கார்த்தியும் நானும் பழைய நண்பர்கள்! ‘கைதி’ நரேன் சொல்கிறார்



‘அஞ்சாதே’ நரேன், இப்போது ‘கைதி’ நரேன் ஆகியிருக்கிறார்.‘‘சினிமாவிற்கு வந்து பதினைஞ்சு வருஷமாச்சு. நான் நடிக்க வந்த புதுசுல என்னோட ஸ்டார்ட்டிங்   ரொம்ப சூப்பரா டேக் ஆஃப் ஆச்சு. ‘அஞ்சாதே’வுக்குப் பிறகு ரொம்ப பெரிய இடத்துக்கு போவேன்னு இங்க எல்லோருமே எதிர்பார்த்தாங்க.

ஆனா, அப்புறம் நடந்ததெல்லாம் தலைகீழ். இடைப்பட்ட காலத்தில் பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்கள் கூட, அவங்க என்னை சந்திக்கறப்ப ‘நீங்க தமிழ்ல ஏன் படங்களே பண்றதில்லை?’னு கேட்பாங்க. அவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுனே தெரியாது. ஒரு புன்னகையோட கடந்து போயிருக்கேன்.

இன்னொரு விஷயம், அப்ப வர்ற ரோல்கள் எல்லாமே போலீஸா பண்றீங்கனு கேட்டு வருவாங்க. சில படங்கள்ல நடிச்சிருந்தும் புரொடக் ஷன் சிக்கல்களால் ரிலீஸ் மாசக்கணக்கா, வருஷக்கணக்கா கூட தள்ளிப்போயிருக்கும். அப்பவெல்லாம் லோகேஷ் கனகராஜ் மாதிரி ஒரு நல்ல இயக்குநர் தேடி வரலை.

இப்போ விட்ட இடத்துல இருந்து பிடிச்சது மாதிரி ஒரு ஃபீல். எந்த ‘அஞ்சாதே’வுக்குப் பிறகு நான் நல்லா வருவேன்னு நினைச்சிருந்தேனோ அதே ‘அஞ்சாதே’ கேரக்டர் பிடிச்சுத்தான் இப்ப லோகேஷ் என்னை செலக்ட் பண்ணியிருக்கார். ‘கைதி’ல எனக்கு ஒரு கிராண்ட் ரீஎண்ட்ரி கிடைச்சிருக்கு. இதே படம் பத்து வருஷத்துக்கு முன்னாடி அமைஞ்சிருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்னு நினைச்சிருக்கேன்.

ஆனா, எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும். அந்த நேரம் இப்ப அமைஞ்சிருக்கு. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த கார்த்திக்கும், இயக்குநர் லோகேஷுக்கும் பெரிய தேங்க்ஸ். ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன்’’ என்று ‘கைதி’ வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நரேன்.“நீங்க கேமிராமேனாதான் சினிமாவில் அறிமுகமானீங்க இல்லையா?”

“யெஸ். சினிமாவில் ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் கேரியரை தொடங்கினேன். ராஜீவ்மேனன் சார்கிட்ட ரெண்டு வருஷம் உதவியாளரா இருந்திருக்கேன். நான் ஆக்டிங் பக்கம் காலூன்ற அவரு கொடுத்த உற்சாகம் ஒரு காரணம்.”
“கேரளாவுலே என்ன சொல்றாங்க?”

“தொடர்ந்து மலையாளத்தில் நடிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, ‘கைதி’ அங்கேயும் ஹிட்டாகி இருப்பது எல்லோருக்கும் சந்தோஷம். அங்கே படம் முடிஞ்சதும் ஜனங்க எழுந்து நின்னு கைதட்டுறாங்க. பிஜு மேனன், ஜெய்சூர்யானு அங்குள்ள பலரும் பாராட்டினாங்க. மறுபடியும் பாராட்டு மழைக்குள் நனையறேன்.”“கார்த்தியும் நீங்களும் ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?”

“ஆமாம். பத்து வருஷத்துக்கு மேல ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி பேசிப்போம். அவர் மணிரத்னம்கிட்ட அசிஸ்டென்டா இருந்தார். நானும் அசிஸ்டென்டா இருந்திருக்கேன். ஸோ, அப்படி ஒரு பாண்டிங் ஃப்ரெண்ட்ஷிப். நாங்க எதாவது ஹாலிவுட் படங்கள் பார்த்தால், அதோட டெக்னாலஜிஸ் பத்தி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்குவோம்.

‘நம்ம ஊர்ல அப்படி பண்ணமுடியுமா?’னு அவர் கேட்பார். ஃபேமிலியாகவும் பழகுவோம். ‘கைதி’யில லோகேஷ், போலீஸ் கேரக்டருக்கு நரேன்னு கார்த்திகிட்ட சொன்னதும், ‘நம்ம நரேனா.. நானே அவர்கிட்ட பேசிக்குறேன்’னு சொல்லி, என்னிடம் பேசினார். கார்த்தியோட நடிச்சது இனிமையான அனுபவம். அதைப் போல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரொம்பவும் சிம்பிளானவரா இருக்கார். எனி டைம் ஒர்க் மோட்லேயே இருக்கற மனுஷன். சினிமா passion உள்ளவர். ரொம்பவும் பிராமிஸிங் டைரக்டர் அவர்.”“அடுத்து?”

“கதைகள் வருது. கேட்டுட்டிருக்கேன். இதோ இப்போ சுசீந்திரனோட ‘சாம்பியன்’ ரிலீஸ். அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ வரப்போகுது. ‘சாம்பியன்’ படத்துலே கால்பந்து கோச்சா நடிச்சிருக்கேன். அதர்வாவோட செஞ்சிருக்க ‘ஒத்தைக்கு ஒத்த’படத்தை பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னீஷ் இயக்கியிருக்கார். இது ஒரு காலேஜ் சப்ஜெக்ட். மலையாளத்துலேயும் படம் பண்ணிட்டிருக்கேன்.  தமிழ்ல வெரைட்டியான வித்தியாசமான கேரக்டர்கள் நிறைய பண்ணணும்னு விரும்புறேன்.”

“மலையாளத்துலே நிறைய படம் பண்ணுறீங்க போலிருக்கே?”

“அங்கே படம் பண்றேன். அவ்ளோதான். அதிகமானு சொல்லிடமுடியாது. இண்டஸ்ட்ரி அங்கேயும் நல்லா இருக்கு. கடந்த பத்து வருஷமா அங்கே ஃபீல்டு நல்லா இருக்கு. நிறைய புது இயக்குநர்கள், புது ரைட்டர்கள், புதுக்களங்களோட வர்றாங்க. ரொம்ப ரொம்ப சின்ன படஜெட்ல நல்ல நல்ல படங்கள் நிறைய வந்திட்டிருக்கு. சிம்பிளான கதையை எடுத்துக்கொண்டு ட்ரீட்மென்ட்ல பிரமாதப்படுத்துறாங்க.

அந்த சூழல் இங்கே இருபது வருஷமா நிலவுது. ஆனா, அங்கே ஹிட் ஆகுற சின்ன பட்ஜெட் படங்களை இங்கே ரீமேக்கினால் அது செட் ஆகாது. ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜல்லிக்கட்டு’ இதெல்லாம் இங்கே ரீமேக் பண்ணினால் ஒர்க் அவுட் ஆகாது.  ஏன்னா ஆடியன்ஸ் வேற.   இப்ப அங்கே  நடிக்கற படம்  த்ரில்லர் கதை. அதுவும் பெயர் வாங்கிக் கொடுக்கும்.”

- மை.பாரதிராஜா