சிவாஜி பேரனுக்காக காத்திருக்கிறது திரையுலகம்!
மின்னுவதெல்லாம் பொன்தான்-56
பராசக்தி படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பேசிய முதல் வசனம் ‘சக்சஸ்’. இந்த வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்து அவரது பேரன் துஷயந்த் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சிவாஜி குடும்பத்தின் 4வது நடிகர் அவர். சிவாஜி, பிரபு, ராம்குமார் ஆகியோரைத் தொடர்ந்து துஷ்யந்த் வந்தார். அன்னை இல்லத்திலிருந்து வரும் நடிகர் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.
2003ம் ஆண்டு வெளிவந்தது சக்சஸ். அன்னை இல்லத்துக்கு நெருக்கமான நண்பராக இருந்த இசக்கி சுந்தரம் துஷ்யந்தின் முதல் படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று அடம்பிடித்து தயாரித்த படம். சுரேஷ் பிரசன்னா என்ற புதுமுகம் இயக்கினார். துஷ்யந்த் ஜோடியாக சோனியா அகர்வால் நடித்தார். ரோஜா, நந்தனா, ஊர்வசி, ரியாஸ்கான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமும் இருந்தது.
சக்சசில் இடம்பெற்றது யூத்புல்லான ஒரு சப்ஜெக்ட்தான். ஆனாலும் படம் நினைத்த அளவிற்கு வெற்றிய பெறவில்லை. என்றாலும் துஷ்யந்தின் இளமைத் துடிப்பான நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. மீடியாக்களின் விமர்சனங்களில் துஷ்யந்த் பாராட்டப்பட்டார். முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும் அடுத்த ஆண்டே, அதாவது 2004ம் ஆண்டு துஷ்யந்த் நடித்து வெளிவந்த படம் மச்சி.
இதுவும் யூத்புல்லான ஒரு சப்பெஜக்ட்தான். கொஞ்சம் ஆக்ஷன் கலந்த மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம். மும்பை கோடீஸ்வர வீட்டுப் பையனான துஷ்யந்த் தினமும் குடி, கூத்தாட்டம் என ஜாலியாக இருக்கிறார். பையனுக்கு பொறுப்பு வர வேண்டும் என்பதற்காக தந்தை பானுசந்தர் அவரை கோவை மருத்துவக் கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். கோவைக்கு வரும் துஷ்யந்த் இங்கேயும் தன் சேட்டையைத் தொடருகிறார்.
நண்பர்களை ஏளனம் செய்கிறார். அவர்களின் வறுமையை கிண்டல் செய்கிறார். ஒரு முறை ஒரு விபத்தில் சிக்கும் துஷ்யந்தை யாருமே காப்பாற்ற முன்வரவில்லை. அடிபட்டுக் கிடக்கும் அவரிடமிருந்த பர்ஸ் , நகையை பறித்துச் செல்கிறார்கள். நண்பர்கள் வந்து அவரைக் காப்பாற்றி தேற்றுகிறார்கள். இந்த விபத்தின் மூலம் மனமாற்றம் அடையும் துஷ்யந்த். அவர்களை நேசிக்கத் தொடங்குகிறார். அவர்களுக்கு ஏற்படும் சிக்கல் ஒன்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். இதுதான் மச்சி படத்தின் கதை.
ஒரு கமர்ஷியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் படத்தில் இருந்தன. சுபா புஞ்சா என்ற புதுமுகம் ஜோடியாக நடித்தார். கே.எஸ்.வசந்தகுமார் என்ற புதுமுகம் இயக்கினார், எஸ்.கே.கிருஷ்ணகாந்த் தயாரித்தார். துரதிர்ஷ்டவசமாக இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் நடிப்பை விட்டு விலகிய துஷ்யந்த், சிவாஜி பிலிம்சின் நிர்வாத்தை கவனிக்கத் தொடங்கினார். பின்னர் தானே ஈஷான் புரொடக்ஷன் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலமாக ‘மீன் குழம்பும் மண்பானையும்’ என்ற படத்தை தயாரித்தார். தற்போது அடுத்த படத்தின் தயாரிப்பு முயற்சியில் இருக்கிறார்.
“துஷ்யந்த் திறமையான நடிகராக வந்திருக்க வேண்டியவர். ஒரு பெரிய இயக்குனர் மூலம் பெரிய படத்தில் அவர் அறிமுகமாகி இருக்க வேண்டும். அறிமுக இயக்குனர்கள் தங்களது அனுபவ குறைவான திரைக்கதையால் துஷ்யந்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார்கள். ஒரு சரியான படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தால் இன்றைக்கு குறிப்பிடத்தக்க நடிகராக அவர் இருந்திருப்பார்” என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.
இப்போதும் துஷ்யந்திற்கு வாய்ப்பிருக்கிறது. இது ரீ எண்ட்ரியாகும் காலம்தான். அப்பா ராம்குமார்கூட ரீ எண்ட்ரியாகி விட்டார். துஷ்யந்தும் முயற்சிக்கலாம். சினிமா யாருக்கு எப்போது எந்த இடத்தை தரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
(மின்னும்)
●பைம்பொழில் மீரான்
|