நியூஸ் கார்னர்



செய்தித் தொகுப்பு

ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கைக்கு அவகாசம் நீட்டிப்பு!

உலகையே கலக்கத்தில் ஆழ்த்தி யிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எல்லா துறைகளைப் போலவும் கல்வித்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிஎச்.டி., எம்ஃபில் போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை இறுதிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து ஆராய்ச்சி  மாண வர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க குறைந்தது 6 மாதங்கள் வரை பல்கலைக்கழகங்கள் அவகாசம் தரவேண்டும் என யு.ஜி.சி.

அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் அபூர்வா, அனைத்துப் பல்கலைக் கழகப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு கடந்த கல்வி ஆண்டுடன் (2019-20) அவகாசம் முடிந்த எம்ஃபில், பிஎச்.டி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், தேர்வுகளை எழுதவும் ஓராண்டுக்கு காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

அதே நேரம் மாணவர்களுக்கான வாய்மொழி திறனறி தேர்வை காணொலிக் காட்சி வழியாகவே நடத்தவேண்டும். ஒருபோதும் மாணவர்களை நேரில் அழைத்து திறனறி தேர்வை நடத்தக்கூடாது. மேலும், உயர்கல்வித் துறை சார்பாக மறு உத்தரவு வரும் வரை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் அறிவிப்புகள்!

கொரோனா ஊரடங்கால் பொறியியல் கல்லூரிகளில் பாடங்கள் முழுமையாக  முடிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர்  தேர்வுகள் நடத்துவது தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 5 பாடங்களில் நடத்தி முடிக்கப்பட்ட 4 பாடங்களிலிருந்து கேள்வி கேட்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், மேற்கண்ட நடைமுறைகள், அரியர்ஸ் வைத்துள்ளவர்களுக்குப் பொருந்தாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதேபோல கொரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் படிப்புகளுக்கான சிறப்புத்தோ்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் படித்து, 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருக்கும் நபா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு சிறப்புத் தோ்வுகளை நடத்தத் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத் தேர்வோடு நடத்தப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் தொடங்கும் பருவத்தோ்வுக்குக் கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் மாணவா்கள் விண்ணப்பித்து வந்தனா். ஆனால், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மார்ச் 17-ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருந்த பருவத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், பல்கலைக்கழகத் தேர்வு க்கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கொரோனா தாக்கம் குறைந்ததும், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதும் வழக்கமாக நடைபெறும் பருவத் தோ்வுடன் சிறப்புத் தோ்வு நடக்கவுள்ளது.

சிறப்புத் தோ்வை எழுத விண்ணப்பிக்காத மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின்  இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே சிறப்புத்தோ்வுக்கு விண்ணப்பித்து, தோ்வுக் கட்டணம் கட்டிய மாணவா்கள் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

துணிவு மற்றும் வீரச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வோர் ஆண்டும், சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்பட்டுவருகிறது. இவ்விருது பெறத் தகுதியானவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழகத்தை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல்புரிந்த, பெண் விண்ணப்பதாரர் மட்டுமே, இவ்விருதைப் பெறத் தகுதியுள்ளவர். விருது பெறுபவருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் வழங்கப்படும்.

கடந்த,2019ம் ஆண்டுக்கு வழங்கப்பட உள்ள, விருதுக்கான விண்ணப்பங்களை, விரிவான சுய விவரக்குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், ‘அரசு முதன்மைச் செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை- - 600 009’ என்ற முகவரிக்கு வரும் 30ஆம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். விருது பெறத் தகுதியுள்ளவர், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார் என, அரசு தெரிவித்துள்ளது.