கொசுவை ஒழிக்க சரியான வழி!மகிழ்ச்சி

உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவரும் கொசுக்களால் மக்களுக்கு டெங்கு, சிக்குன்குன்யா என்று பல்வேறு நோய்கள் உருவாகி உயிர்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ஆண்டுதோறும் கொசுக்களால் உருவாகும் நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு கொசுக்களின் லார்வாக்களை முக்கிய உணவாகக் கொண்டிருக்கும் கம்பூசியா மற்றும் கப்பி வகை மீன்களை அதிகளவில் வளர்ப்பதற்கு உரிய விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் அதிகரிப்பது கொசு ஒழிப்பில் நல்ல பலனைத் தரும் என்று பரிந்துரைக்கின்றனர்
பூச்சியியல் வல்லுநர்கள்.

கொசு ஒழிப்பு என்பது உலகளவில் பெரும் சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. கொசுவலை, கொசுவத்திச்சுருள் மற்றும் கொசுவத்தி திரவங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதோடு, ஓரளவிற்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

உலகளவில் கொசுக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு முறைகள் உள்ளன. அதில் ரசாயனக் கட்டுப்பாடு முறைகளே பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இதுபோன்ற முறைகள் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், கொசுக்களிடையே எதிர்ப்புத் திறனையும்(Insecticides Resistance) உருவாக்கி விடுகின்றன.

கொசுக்களை கட்டுப்படுத்த உதவும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கொசுவத்திச்சுருள் மற்றும் கொசு ஒழிப்பிற்காக அடிக்கப்படும் கொசுமருந்து போன்றவற்றிலிருந்து வரும் புகை சிலருக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

இதுபோன்ற ரசாயன முறைகளோடு ஒப்பிடுகையில், கொசுக்களை ஒழிப்பதில் மீன்களைப் பயன்படுத்தும் முறை மிகவும் சிறந்த ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது. கொசுக்களின் லார்வாக்களை முக்கிய உணவாகக் கொண்டிருக்கும் இந்த வகை மீன்களை வளர்ப்பது கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுவதோடு, சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும் உதவியாக இருக்கும் என்று பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

1903-ஆம் ஆண்டு முதல் இந்த முறை பொது சுகாதாரத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொசு மீன் என்று அழைக்கப்படும் கம்பூசியா அஃபினிஸ்(Gambusia affinis) மற்றும் கப்பி மீன் என்று சொல்லப்படுகிற Poecilia reticulata போன்ற மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு மீன்களும் Poecilidae என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த மீன்களை நீர்நிலைகளில் குறிப்பாகக் கிணறுகள், அலங்காரத் தொட்டிகள், பெரிய சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றில் வளர்த்து கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம். இவை ரசாயன முறையைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதோடு செலவும் குறைவு.

இந்த மீன்கள் நீர்நிலைகளில் உள்ள கொசுக்களின் முட்டை மற்றும் லார்வா என்று சொல்லப்படுகிற இளம்பருவ கொசுப் புழுக்களை சாப்பிட்டு அழித்துவிடும். குறிப்பாக டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா போன்ற காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை இந்த மீன்கள் உணவாக உட்கொண்டு வாழும். இந்த மீன்கள் சிறியதாக இருப்பதால் ஆழமற்ற நீர்நிலைகளில் நன்றாக வளரும். மேலும் இவை பரவலான வெப்பநிலை மற்றும் ஒளி அடர்த்தியையும் தாக்குப்பிடிக்கக்கூடியவை.

கம்பூசியா மீன்கள் இந்தியாவில் 1928-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. ஆண் மீன் 3 முதல் 5 சென்டி மீட்டரும், பெண் மீன் 5 முதல் 6 சென்டி மீட்டரும் வளரக்கூடியவை. இந்த மீன்கள் நாம் சாப்பிட ஏற்றதல்ல. இந்த மீன்கள் வளரும் இடத்தில் அபேட், குளோரின் உள்ளிட்ட எந்தக் கிருமி நாசினிப் பவுடரையும் பயன்படுத்தக் கூடாது. இந்த மீன்களை வளர்க்கும் தொட்டியைச் சாதாரண முறையில் சுத்தம் செய்தால் போதுமானது.

தன் வாழ்நாளில் ஒரு பெண் கம்பூசியா மீன் 900 முதல் 1200 குஞ்சுகளைப் பொரிக்கக் கூடியது. நன்கு வளர்ச்சியடைந்த கம்பூசியா மீன் தினமும் 100 முதல் 200 கொசுப்புழுக்களை உண்கின்றன. கப்பி வகை மீன்கள் இந்தியாவில் 1910-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவை தினமும் 100 கொசுப்புழுக்களை உண்கின்றன. கப்பி மீன்கள் கம்பூசியா மீன்களைவிட சிறியவை.

கம்பூசியா வகை மீன்கள் சுத்தமான நீரிலும், கப்பி வகை மீன்கள் மிதமான அசுத்த நீரிலும் பல்கிப் பெருகக்கூடியவை. பொதுமக்கள் தாமாகவே இந்த மீன்களை வளர்த்து கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம்.சுற்றுப்புறங்களில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தவிர்த்து தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அந்த இடங்களில் மணலைக் கொண்டு நிரப்பி, நீர் தேங்காதவாறு சமப்படுத்த வேண்டும். வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்து, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்துக்கும் மேல் பாத்திரங்கள், கேன்களில் தண்ணீரைச் சேர்த்துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர்த்தொட்டி, செப்டிக் டேங்குகளின் மூடிகளை காற்று புகாமல் மூடிவைக்க வேண்டும்.

இதுபோன்ற கொசு ஒழிப்புக்கான நடவடிக்கைகளோடு கொசுமீன் வளர்ப்பினை அதிகரிப்பதன் மூலமும் கொசுக்களின் உற்பத்தியைக் குறைக்கலாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் இந்த மீன்களை வளர்க்கின்றனர். இந்தியாவிலும் இந்த மீன்களை வளர்க்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வினை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசும் பொதுமக்களும் ஒன்றிணைந்து, தற்போது உடனடியாக கொசு ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம்.  

- க.கதிரவன்

குங்குமம் குழும இதழ்களுக்குக் கிடைத்த மற்றோர் அங்கீகாரம்!

சென்னையில் கடந்த 1984ம் ஆண்டு முதல் இயங்கிவரும் SCARF INDIA நிறுவனம் மனச்சிதைவு நோய்களைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருவதுடன், மன
நலம் பாதிப்புக்குள்ளான பலருக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது. மனநலம் சார்ந்த சேவைக்காக உலக சுகாதார மையத்தால் டையாளப்படுத்தப்பட்டுள்ள இந்நிறுவனம், கடந்த 6 ஆண்டுகளாக தேசிய அளவில், ஊடகங்களில் வெளிவரும் மனநலம் சார்ந்த சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, சிறந்த பத்திரிகையாளர் விருதை வழங்கி வருகிறது.

2019-ம் வருடத்தில் மாநில மொழிகளுக்கான பிரிவில் SCARF மீடியா விருதினை குங்குமம் குழுமத்தைச் சேர்ந்த இதழ்களான ‘குங்குமம் டாக்டர்’ இதழில், ‘எதையுமே தூக்கிப்போட மனசில்லையா’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்காக அதன் தலைமை உதவி ஆசிரியரான உஷா நாராயணன் முதல் பரிசினையும், ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியான ‘50-லும் வாழ்க்கை இருக்கு’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்காக குங்குமம் தோழி நிருபர் ஸ்வேதா கண்ணன் இரண்டாம் பரிசினையும் பெற்றுள்ளனர்.

விருதுத்தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராட்டி மொழிகளில் பல  முக்கிய ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகளில் இருந்து சிறந்த ஆறு கட்டுரைகள் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆங்கில ஊடகங்கள் நான்கு விருதினையும், மாநில மொழிகளுக்கான விருதுகள் இரண்டையுமே குங்குமம் குழுமம் பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக SCARF மீடியா விருதினை குங்குமம் இதழ்கள் பெறுவதும், உஷா நாராயணன் இந்த வருடம் மீண்டும் விருது பெற்றுள்ளதும் சிறப்பு!