மாணவர்களை அலைக்கழிக்கும் இணையவழிக் கல்வி



சர்ச்சை

கொரோனா கோவிட் -19 வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், நம் தமிழகத்தையும் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் தன் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று வரை நீடித்து பள்ளி, கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இது ஒரு அசாதாரண சூழல்.

கொரோனாவினால் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் கற்பித்தல் வழியே ஆசிரியர்கள் உதவுவதாக ஏறத்தாழ உலகின் பல நாடுகளிலிருந்தும் செய்திகள் வந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் பள்ளிக்கல்வி குறித்தும் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்தும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டும் அதையொட்டிய விவாதங்கள் உருவாகிக்கொண்டும் உள்ளன.

நாளுக்குநாள் அதிகமாகும் கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வித்துறையின் தலைப்புச் செய்திகளாக ‘ஆன்லைன் டீச்சிங்’ இடம்பெற்றுள்ளது. இந்த இணையத்தின் வழியே கற்பித்தல் முறை கல்வி என்பது மாணவர்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா? அல்லது அது ஒரு மாயத்தோற்றமா? என்பதுபற்றி அசத்தும் ஆசிரியர் பள்ளிக் கூட்டமைப்பின் ஆசிரியை உமாவிடம் கேட்டோம். அவர் கூறும் தகவல்களைப் பார்ப்போம்...

‘‘ஜூன் மாதம் பிறந்தவுடன் ஊடகங்கள் தந்த செய்தி, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 10ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு 5000 ஆண்ட்ராய்டு அலைபேசிகளை (ரெட் மி5) கல்வி கற்பதற்காக வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து 11ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும்  விரைவில் வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர் என்பதே. அதே நேரம் கடந்த நாட்களில்,  கேரளாவில் ஆன்லைன் வசதி கிடைக்காத 14 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவி தேவிகா தற்கொலை செய்துகொண்ட செய்தி நம் நெஞ்சைப் பதற வைக்கிறது.

ஆன்லைன் கல்விமுறையின் தேவை என்ன? இந்த மாற்றங்களைக் கல்வி முறையில் கொண்டுவந்தால் ஏற்படும் சிக்கல்கள் என்னவாக இருக்கும்? மாணவர்கள் உண்மையிலேயே கற்றலில் ஈடுபடுகின்றனரா? பலதரப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவும் நமது சமூக அமைப்பில் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியமா? இப்படி ஏராளமான சந்தேகங்கள் நம்மிடையே உருவாகியுள்ளன’’ என்றவர் ஆன்லைன் கல்வியின் அவசியம் என்ன என்பது குறித்துப் பேச ஆரம்பித்தார்.

‘‘கொரோனா ஊரடங்கில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் கல்வி கற்றல் முற்றிலும் தடைப்பட்டுள்ளது என்ற எண்ணம் ஒருசில பெற்றோர்கள் மனதில் உதயமானது. ஏனெனில் அவர்கள்  எல்லோருமே தங்கள் குழந்தைகளை கல்விக் கட்டணம் அதிக அளவில் செலுத்தி தனியார் பள்ளிக்கு அனுப்புபவர்கள்.

ஏற்கனவே பெரிய பெரிய தனியார் கல்வி நிறுவனங்களின்கீழ் இயங்கும் கார்ப்பரேட் பள்ளிகள் ஏற்கனவே கற்பித்தலை பேக்கேஜ் முறையாக ஆன்லைனில் வெறும் பாடப்பொருளை வழங்கும் சடங்கு நிகழ்வாக செய்துவருகின்றன. இது நீட் நுழைவுத் தேர்வு போன்ற இன்னபிற தேர்வு முறைகளுக்கான கோச்சிங் சிஸ்டமே. இது ஒருவேளை கல்லூரி மாணவர்களுக்கு பொருந்தலாம். பள்ளிப் பருவத்து மாணவர்களுக்குப் பொருந்தாத ஒன்று.

இந்த வழிமுறைகளைக் கல்விக் கட்டணம் பெற்று பள்ளிகள் நடத்தும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதன் விளைவு, கல்வித் துறையில் ஆன்லைன் கல்வி குறித்து விவாதப் பொருள் மையப்படுத்தப்பட்டு இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளின் கைகளில் பாடம் கற்பிக்கும் கருவிகளாக ஆண்ட்ராய்டு அலைபேசிகள் வந்துள்ளன என்றால் அது மிகையாகாது’’ என்கிறார்.  

கல்வி முறையின் மறுமலர்ச்சியா? மாயையா? என்ற கோணத்தில் பேச ஆரம்பித்த அவர், ‘‘ஆன்லைன் கல்வியில் கற்பித்தலும் நடப்பதில்லை, கற்றலும் நடப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாகிய ஒரு டிவைஸ் வழியே தகவல்கள் கடத்தப்படுகின்றன. அங்கே உண்மையான ஜீவனுள்ள உயிரோட்டமான ஆசிரியர் - மாணவர் உறவு நிலவுமா?

மாணவர் மனதில் தோன்றும் சந்தேகங்கள் வினாக்களுக்கு தீர்வு கிடைக்குமா? வகுப்பை கவனிக்கிறார்களா, விரும்பி ஆர்வமாகக் கற்றுக்கொள்கிறார்களா? என்பதை ஆசிரியர் உற்றுநோக்க முடியுமா? ஒரு மாணவன் உடல்நலக் குறைவால் அவதிப்படுகிறான் எனில் ஆசிரியர் ஆறுதல்படுத்தி தைரியம் தர முடியுமா? இந்த ஆன்லைன் வகுப்புகளில். உயிருள்ள ஜீவன்களை தனிமைப்படுத்தி உயிரற்ற ஊடகத்தின் வழியே எதுபோன்ற கற்பித்தல் - கற்றல் செயல்பாடுகளை நிறைவேற்றமுடியும்?

கல்வியின் கோட்பாடுகள், காலம் காலமாக நூற்றுக்கணக்கான கல்வியாளர்களால் விவாதிக்கப்படும் கல்வி கற்பதற்கான சூழல்,  மாணவர் கருத்துக்கு இடமளிக்கும் ஜனநாயக வகுப்பறைகள் இவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி ஒரு மாயையை உருவாக்கத் தயாராகிவருகின்றன ஆன்லைன் வகுப்பறைகள். கற்பித்தல் படிநிலைகளாக வரையறுக்கப்பட்டுள்ள, ஒரு பாடப் பொருளின் நோக்கம், ஆயத்தப் படுத்துதல், மாணவருடன் உரையாடுதல், செயல்பாடுகள், கேள்வி கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், உற்று நோக்கி உள்வாங்கி கற்றல் என்று எதற்கும் இங்கு இடமில்லை.

ஏற்றத் தாழ்வுகள் மிகுந்துள்ள கல்வி முறையைக் கொண்டுள்ள நமது நாட்டில் சாதாரண கல்வியே என்றுமே எட்டாக் கனியாக விளங்கும் சூழலில் எல்லோருக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமா என்பதையும் சிந்திக்க வேண்டும். சாத்தியம் என்ற நிலையை அடைந்தால்தானே நிறை குறைகளை ஆராய முடியும்.

ஒரு தனியார் நிறுவன மென்பொருளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் குழந்தைகள் பாடத்தை கவனிக்க எந்த நிர்பந்தமும் வழிமுறைகளும் இல்லாமல் திரைப்படத்தைப் பார்ப்பது போல பாடம் நடத்தும்  வகுப்பறைகளை டிவைஸ் வழியே பொழுதுபோக்குக்காகக் கூட பார்க்க விரும்ப மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம்.

எத்தனை மணி நேரம் கண்களின் விழித்திரைகள் ஆசிரியரின் வெற்றுக்குரல்களைக் கேட்டு அவர்களின் பாடம் நடத்தும் அபிநயங்களை வெறிக்கும் என்று எண்ணிப் பார்த்தால், குழந்தைகள் கற்றலையே வெறுத்துவிடுவர்.

கல்வி என்பது பண்டமல்ல, காசு கொடுத்து வாங்கிக்கொள்ள, அது ஒரு அனுபவம், வாழ்க்கையை எதிர்நோக்கக் கற்றுக்கொள்ளும் திறன்வளர்க்கும் வழிமுறை. அது ஒருநாளும் ஆன்லைன் வகுப்புகளிலிருந்து விளையாது’’ என்ற வேதனை கலந்த வார்த்தைகளுடன் பேசி முடித்தார்.

- தோ.திருத்துவராஜ்