கொரோனா ஊரடங்கும் கற்றல் கற்பித்தல் நிலையும்!



அலசல்

உலகையே முடக்கிப் போட்டுள்ளது கொரானோ நோய்த் தொற்று பரவல். அன்றாடம் வேலை செய்து சம்பாதித்து சாப்பிடவேண்டிய நிலையிலிருந்த மக்கள் உணவுக்கே வழியின்றி பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் பிழைப்புக்காக இடம்பெயர்ந்த சுமார் 30 கோடி தொழிலாளர்கள் படும் துயரங்கள் மனிதநேயம் உள்ளவர்களைத் தூங்கவிடாமல் செய்கின்றன.

உலகம் முழுவதும் சுகாதாரத் துறையினர், மருத்துவத் துறையினர்,  கோவிட்-19 நோய்த்தொற்றைத் தடுக்க பகலிரவு பாராது, அயராது போராடிக் கொண்டுள்ளனர். எல்லா நாடுகளும் பாதுகாப்புக்கென்று போர்க் கருவிகள், விமானங்கள், கப்பல்கள் வாங்க அதிகமாக மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் ஆயுதங்களால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற முடியாது என்பதை கோவிட்-19 உணர்த்தியுள்ளது.

மக்கள் வரிப்பணத்தைக் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிட்டு, கல்வி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை சிறப்பாக உருவாக்க வேண்டிய தன் அவசியத்தை தற்போது எல்லா நாட்டுத் தலைவர்களும் உணரத் தொடங்கியுள்ளனர். இதுதான் கொரானோ நோய்த் தொற்று நமக்குக் கொடுத்திருக்கும் பாடம். இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியிடம் மாணவர்களின் கல்விநிலை குறித்து ஒரு சில கேள்விகளை முன்வைத்தோம்.

தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை எதிர்கொள்ள மாணவர்களை எப்படி தயார்படுத்துவது?

மாணவர்களுக்கு கோவிட்-19 பற்றிய உண்மைகளை முதலில் சொல்வதோடு இதற்கு முந்தைய காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நோய் சார்ந்த பேரிடர்களைப் பற்றிய உண்மைகளை அறிவியல் பார்வையோடு சொல்லவேண்டும். இது கடவுளின் செயல், நடந்தே தீரும், தடுக்க முடியாது என்பன போன்ற அச்சுறுத்தல்களை விதைப்பதைத் தவிர்க்க வேண்டும். வருங்காலத்தில் இன்னும் பல பேரிடர்களை எதிர்கொண்டு வெல்வ தற்கான மனபலத்தை உருவாக்க வேண்டும். நோய்களை வெல்வதற்கு வேண்டிய புதிய மருத்துவ ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் தேவைகளை உணர்த்த வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கல்வி பாதிப்புகளை தடுக்க அரசுகள் எடுக்கும் முயற்சிகள் எப்படிபட்டவை?

பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மாதக்கணக்கில் பூட்டப்பட்டிருக்கும் நிலை தற்போது உள்ளது. அதுவும் கல்வியாண்டு முடியும் மாதமும் தொடங்கும் மாதமும் குழந்தைகள் வீட்டில் முடங்கிக்கிடக்கும் நிலை. 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.57 பில்லியன் மாணவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

குழந்தைகள் பள்ளி செல்லாமலேயே வீட்டிலிருந்தபடியே கற்பதற்கான பல வாய்ப்புகள் இன்றைய நவீன தகவல் தொடர்பு உலகில் உள்ளன. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதி அமைப்பு (UNICEF), மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இணையவழி மூலமான தொலைநிலைக் கற்றல் வழிமுறையை (Learning Passport) உருவாக்கியுள்ளன.  கல்விக்கான இந்த இயங்குதளம் மூலம் இடம்பெயர்ந்த, வறுமைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் தடையில்லாமல் கல்வியை வழங்குவது, பாடத்திட்டத்தை எளிதாக்குவது, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்குத் தேவையான கல்வி சார்ந்த வளங்களை வழங்குவது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் கல்வித் துறையும் குழந்தைகள் இணயவழி மூலம் கற்கும் வகையில் பாடநூல்களையும்   காணொலிப் படங்களையும் வகுப்பு மற்றும் பாடங்கள் வாரியாக சமீப ஆண்டுகளாகவே உருவாக்கி இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இதற்கான செயலியை நவீன கைப்பேசிக் கருவிகள் மற்றும் கணினிகள் மூலம் தரவிறக்கம்செய்து பாடங்களைக் குழந்தைகள் தானாகக் கற்கமுடியும். தானாகக் கற்கும் ஆர்வமும் பெற்றோர் துணையும் நவீன கைப்பேசி, கணினி போன்ற வசதிகளும் உள்ள குழந்தைகள் இதனால் ஓரளவு கற்க முடியும்.

முழுமையான, சம வாய்ப்புள்ள கல்வி எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வழி என்ன?  

இணையவழிக் கல்வி மூலம் குழந்தைகள் வீட்டிலிருந்தே உலகின் அன்றாட நடப்புகளை அறிவது முதல் கதை கேட்பதுவரை நேரத்தைச் செலவிட முடியும். ஆனால், வழக்கமான முறையில் பள்ளிகளில் கற்றலில் ஈடுபடுவதால் கிடைக்கும் கல்விக்குச் சமமாக இணயவழிக் கற்றலைப் பார்க்க முடியாது. வகுப்பறையில் கற்பதோடு வகுப்பறைக்கு வெளியிலிருந்தும் கற்றலுக்கான கூடுதல் வளங்களைப் பெறுவதற்கு மட்டுமே இணையவழிக் கல்வி பயன்படும்.
கல்வி என்பது காணொலிப் படங்கள் மூலமாகத் தகவல்களை அறிந்துகொள்வதல்ல. கற்றல் என்பது ஒரு கூட்டுமுயற்சி.

 பள்ளிகள் மூலம் பாடப்பொருள் அறிவு பெறுவது மட்டும் நிகழ்வதில்லை. குழந்தைகள் தங்கள் சமூகஉறவை விரிவுபடுத்திக் கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளியில் உறவாடுதல், சமூகக் கூட்டு வாழ்விற்கான பொதுவிதிகளை அறிதல்  போன்ற வாய்ப்புகளைக் குழந்தைகள் பள்ளிகள் வாயிலாகவே பெற முடியும்.

பெற்றோர்களின் வருமானம் மற்றும் கல்விக்காகச் செலவிடும் தகுதிக்கேற்ப அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற நிலை ஏற்கனவே உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் தகவல் தொடர்புக் கருவிகள் மூலமான இணையவழிக் கல்வி வறுமைநிலையில் வாடும் குழந்தைகளைச் சென்றடைவதில் பல தடைகள் உள்ளன. வறுமை நிலையில் சரிபாதி மக்கள் வாழும் நமது நாட்டில் இணையவழிக் கல்வி என்பது அனைவருக்கும் சமச்சீரான கல்வி வாய்ப்பை உருவாக்கப் பயன்படாது. பள்ளிகள் என்பவை குடிமைப் பயிற்சி அளிக்கும் இளம் குடிமக்களின் வளர்ப்பிடங்கள். பள்ளிக்கு மாற்றாக வேறு எதன் மூலமும் முழுமையான, சமமான கல்வியை அளிக்க முடியாது.

தமிழ்நாட்டில் தற்போது கல்வி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் பெரிய தடுமாற்றங்கள் ஏற்படக் காரணங்கள் எவை?

ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க தமிழக அரசு ஊரடங்கு அறிவித்தவுடன் முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது. அதே சமயம், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை உடனடியாக நடத்துவதில் தமிழ்நாடு அரசு அவசரம் காட்டுவதைத் தவிர்க்கவேண்டும். முற்றிலுமாக இயல்புநிலை திரும்பிய பிறகு ஒரு மாதமாவது மீண்டும் பாடங்களை திருப்புதல் செய்துவிட்டு தேர்வு நடத்தினால் மாணவர்கள் பயனடைவார்கள். முழுமையான கற்றல் நடக்க வழிசெய்யாமல் தேர்வை நடத்துவதால் மாணவர்கள் அடுத்துவரும் வகுப்புகளில் உள்ள பாடங்களை இயல்பாக கற்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாவர்.

தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளைத் தற்போது மழலையர் வகுப்புக் குழந்தைகள் முதற்கொண்டு நடத்திவருகின்றனர். கல்விக் கட்டணம் வசூலிக்க இதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இதில் உள்ளது. குழந்தைகள் கல்வி தடைப்பட்டுவிடக்கூடாது என்ற உயரிய நோக்கம் தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகள் நடத்துவதில் இல்லை. தமிழ்நாடு அரசின் கல்வித் துறையும் இணையவழி வகுப்புகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடத்துவதால் எல்லா மாணவர்களும் பயனடைய முடியாது.

பொதுத்தேர்வு, இணையவழி வகுப்பு, பள்ளிகள் மறுதிறப்பு, வரும் கல்வியாண்டுக்கான வேலைநாட்கள் குறைப்பு, பாடத் திட்டம் குறைப்பு ஆகியவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் அனைவரிடமும் தமிழ்நாடு அரசு கருத்து கேட்டு சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் நடைமுறைப் படுத்த வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு உடனடியாக அரசு செய்யவேண்டியது என்ன?

தற்போது பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பள்ளி களில் சத்துணவு வழங்குவதும் மூன்று மாதங்களாகத் தடைப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் மத்திய அரசும் சில மாநில அரசுகளும் கோவிட்-19 விடுமுறைக் காலத்தில் பள்ளிகளில் மதிய உணவு வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சத்துணவு வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்யாததால் சுமார் 50 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பசிக்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும் ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசு விடுமுறைக் காலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க உரிய நடவடிக்கையை உடனே தொடங்கவேண்டும்.

- தோ.திருத்துவராஜ்