கோவா கொண்டாட்டம்!



டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத சங்கமம் என்றால் கோவாவில் உலக சினிமாவின் சங்கமம் என்று சொல்லலாம். அந்த வகையில் கோவாவில் 2019 நவம்பரில் உலகத்திரைப்பட விழா 50ஆம் ஆண்டு ‘கோல்டன் ஜூப்ளி’ விழா என்ற பெருமையுடன் நடைபெற்றது.
இந்த விழாவை மத்திய அரசும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்தின. இந்திய சினிமா ஆர்வலர்களின் திருவிழாவான இதன் சிறப்பம்சங்களை ‘வண்ணத்திரை’ வாசகர்களுக்காக இயக்குநரும், வசனகர்த்தாவுமான வி.பிரபாகர் தொகுத்து அளிக்கிறார்.

இந்த மாபெரும் உலகத்திரைப்படவிழாவிற்கு, 12,000 பிரதிநிதிகள் விண்ணப்பித்திருந்தார்கள், அவர்களில் 10,800 பிரதி நிதிகள் அடையாள அட்டையைப் பெற்றனர். 8,400 பிரதிநிதிகளைத் தொடர்ந்து 93,000 பேர் ஈ-டிக்கெட்ஸ் புக் செய்து திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற துவக்க விழாவில் லைஃப்டைம் அச்சீவ்மென்ட் விருது Isabella Huppert என்ற ரஷ்ய கலைஞருக்கும், பெருமைமிகு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி ஆஃப் IFFI விருது ரஜினிகாந்துக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த கெளவரத்தை தமிழ் திரைப்படத்துறைக்கு கிடைத்த கிரீடம் என்றே சொல்லலாம். இந்த விருதை ரஜினிக்கு அமிதாப் பச்சன் வழங்கி கௌரவித்தார்.

விழாவில் International Competition, Debut Feature Film of a Director, Oscar Retrospective, Indian Panorama என்று பல பிரிவுகளை உள்ளடக்கிய 18 பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.கோவாவின் தலைநகர் பனாஜியில் உள்ள தனியார் திரையரங்கில் உள்ள 4 ஸ்கிரீனிலும், மற்றொரு திரையரங்கில் உள்ள 3 ஸ்கிரீனிலும், கலா அகாடமி மற்றும் பிற திரையரங்குகளிலும் தினம் 50 திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

துவக்கவிழாவில் இயக்குநர் Goran Paskaljevic என்ற பிரெஞ்சு பிலிம் மேக்கரின் ‘Despite The Fog’ படம் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் கதைச் சுருக்கம் பற்றி பார்ப்போம்...ரோம் நகரில் உள்ள உணவு விடுதியின் நிர்வாகியாக பணிபுரியும் பாலோ என்ற நடுத்தர வயதுக்காரர் தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பும் வழியில் 8 வயது சிறுவன் முகம்மது குளிரில் நடுங்கியபடி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைப் பார்க்கிறார்.

அந்தச் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். முகம்மது இத்தாலியிலிருந்து வரும் வழியில் படகில் தாய், தந்தையைத் தவறவிட்ட ஆதரவற்ற அகதி என்பதை அறிந்து அவன் மீது இரக்கம் கொள்கிறார். சிறுவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாலோவின் மீதும், சிறுவனின் மீதும், அவருடைய மனைவி வலேரியாவிற்கு சந்தேகமும் வெறுப்பும் ஏற்படுகிறது. இருந்தாலும் இரவுதங்க அனுமதிக்கிறாள். பிறகு அனைவரின் கருத்துக்களையும் அவள் புறந்தள்ளிவிட்டு சிறுவனுக்கு அடைக்கலம் தருவதோடு படம் முடிவடைகிறது.

Indian Panorama Screeningஇல் துவக்க விழா திரைப்படமாக Gujarat Film Maker இயக்கிய ‘Hellaro’ படம் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் கதைச் சுருக்கம் பற்றி பார்ப்போம்...1975 ல் நடக்கும் கதை இது. மஞ்சரி என்ற இளம்பெண் திருமணம் முடிந்து குட்ஜ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்குச் செல்கிறாள். அங்கு ஆணாதிக்கத்தின் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கும் ஒரு பெண்கள் குழுவில் இணைகிறாள்.

தினசரி காலை தண்ணீர் எடுக்க குழுவுடன் செல்வது அவளின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அவர்கள் பாலைவனத்தின் நடுவே ஒருவரைச் சந்திக்கின்றனர். அதற்குப் பின் அவர்களின் வாழ்க்கையே முற்றிலும் மாறுகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்வது மீதிக் கதை.

உலகத்திரைப்பட விழாவைச்சார்ந்த மற்றொரு சிறப்பான நிகழ்வு NFDC ஏற்பாடு செய்து நடத்திய Film Bazaar 2019, Exhibition & Screening. இதில்  தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியாக பயனளித்த கலந்துரையாடல்கள், தொழில் நுட்பம் சார்ந்த புதிய யுத்திகளை அறியும் சந்திப்புகள் நடைபெற்றன.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சென்னையைச் சேர்ந்த ஃபிலிம் சேம்பர் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டார்கள். தவிர, இந்தியா முழுவதிலுமிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் குவிந்திருந்தனர்.லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அனுபமா, கிஷோர், அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட்  ஆகியோரும், பெண் தயாரிப்பாளர்கள் கலந்துரையாடலில் செளந்தர்யா ரஜினிகாந்தும் கலந்துகொண்டனர். அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், திரைப்
படங்கள், மற்றும் உலகத்திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வரும் வாரங்களில் அறியலாம்.