உலக அளவில் நடந்த இணையவழிப் போட்டி முதலிடம் பிடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்!



சாதனை

சமூகத்தில் கல்வியாளர்கள் ஒவ்வொருநாளும் செய்யும் அனைத்து அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கும் விஷயங்களைக் கொண்டாடும் வகையில் ‘wakelet ’ நிறுவனம் சார்பில் வேக்லெட் சமூக வார நிகழ்வு ஜூன் 1 முதல் 5 வரை நடைபெற்றது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூலம் பல அற்புதமான போட்டிகள் நடைபெற்றன.
இதில் உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபேடு பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் கலந்துகொண்டு சிறப்பாக தகவல்களைப் பரிமாறிக் கொண்டதால் இவருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆப்பிள் ஐபேடு பரிசு அறிவித்துள்ளது. இவருடன் சேர்ந்து நைஜீரியாவைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியருக்கும் ஆப்பிள் ஐபேடு பரிசு கிடைத்துள்ளது.

உலக அளவில் முதலிடம் பிடித்த தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் சரவணன் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் மூலம் நடைபெற்ற கல்வி மேளா நிகழ்வில் கலந்துகொண்டு டெல்லி வரை சென்று வந்துள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன்னுடைய மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் முறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு பாடம் நடத்திவருகிறார். மைக்ரோசாஃப்ட்  பயன்படுத்தி இவர் சிறப்பாக பாடங்களைக் கற்பித்து வருவதால் சென்ற 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற ‘மைக்ரோசாஃப்ட் கல்வி மேளா’ நிகழ்வுக்கு தமிழகத்திலிருந்து 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆசிரியர் சரவணனும் பங்குபெற்று இந்திய அளவில் இவருடைய குழுவைச் சேர்ந்த படைப்புகள் ‘இரண்டாம் இடம்’ பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர் தொழில்நுட்பத்தில் மட்டுமில்லாமல் தன்னுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பிற மாவட்ட மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘தேசிய திறனாய்வு தேர்வு வழிகாட்டி புத்தகம்’ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் பல தன்னார்வலர்கள் உதவியினாலும் தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் கூட்டு முயற்சியினாலும் மாவட்டத்திலேயே முதன்முதலாக ‘தொடுதிரை வகுப்பறை’  எனும் ஸ்மார்ட் போர்டு வகுப்பறையை தம் பள்ளியில் உருவாக்கினார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அனைத்துத் துறையிலும் சிறப்பாக விளங்க வேண்டும் என்பதே ஆசிரியர் சரவணனின் கனவாகும்.

 - தோ.திருத்துவராஜ்