அன்று: தனியார் நிறுவன ஊழியர் இன்று: திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன உரிமையாளர்



வெற்றிக்கதை

இப்போது உள்ள இளைய தலைமுறையினர் பெரும்பாலும் பழைய படம் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ என்ற எம்.ஜி.ஆர். படப் பாடல் வரி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது. அப்படி தன் திறனை அறிந்து வெற்றியாளரானவர்தான் இளங்கோ.
அவரது தனித்துவமான கவனத்தால் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்க உதவியிருக்கிறாரென்றால் சாதாரண சாதனையா என்ன? தன்னைத் தானே உயர்த்திக்கொண்டு பிறருக்கும் வழிகாட்டிவரும் வெற்றிக்கதையை இனி அவர் விவரிப்பதைப் பார்ப்போம்…

‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… போன்றது தான் எனது கதை. முயற்சி என்பது விதைபோல நீ விதைத்துக் கொண்டேயிரு… முளைத்தால் மரம், இல்லையேல் மண்ணுக்கு உரம் என்பார்கள். இயற்கை சார்ந்து அது எவ்வளவு உண்மையோ அதுபோலவே நம் எண்ணங்களை நோக்கி முயன்று கொண்டேயிருந்தால் ஒரு நாள் நிச்சயம் நாம் விரும்பிய வெற்றியை அடைந்தே தீரலாம். விடாமுயற்சி மற்றும் அதற்கான பயிற்சியே நமது வெற்றியைத் தீர்மானிக்கிறது.

‘நீ என்னவாக வேண்டும் என இலக்கைத் தீர்மானிக்கிறாயோ அதை நோக்கி வீரநடை போடு’ என்றார் விவேகானந்தர். அதுதான் எனது தாரக மந்திரமாக இன்றுவரை தொடர்கிறது.’’ என்றவர் தனது பள்ளிப் பருவத்தை நினைவுகூர்ந்தார்.‘‘வேலூர் மாவட்டம் , செதுவாலை என்ற குக்கிராமத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது முழுவதும் வட சென்னையில்தான். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரியில் பட்டப்படிப்பு.  தந்தை வேலை பார்த்துவந்த எண்ணூர் பவுண்டரீசில் (உலைக்களம்) வேலை கிடைத்தது. நிதி நிர்வாகப் பிரிவில் எனக்கு வேலை. வணிகவியல் பட்டப்படிப்புக்கு பின்னர் வேலை பார்த்துக்கொண்டு, எம்.பி.ஏ. முடித்தேன்.

ஒரு சிறிய ஃபிளாஷ்பேக் சொல்கிறேன். விளையாட்டுப் பருவத்தில் இருந்தபோது நீங்களெல்லாம் என்னவாகப் போறீங்கன்னு அப்பா ஒரு முறை கேட்டார். கடை வைப்பேன் என்றான் தம்பி. டீச்சர் ஆவேன் என்றாள் தங்கை. உங்களுக்கு சம்பளம் கொடுக்கற அளவுக்கு உயர்வேன் என்றேன் நான். அப்பா சிரித்தார். சொன்னபடி தம்பி கடை வைத்துள்ளான். தங்கை ஆசிரியை ஆகிவிட்டாள். நீ எப்படிப்பா? என்று அப்பா கேட்டார். அமைதியாகிவிட்டேன்.
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். வேலை பார்த்த கம்பெனியில் நிதி நிர்வாகப் பிரிவில் இருந்ததால், ஊழியர்களுக்கு நான்தான் (இப்போ மாதிரி ஆன்லைன் பரிவர்த்தனையெல்லாம் அப்போது கிடையாது) சம்பளம் தருவேன். அப்படி அப்பாகிட்ட அவரது சம்பளத்தைக் கொடுத்தபோது, ‘‘பார்த்தீங்களா.. சொன்னதைச் சாதிச்சுட்டேன்’’, என்றேன். அப்பாவுக்கு அவ்ளோ சந்தோஷம்’’ என்றவர் தன் வாழ்வில் திருப்பம் உண்டான விதத்தையும் சொல்லத் தொடங்கினார்.

‘‘கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் வேரூன்ற ஆரம்பித்த காலம் அது. எனது நண்பர் காலம்சென்ற திரு ஐயம்பெருமாள் அவர்கள் CSC COMPUTER EDUCATION எனும் பிரபல கல்வி நிறுவனத்தின் கிளையை வடசென்னையில் தொடங்கினார். நான்தான் அங்கு மேனேஜர் போல் இருந்தேன். நிறுவனம் சக்கைபோடு போடத் தொடங்கியது. அப்புறம் என்ன… நண்பர் ஆலோசனைப்படி பவுண்டரி வேலையை உதறிட்டு, அந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் ஆகிவிட்டேன்.

எனது அடிமனதில் நங்கூரமிட்டிருந்த தொழில்முனைவோராகும் ஆசையில் 2003-வாக்கில் அக்ஷரா தொழில் சேவைகள் (AKSHARA BUSINESS SERVICES PVT LTD) நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி அதற்கு ILS (INSTITUTE FOR LANGUAGE AND SKILLS) என்ற ஒரு பிராண்டை உருவாக்கினேன். இங்கு தான் விவேகானந்தரின் தாரக மந்திரத்தை முழு வீச்சில் ஈடுபடுத்தி வெற்றிப் படிக்கட்டுகளைக் கடந்தேன்.

உனக்குள் ஒருவன், உன்னால் முடியும் தம்பி, உன்னை அறிந்தால் என மக்களின் திறமைகளை தூண்டுதல், திறன் வளர்த்தல், சாதனையாளராக்கும் பயிற்சி அளித்தல் போன்றவற்றில் ILS நம்பர் ஒன்னாக விளங்குகிறது. எங்களிடம் திறன் வளர்த்தல் பயின்று, ஏராளமானோர் தொழில் உரிமையாளர் ஆகியுள்ளனர். பயிற்சி பெற அணுகும் ஒருவரை, புறத்தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என புரியவைத்து, அவர்களது அகத்தோற்றத்தை ஊடுருவி, அவர்களால் எந்த தொழிலை சிறப்பாக செய்ய முடியும் என்பதைக் கண்டுபிடித்து பயிற்சியளிக்கிறோம். அதற்காக ஜிடிவி கருவியைப் பயன்
படுத்துகிறோம். இந்தக் கருவியின் மூலம் உங்கள் திறன்களின் அளவைத் திரையில் காண முடியும்.

வளரும் தொழில்நுட்ப யுகத்தில் அந்தந்த காலகட்டங்களில் தேவைப்படும் பயிற்சிகளையும் ILS மேற்கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு, செல்போன் பயன்பாடு இப்போது அதிகம் உள்ளதால் செல்போன் பழுது நீக்கும் பயிற்சி, லேப்டாப் பயன்பாடு அதிகரித்த நேரத்தில் அதில் பழுதுநீக்கும் பயிற்சி, மின்வெட்டு பிரச்னை ஏற்பட்ட காலகட்டத்தில் சோலார் பயிற்சியும், IT மற்றும் Tally, GST பயிற்சியும் முக்கியமாக பெண்களுக்கென அழகுக்கலை பயிற்சியும் வழங்கி வருகிறோம்.

இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு மற்றும் சொந்தமாக தொழில் தொடங்க உதவியிருக்கிறோம்.’’ என்றவர் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கலான சூழ்நிலைகளை வென்று வந்த விதத்தையும் கூறினார்.‘‘திடீரென்று தொழிற்பயிற்சித் துறை ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. உலகளாவிய பொருளாதார சிக்கலில் இந்தத் துறையும் அதலபாதாளத்துக்கு தள்ளப்பட்டது. அதில் எனது வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கம் உண்டானது.

இத்தனை பேருக்கு பயிற்சியளித்த இளங்கோ, இப்படி துவண்டுபோவதா என உள் மனது திடீரென ஒரு கட்டத்தில் தட்டி எழுப்பியது. அப்புறம் என்ன, மீண்டும் ராக்கெட் வேக உயர்வுதான். இப்படி ஒரு எனர்ஜி (சக்தி) எனக்கு கிடைக்க ஜிடிவி தான் காரணம். ரஷ்ய கண்டுபிடிப்பான அந்தக் கருவி, எக்ஸ்ரே, ஸ்கேனர் போன்ற ஒரு விஷயம்தான். என்ன, அந்த கருவிகளெல்லாம் உள்ளுறுப்புகளை அலசும், ஆனால் ஜிடிவி அப்படியல்ல. ஒருவரது மன ஆற்றல் எவ்வளவு, திறன் எத்தகையது என உணர்வுபூர்வமான தகவல்களை ஜிடிவி-யில் அறிந்துகொள்ள முடியும்.

ஒருவரின் மன ஆற்றலை தூண்டிவிட்டால், அவரால் செய்து முடிக்கக்கூடிய எந்த காரியத்தையும் நேர்த்தியாக செய்ய முடியும். அந்த விதத்தில் ஜிடிவி-யில் ஆற்றல் அறிந்து ஒருவரை செப்பனிட்டு, தொழிலதிபர்களாக உருவாக்கி வருவதில் எங்கள் நிறுவனம் அபார வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால், துவண்டுபோன நேரத்தில் ஜிடிவி-யில் எனது ஆற்றலை அறிந்து அதன் பின்னரே மீண்டு வந்தேன் என்பதுதான் உண்மை. இதனை என் வாழ்வில் கண்கூடாக உணர்ந்தேன்.

எனர்ஜி என்பதுதான் எண்ணம். எண்ணம்தான் எனர்ஜி. நமது எமோஷன்தான் நமது எண்ணங்களை மாற்றுகிறது. எனர்ஜி இன் மோஷன் (Energy in Motion) என்பதுதான் எமோஷன் (Emotion). எவரொருவரும் தனது உணர்வுகளில் கவனம் செலுத்துவாராயின் அவரால் அதனை நேர்மறையாக மாற்றி தனக்கு வேண்டிய அனைத்தையும் கவர்ந்திழுக்கும் திறன் பெறுவார். இந்த சூட்சுமத்தை அனைவருக்கும் கற்றுத் தரவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஈர்ப்பு விதி (Law of Attraciton) எனும் நேரடிப் பயிற்சியைக் கற்றுத்தந்து பலரும் தங்கள் வாழ்வில் தேவையானவற்றை பெற்றுள்ளனர்.

என்னுடைய எனர்ஜியைத் தெரிந்துகொண்ட GDV BIO - WELL கேமராவை வாங்கி இதுவரை 1000 பேருக்கு மேல் அவர்களுடைய எனர்ஜி, ஸ்ட்ரெஸ் லெவல் மற்றும் சக்ராவின் நிலை ஆகியவற்றை கண்டு, அவை அதன் சமநிலையில் இல்லாதபோது அதை சரிசெய்யவும் ஆலோசனை வழங்கி அவர்களது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு எங்களது பயிற்சிகள் அனைத்தையும் Online பயிற்சியாகவும் ZOOM பயிற்சியாகவும் அளிக்கிறோம்.

உங்களால் ஏன் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை எனும் கேள்விக்கான பதில் உள்பட ஆற்றல் திறன் அதிகரிப்புக்காக எனர்ஜி இளங்கோ.காம் எனும் இணையபக்கம் தொடங்கி அந்த இணையத்தில், மணி மைண்ட்செட் எனும் இ-புத்தகம், மணி வெல்னெஸ் பிசினஸ் வெல்னெஸ், சேஞ்ச் யுவர் எனர்ஜி, சேஞ்ச் யுவர் லைஃப் என எராளமான அட்ராக்ஷன்கள் உள்ளன. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிக்கு வருபவர்களை 5 கட்ட நடவடிக்கைக்குத் தயாராக்குகிறோம். அந்த 5 கட்டங்களை பின்பற்றினால் ஒருவரின் வாழ்க்கை அவர் நினைத்ததுபோல அமைவது உறுதி’’ என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் இளங்கோ.

இவர் தமிழகத்தின் அனைத்து டிவி சேனல்களிலும் பல நேர்காணலில் கலந்துகொண்டு மன ஆற்றல் மேம்பாடு, திறன் வளர்த்தலில் நவீன படைப்புகள் என ஆக்கபூர்வ தகவல்களை வழங்கியுள்ளார். கல்லூரிகளின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களை தொழில்முனைவோராக்கும் மந்திரங்களைக் கூறி ஊக்கப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

எனர்ஜி என்பதுதான் எண்ணம். எண்ணம்தான் எனர்ஜி. நமது எமோஷன் தான் நமது எண்ணங்களை மாற்றுகிறது. எனர்ஜி இன் மோஷன் (Energy in Motion) என்பதுதான் எமோஷன் (Emotion). எவரொருவரும் தனது உணர்வுகளில் கவனம் செலுத்துவாராயின் அவரால் அதனை நேர்மறையாக மாற்றி தனக்கு வேண்டிய அனைத்தையும் கவர்ந்திழுக்கும் திறன் பெறுவார்.

-  தோ.திருத்துவராஜ்