருக்கும் இடத்தை அடையவும். உடனே வந்து உங்களுக்கு உதவக்கூடிய நிலையில் இருப்பவர்களை அழைக்கவும்.

( நிறைந்தது )