கதை சொல்வதால் உறவுகள் மேம்படும்!



திறன் மேம்பாடு

‘‘சிறுவர் முதல் பெரியவர் வரை இன்றைய காலகட்டத்தில் நேரம் அழிவது செல்போனோடுதான். அன்பு, பாசம், அரவணைப்பெல்லாம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி. பெரியவர்கள் சிறியவர்களிடமும், சிறியவர்கள் பெரியவர்களிடமும் அன்பு செலுத்த, மனம் விட்டுப் பேச  வேண்டும்.
ஒரு காலத்தில் கதை சொல்வது இந்த குறையைத் தீர்த்துவந்தது’’ என்று சொல்லும் ஈரோடு மாவட்டத்தில் கதைக்களம் & பட்டாம்பூச்சி நூலகம் அமைத்து செயல்பட்டுவரும் ‘கதைசொல்லி’ சி.வனிதாமணி அருள்வேல் கதை சொல்வதன் அவசியம் குறித்து விளக்குகிறார்.

“காலங்காலமாக கதை கேட்டும் சொல்லியும் வந்தது நம் சமூகம். கதையை நம் வாழ்விலிருந்து தனியாய் நாம் பிரித்துவிட முடியாது.கதை சொல்வது மூலம் பெரியவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு கிடைக்கும் அன்பு அரவணைப்பு அணுக்கம் இதற்கெல்லாம் வேறு எதுவுமே நிகரில்லை என எண்ணுகிறேன்.

அந்த பிஞ்சு மனங்களோடு நாம் உரையாடுவது என்பது அத்தியாவசிய தேவை. அத்தேவையைப் பூர்த்தி செய்ய துவக்கப் புள்ளியாக கதை சொல்வதை கையில் எடுத்துக்கொண்டால் சுலபமாக இருக்கும்’’ என்று சொன்னவர் கதைகள் குழந்தைகளின் மனநலனுக்கு எப்படி உதவும் என்பதையும் விவரித்தார்.

‘‘ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லா பெற்றோர்களாலும் எளிமையாக கொடுக்கக்கூடிய விஷயம் இந்த கதை சொல்லல்.குழந்தைகளுடன் நேரமே செலவிட முடியவில்லை என ஓடிக்கொண்டிருந்த பெற்றோருக்கு இப்போது ஓர் அற்புத தருணம் கிடைத்திருக்கிறது. அதை பெற்றோர்கள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் மிளிரும்.  

மின்னணு சாதனங்களை மிகச் சரியாக பயன்படுத்த நாமும் பழகிக்கொண்டு நம் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் கொரோனாவினால் எல்லோரும் வீட்டினுள் இருக்கும் காலகட்டத்தில்கூட இந்த உயர்தொழிநுட்பங்களால் ஒரே இடத்தில் இருந்தாலும் தனித்தனியாக பிரிந்திருக்கிறோம்.

அதே சமயம் மின்னணு சாதனங்களிலிருந்து விலகி விளையாட்டு கதை பாட்டு என குழந்தைகளின் நேரத்தை சுவாரசியமானதாக்க வேண்டும்’’ என்றவர் கதைகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதையும் பட்டியலிட்டார்.

‘‘நாம் கேட்ட கதைகளைக் கூறலாம், புத்தகத்திலிருந்து படித்த கதைகளைக் கூறலாம், நாமே கற்பனை செய்து கூறலாம், இது எதுவுமே இல்லாவிட்டால் நம் வாழ்வின் அனுபவங்களையே கதையாக சொல்லலாம். ஆனால், எப்படி சொன்னாலும் அதில் சுவாரசியமும் உற்சாகமும் இழையோட வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் கடைக்கு போய்வந்த ஓர் அனுபவத்தையே குட்டி பூனை, ரெட்டைவால் குருவி, வெள்ளைக் குரங்கு, மஞ்சள் டைனோசர் இப்படி சுவாரசிய கதாபாத்திரங்களோட இணைத்துச் சொல்லலாம். கதைகளைச் சொல்ல கால நேரமே பார்க்க வேண்டியதில்லை. காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கும்போது, சைக்கிள் துடைத்துக்கொண்டிருக்கும்போது, பயணங்களின்போது, இரவு உறங்கப்போகும்போது என எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு கதை சொல்லலாம்.

இவ்வாறு கதையாடல் நடக்கும் குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உரையாடல் ஆரோக்கியமாக இருக்கும்.அதனால் உறவும் மேம்படும். கதை கேட்கும் குழந்தை முதலில் காது கொடுத்து கேட்கப் பழகுகிறது, கவனித்து உள்வாங்குகிறது. அவர்களின் கற்பனாசக்தி, படைப்பாற்றல் திறன், முடிவெடுக்கும் திறன், சொல்லாட்சி, நற்பண்புகள், ஞாபகசக்தி என அனைத்தும் முன்னேற்றமடையும்.இதனால் அவர்களின் கல்வி கற்கும் திறனும் உயரும்.

எந்த வயது குழந்தைகளுக்குக் கதை சொல்வது என கேள்வி எழும், இதற்கு, கருவிலிருக்கும் குழந்தை முதல் கல்யாணமாகவிருக்கும் இளைய தலைமுறை வரை கதை சொல்லலாம் என்பதே என் பதிலாக எப்போதும் இருக்கும்.ஏழு வயது குழந்தைகளுக்கு சந்தம் நிறைந்த வேடிக்கை நிறைந்த இனிமையான பாடல்களைப் பாடிக் காட்டலாம், அதனோடு சின்ன சின்ன கதைகளையும் சொல்லலாம்.

எட்டு வயது முதல் 13 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு துப்பறியும் கதைகள், சிந்தனையைத் தூண்டும் கதைகளையும் இணைத்துச் சொல்லலாம். பதின்வயது குழந்தைகளுக்கு உண்மையாக வாழ்வில் வெற்றி அடைந்தவர்களின் கதைகளைச் சொல்லலாம்.

இப்படி உறவுகளை மேம்படுத்தும் கல்வித்திறனை அதிகரிக்கும்,பக்குவத்தை… பொறுமையை வளர்க்கக்கூடிய கதைகளைச் சொல்ல எங்கிருந்தோ ஒரு கதைசொல்லி நம் வீட்டுக்கோ பள்ளிக்கோ வந்து தொடர்ந்து சொல்ல முடியாது. அதனால் ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் கதைசொல்லியாக மாற வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

குடும்பத்தில் அனைவரும் இணைந்து அமர்ந்து அவரவர் நண்பர்கள் பற்றிய கதைகளைப் பேசலாம், ஒரு கதையை ஒருவர் துவங்க, அடுத்தவர் தொடர என ஒருநாள், கதையோடு விளையாட்டும் இணைத்து ஒரு நாள், ஒரு கதையை எடுத்துக்கொண்டு அனைவரும் நடித்தல் ஒரு நாள், புத்தகத்திலிருந்து ஆளுக்கொரு கதையை வாசித்து காண்பித்தல் ஒரு நாள் என நேரத்தை டிவி மொபைல் லேப்டாப்பை விட சுவாரசியமானதாக மாற்றவேண்டும்.

நல்ல உடல் மொழியோடு, குரல் ஏற்ற இறக்கத்தோடு கதை சொல்ல எனக்கு வராது என பெற்றோர்கள் தயங்காமல் முயற்சியை மூலதனமாக்குங்கள். அம்மா அப்பா எப்படி கதை சொன்னாலும் குழந்தைகள் ரசிக்க ஆரம்பிப்பார்கள். உயிரும் உணர்வுமாக நாம் குழந்தைக்கு கதை சொல்வோம், எண்ணிலடங்கா பலன்களை அறுவடை செய்ய காத்திருப்போம்.

கதை என்பது ஒரு கைமருந்து. ஆரோக்கியமாக மனதை வைத்துக்கொள்ள இந்த கைமருந்தை எப்போதும் வீட்டில் எல்லோரும் பயன்படுத்துவோம்.
குழந்தைகளுக்கு கதை சொல்வதென்பது நம் வாழ்வின் அறம்” என்கிறார்வனிதாமணி.

- தோ.திருத்துவராஜ்