காதல்-காதல் சரவணன்



டைட்டில்ஸ் டாக்-142

என் பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் காதல் படிக்கும்போது கிடையாது. ஆனால் இப்போது என் பெயரை அரசு கெஜட்டில் காதல் சரவணன் என்று மாற்றுமளவுக்கு ‘காதல்’ என்ற ஒரே படம் எனக்கு புகழையும் பெயரையும் கொடுத்துள்ளது. அதற்கு இயக்குநர்கள் ஷங்கர் சாருக்கும், பாலாஜி சக்தி வேல் சாருக்கும் என் நன்றி எப்போதும் இருக்கும்.

எனக்கு சொந்த ஊர் தேனி. அப்பாவுக்கு தொழில் விவசாயம். நாங்கள் மொத்தம் ஆறு பேர். படிப்புல நான் கெட்டிக்காரன். பத்தாவது, பனிரெண்டாவது வகுப்புகளில் பள்ளியிலே முதல் மாணவனாக வந்தவன். அப்போது டிப்ளமோ படிப்புக்கு போட்டி அதிகமிருக்கும். ஆனால் நான் சேர்ந்தது என்னவோ ஐ.டி.ஐ. அதற்கு காரணம் என் நண்பன் ஒருவன் ஐ.டி.ஐ.யில் சேர்ந்திருந்தான்.  அதுமட்டுமல்ல, வீட்டில் எடுத்த முடிவுகளாலும் நான் ஐ.டி.ஐ.யில் சேர நேர்ந்தது. தொழில் கல்வியையும் சிறப்பாக முடித்துவிட்டு வெளியே வந்தேன்.

படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போகாமல் சொந்தமாக பிசினஸ் பண்ண ஆரம்பித்தேன். முதல் பிசினஸாக சிட் ஃபண்ட் கம்பெனி ஆரம்பித்தேன். பிறகு ஸ்கூட்டர் ஏஜென்ஸி, பேக்கரி, லாட்டரி கடை, வாஷிங் சோப் கம்பெனி, வீடியோ கேம்ஸ் என்று ஏராளமான பிசினஸ் பண்ணினேன். ஒரு கட்டத்தில் டெல்லிக்கு ஜாகையை மாற்றிக்கொண்டு அங்கு பிசினஸ் பண்ண ஆரம்பித்தேன்.

சில டெல்லி தொடர்பு களால் சிலிண்டர் கனெக்‌ஷன், ஃபோன் கனெக்‌ஷன் வாங்கிக் கொடுக்கும் வேலையைச் செய்தேன். அப்போது அவ்விரண்டுக்கும் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக திருப்பூர், கோயமுத்தூரில் தேவை இருந்தது. அதைப் பயன்படுத்தி ஒரு லேண்ட்லைனை 60,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன். அந்தத் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. ஆனால் எதுவும் நிற்கவில்லை.

அந்த சமயத்தில் தலைநகரத்திலிருந்த ஒரு ஜோதிடர்  என்னைச் சந்தித்து, ‘உங்க ஜாதகத்தை அலசி தலையில் என்ன எழுதியிருக்கிறது’ என்று சொல்லட்டுமா என்றார். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் சொன்ன விஷயங்கள் என்னை நம்ப வைத்தது. ‘உங்களுக்கு முதல் போட்டு செய்யும் தொழில் கைகொடுக்காது.

உங்க ஜாதகத்தின்படி கலைத்தொழில்தான் செட்டாகும்’ என்றார். ‘கலைத்தொழிலா’ என்று ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தேன். ‘அதுதான் சினிமா. என் வாக்குப்படி சினிமாவில் நடிக்கப் போங்க... பெரிய ஆளா வருவீங்க’ என்றார் ஜோசியர். எனக்கு சினிமாவில் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. சினிமாவுக்கு போவதும் அபூர்வம். ஆனால் அவர், நீங்கள் விரும்பவில்லை என்றாலும் கலைத்துறையில்தான் நீங்க இருப்பீங்க என்று அடித்துச் சொல்லிவிட்டு தட்சணையுடன் புறப்பட்டுவிட்டார்.

எனக்கு அவர் சொன்னதில் பெரியளவில் உடன்பாடு இல்லாததால் வழக்கம்போல் என் பிசினஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது பெரிய நஷ்டத்தைச் சந்தித்தேன். நஷ்டம்னா சாதாரணமான நஷ்டம் அல்ல. எழுந்திருக்கவே முடியாதளவுக்கு பெரிய நஷ்டம். பத்தாயிரம் இருந்திருந்தால் பெட்டிக்கடை வைத்து செட்டிலாகியிருப்பேன். ஆனால் அதற்கும் வழியில்லாமல் இருந்தது.

அப்போது ஜோசியர் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்த்தேன். உடனே சென்னைக்குப் போகலாம் என்று முடிவெடுத்து என் முடிவைப் பற்றி வீட்டில் சொன்னேன். ஆனால் என் பெரியண்ணன் என்னை விடவில்லை. காரணம், அவருக்கு நான் சினிமாவுக்கே போகமாட்டேன் என்றும், சினிமா எனக்கு பிடிக்காது என்றும் தெரியும். இதில் திருப்புமுனை என்னவென்றால் என்னுடைய பைனான்ஸ் லைசென்ஸை என் அண்ணனுக்கு மாற்றிவிட்டிருந்தேன். அவருக்கு பைனான்ஸ் தொழில் கைகொடுக்கவே அவர் செட்டிலாகிவிட்டார்.

அண்ணனிடம், என் ஜாதகப்படி எனக்கு சினிமாதான் கைகொடுக்குமாம் என்று திட்ட வட்டமாகச் சொன்னேன். ‘அப்படின்னா ஒண்ணு பண்ணுவோம். நம்மூரில் ஒரு புகழ்பெற்ற ஜோசியர் இருக்கிறார். அவர் சொல்லட்டும். அதன்பிறகு உன் இஷ்டப்படியே அனுப்பிவைக்கிறேன்’ என்றார் அண்ணன்.

அந்த ஜோசியர் இசையமைப்பாளர் இளையராஜாவின் உறவுக்காரர். எங்க ஊர்ப் பக்கம் அவர்களை வள்ளுவர் குலம் என்று சொல்வோம். அந்த ஜோசியக்காரருக்கு டிமாண்ட் அதிகம் என்பதால் காத்திருந்து பார்த்தோம்.அவரும் ‘நான் சினிமாவுக்குத்தான் செட்டாவேன்’ என்றும், ‘பிசினஸ் என்ற பெயரில் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பான்' என்றும்  எடுத்தவுடனே சொன்னார். ‘தைரியமாக சினிமாவுக்கு அனுப்பி வைங்க. நல்லா இருப்பார்’ என்றும் சொன்னார். அதன் பிறகு எனக்கு ரூட் கிளியரானது.

சென்னையில் சினிமா வாய்ப்பு தேடும் படலம் எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில்  யாரைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்ற ரூட் தெரிந்திருந்தது. டெல்லி வரை போய் பிசினஸ் பண்ணியவன் என்பதால் லாபி பண்ணுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.

முதல் வாய்ப்பாக ‘ஜெமினி’ படம் கிடைத்தது. அப்போது எனக்கு முடி நிறைய இருக்கும்.  இயக்குநர் சரண் சாரிடம் காமெடி கேரக்டர் கேட்டேன். அவர் ‘வில்லன் ரோல்தான் உனக்கு  பொருத்தமாக இருக்கும்’ என்றார். கடைசியில் விக்ரம் சார் நண்பர்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
40 நாள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாளைக்கு 750 ரூபாய் சம்பளம். என்னுடைய முதல் படமே ஏவி.எம். படம் என்பதால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. படம் வெளியானதும் தியேட்டரில் இருப்பவர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ளாததால் கொஞ்சம் விரக்தி அடைந்தேன்.

அதன்பிறகு, கும்பலில் வரும் கேரக்டரில் நடிக்கக்கூடாது என்று நல்ல பட வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். அப்படி வெயிட் பண்ணிய படம்தான் ‘காதல்’. இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார் ‘என்னை இம்ப்ரஸ் பண்ணினால் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்திருந்ததால் வாய்ப்பு கொடுத்தார். படமும் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.

தொடர்ந்து ‘கஸ்தூரிமான்’, ‘ஆச்சார்யா’, ‘அழகிய தமிழ்மகன்’ என்று சுமார் 70 படங்களில் நடித்துள்ளேன். விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், விமல், சசிகுமார், விஜய்சேதுபதி என்று ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோருடன்தான் நடிக்கவில்லை. அதுவும் விரைவில் நடக்கும்.

சினிமாவைக் காதலிக்காத நான் இப்போது சினிமாவை முழுமையாகக் காதலிக்கிறேன். சினிமா தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாதளவுக்கு சினிமா என்னை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. இப்போது சினிமாவில் நிம்மதியாக இருக்கிறேன். திருமணமாகி மனைவி, இரண்டு பையன்கள் இருக்கிறார்கள்.

என்னுடைய சினிமா முயற்சிக்கு தம்பி சீனிவாசன் பக்கபலமாக இருந்தார். அவர்தான் என்னுடைய முதுகெலும்பு. ஆரம்பத்தில் ஓட்டலில் வேலை செய்து என்னைப் பார்த்துக் கொண்டார். அவரும் சில படங்களில் நடித்துள்ளார். ‘கண்டுபிடி கண்டுபிடி’ என்ற படத்தில் நாங்கள் அண்ணன், தம்பியாகவும் நடித்துள்ளோம். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை.

தற்போது சசிகுமார் சாரின் இரண்டு படங்கள், விமல் சாரின் மூன்று படங்கள், விஷ்ணு விஷால் சார் படம் என்று கை வசம் பத்து படங்கள் உள்ளது.
சினிமாவை நேர்மையாகக் காதலித்தால் அது யாரையும் கைவிடாது. ஆதலால் சினிமாவைக் காதலியுங்கள். அது உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கும். குட்லக்!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)