பொய்யை உணர்த்திடும் பார்வை!
உடல்மொழி-33
நடை உடை பாவனை!
நடைமொழி
Some women wear a miniskirt to reveal their thighs; some wear one to conceal their age. - Mokokoma Mokhonoana
மனிதர்கள் தங்கள் பார்வையால் அடுத்தவரை ஈர்க்க வேண்டும், அடுத்தவர் கவனத்தைக் கவர வேண்டும் என்பதை ஒரு ஆசையாகவே மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தங்கள் பார்வையால் மற்றவர் ஈர்க்கப்பட்டு திரும்பிப் பார்க்கும்போது அளவிட முடியாத மகிழ்ச்சியை அடைகிறார்கள். பார்க்கும் பார்வையால் அடுத்தவரைக் கவர நினைப்பது ஒரு வகை என்றால், அடுத்தவர் பார்க்கும் பார்வையால் கவரப்படுவதும் ஒரு வகை. இரண்டு வகைகளுக்கும் உடல்மொழி துணைசெய்கிறது.
சற்று தள்ளியிருந்து எங்கோ பார்த்தபடியிருக்கும் ஒருவரை ஒரு நிமிடம் பார்த்தால், ஏதோ ஒரு குறுகுறுப்பால் அவர் திரும்பிப் பார்ப்பதை கவனித்திருக்கலாம். அது பார்வையின் ஊடுருவலுக்கு இருக்கும் சக்தி. இதைத்தான் பலரும் அடுத்தவரின் கவனத்தைக் கவர்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்தப் பார்வை ஊடுருவலைப் பெண்கள் வெகு சீக்கிரம் கண்டறிந்துவிடுவார்கள்.
பார்வையின் ஊடுருவலை வைத்து வெப்ஸ்டர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மோனிகா மூர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒரு சபையில் சில பெண்களை நிறுத்தி, அங்கிருக்கும் ஆண்களை விருப்பத்துடன் பார்க்கச் சொன்னார். பெண்களின் எத்தனையாவது பார்வை ஒரு ஆணை ஈர்க்கிறது என்று ஆராய்ந்தார். சராசரியாக ஒரு பெண்ணின் மூன்றாவது பார்வைதான் ஆண்களை ஈர்த்திருக்கிறது. சிலருக்கு ஐந்து வரை சென்றிருக்கிறது.
யாருக்குமே பெண்ணின் முதல் பார்வையைப் புரிந்துகொள்ளும் சக்தி இல்லவே இல்லை. அதோடு ஒரு பெண் ஆணின் கவனத்தைத் திருப்பியபின் புருவத்தை உயர்த்தி, உன்னைத்தான் பார்க்கிறேன் என்பதை சைகையாக உணர்த்திய பிறகே ஆண் கவரப்பட்டிருக்கிறான் என்பதையும் கண்டறிந்தார். பார்வை களைப் பொறுத்தவரையிலும், அதை அர்த்தப்படுத்திக்கொள்வதில் ஆண்கள் எப்போதும் பின்தங்கியவர் களாகவே இருக்கிறார்கள்.
பொய்யை வெளிப்படுத்தும் பார்வைஉடல்மொழி எப்போதும் தன்னிச்சையான வெளிப்பாடுதான். ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, சட்டென்று வார்த்தைகளில் பொய் கலந்துவிட்டால், பேசுவது பொய் என்று புரிந்த மறுநிமிடமே பேசுபவர் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார். இந்த வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும் தன்னிச்சையான செயல் அடுத்தவருக்கு ‘இவர் பொய் சொல்கிறார்’ என்பதை உடனடியாகப் புரியவைத்துவிடும்.
பேசிக்கொண்டேயிருக்கும்போது வார்த்தைகளில் பொய் கலக்கையில், குரலில் மாற்றங்கள் தென்படும். லேசாக வேண்டுமென்றே இருமுவார்கள். பேசுபவரின் கண்மணி விரிவடையும். அதோடு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வார்கள். இதைச் செய்வது பொய் பேசுபவர் அல்ல, பொய் கலப்பதால் வெளிப்படுத்தும் அவரின் உடல்மொழி.
அதீத பார்வை
சிலர் பேசும்போது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப் பார்கள். தங்கள் பார்வையை விலக்கிக் கொள்ளவே மாட்டார்கள். இதை இரண்டு விதமாகப் பிரித்து ஆராய் கிறார்கள் உடல்மொழி வல்லுநர்கள்.ஒருவர் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால், ஒன்று நீங்கள் அவருக்கு சுவாரஸ்யமானவ ராகவும், கவர்ச்சிகரமானவராகவும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
அல்லது அவர் உங்களை விரோதியாக நினைத்து சவால் விடுக்கும் தோரணையிலும் பார்க்கலாம். அது எப்படிப்பட்டது என்பதை அவரது கண்மணிகளை வைத்து அறியலாம். கண்மணிகள் விரிவடைந்திருந்தால் நீங்கள் சினேகிதர், கண்மணிகள் சுருங்கியிருந்தால் அவர் விரோதப் பார்வை பார்க்கிறார் என்று பொருள்.
பாதுகாக்கும் பார்வை
பார்வைகள் சண்டை சச்சரவுகளை உருவாக்கவும் செய்யும், பாதுகாக்கவும் செய்யும். பார்வையைத் தவிர்ப்பது ஒரு பணிதல் வகை பாவனைதான். சண்டை, சச்சரவுகளின்போது எதிராளியின் மீதிருந்து பார்வையை விலக்கிக்கொள்வது எப்போதும் பாதுகாப்பானது. மனிதர்களிடம் நிகழும் இந்தப் பார்வையை விலக்கிக்கொள்ளும் செயல், மரபின் தொடர்ச்சியாக மிருகங்களிடமிருந்தே வந்திருக்கிறது. ஒரு குரங்கு தனது முரட்டுத் தனத்தைக் காண்பித்து தாக்கத் தயாரானால் அது எதிரியின் கண்களை நேராகப் பார்க்கும். தாக்கப்படுவதைத் தவிர்க்க மற்ற விலங்கு வேறு பக்கம் பார்க்கத் தொடங்கும். இதனைப் பார்க்கும்போது இது சண்டைக்கு வராமல் பணிந்து போகிறதே என்ற செய்தி மூளைக்கு எட்டுவதால் சண்டை நிகழாமல் போகிறது.
மனிதர்களுக்கு இடையிலும் ஒருவன் தாக்க வரும்போது, பலமற்றறவன் தன் தோள்களைக் குறுக்கி, கைகளை உடலோடு சேர்த்து, முழங்கால்களை ஒன்றுசேர்த்து, கழுத்தைத் தாழ்த்தி, பார்வையைக் கீழே பார்த்தபடி தன்னை ஒடுக்கிக்கொள்வார். இது தாக்க வருபவரை நிறுத்திவிடும் பெரும்பாலான சண்டைகள் ஒருவருக்கு ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளாமல் பார்வையை திருப்பிக்கொண்டாலே போதும், அவை நிகழாமல் போகும். அநாவசிய சண்டைகளைத் தவிர்ப்பதற்குத்தான் இவை சொல்லப்பட்டதே தவிர, அநியாயத்திற்கும், அராஜகத்திற்கும் எதிராக நியாயமான காரணங்களுக்கு எப்போதும் தைரியமாக எதிர்த்து நிற்பதில் தவறில்லை. எதிர்த்து நிற்கத்தான் வேண்டும். நியாயங்களும், உண்மையும்கொண்ட நேர்கொண்ட பார்வை எப்போதும் வலிமையானது.
கண் சிமிட்டல்
முதலில் இப்போது ஒரு நொடி நீங்கள் உங்கள் கண்களை இமைத்துக் கொள்ளுங்கள்.சரி, ஒரு மனிதன் ஒரு விநாடியில் எத்தனை முறை கண் இமைத்துக் கொள்கிறான் தெரியுமா? ஒரு நிமிடத்தில் ஏழு முதல் ஒன்பது முறை கண்ணிமைப்பதுதான் ஆரோக்கியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படி மனிதர்கள் இமைத்துக்கொள்வதில்லை.
புத்தகம் படிக்கும்போது கண் இமைக்கிறோம். ஆனால், எதையேனும் உன்னிப்பாகப் பார்க்கும்போதோ, கவனத்துடன் ஈர்க்கப்படும்போதோ கண் இமைப்பதே இல்லை. குறிப்பாகத் தொலைக்காட்சி, கணினி, மொபைல் திரைகளைப் பார்க்கும்போது அவற்றோடு நாம் ஒன்றிப்போய் கண் இமைப்பதே இல்லை.
கண் சிமிட்டாததால்தான் கண் களுக்கு பல பிரச்னைகள் உண்டாகிறது. கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் இருக்கும்போது, கண் அயர்ச்சியாகி, கண்களில் நீர்வழியும், அது உடல் நமக்குச் சொல்லும் மௌனமொழி.
உடை வழி - லெக்கின்ஸ்
எல்லா உடைகளுக்கும் வரலாறும், பின்புலமும் இருப்பது போலவே, லெக்கின்சிற்கும் ஒரு சிறிய வரலாறு உண்டு. லெக்கின்ஸ் 16ம் நூற்றாண்டில் அறிமுகமான உடை. ஆரம்பத்தில் ஆண் -பெண் இருவருக்குமான உடையாகத்தான் இருந்தது. ஐரோப்பாவில் குளிர் கட்டுக்கடங்காமல் இருக்க, அதைத் தாங்க முடியாத மக்கள் தங்கள் கால்கள் கதகதப்பாக இருக்க கண்டறிந்த உடையே லெக்கின்ஸ்(Legins). ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு காலுக்கும் தனித்தனியாக இருபகுதிகளாக இருந்தது. பின் அவற்றை இணைத்து ஒரே பகுதிகளாக்கினார்கள்.
1960-களில் அமெரிக்காவில் நெகிழ்வுத்தன்மை கொண்ட லைக்ரா என்ற பாலியூரித்தின் இழைகளால் எலாஸ்டிக் இணைத்து தயாரித்தார்கள். அதன்பின் நைலான் வகையால் மட்டுமே உருவாக்கப்பட்ட லெக்கின்ஸ், காற்றோட்ட வகையில் காட்டன் மற்றும் வேறு மெல்லிய இழைகளால் உருவாக ஆரம்பித்தது.
ஐரோப்பாவில் ஆண்டாண்டு காலமாக சர்க்கஸில் பார் நடனமாடும் கலைஞர்கள் வெள்ளைநிறத்தில் ‘லெக்கின்ஸ்’ அணிந்திருந்தனர். அதில் கவரப்பட்ட பெண்களும் அதை அணிய அது வசதியான உடையாக இருக்க இருவரும் அணியும் உடையாக மாறியது. ஐரோப்பாவில் லெக்கின்ஸ் விற்கப்பட்ட,18-19ம் நுாற்றாண்டுகளில், ‘அபாயம்- உள்ளாடைகளின் விளிம்புகள் வெளியே தெரியக்கூடும்’ என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். அன்றைய காலகட்டங்களில் கண்ணியமும், கௌரவமும் உடைகளில் இயல்பாக இருக்கவேண்டும் என்பது ஒரு நாகரிக சமூகத்தின், அளவுகோலாக இருந்திருக்கிறது.
கிழக்காசிய சந்தையில் ஊடுருவிய லெக்கின்ஸ், அறிமுகமானவுடனேயே இந்திய ஆண்களுக்குப் பிடித்தமான உடையாக மாறிப்போனது. ஜமீன்தார், நிலப்பிரபுக்கள் போன்ற உயர் வகுப்பு ஆண்களின் பிரத்யேக உடையாக இருந்தது. சினிமாவிலும் பல கதாநாயகர்கள் லெக்கின்ஸ் அணிந்து தோன்றினார்கள். பின் ஒரு இடைவேளைக்குப் பிறகு அது மீண்டும் திரும்பியபோது, அது பெண்களின் விருப்ப உடையாக மாறியது.
அடிப்படை நிறங்களில் லெக்கின்ஸின் வரவு அதிக வரவேற்பைப் பெற்றது. அதோடு அது காற்றோட்டம், சௌகரியம், உடலில் உறுத்தாத மென்மை, ‘அயர்ன்’ செய்ய வேண்டாம் என்ற வசதி போன்ற காரணங்களால் உடனடியாகப் பெண்களுடன் இணைந்துகொண்டது. உடை சார்ந்த மதிப்பீடுகள் காலத்திற்குக் காலம் மாறுபடுபவை அதில் லெக்கின்சும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
- தொடரும்
|