மாயாஜாலப் படத்தில் ஆரி!



விக்ரம், சூர்யா வரிசையில் கேரக்டருக்காக படத்துக்கு படம் உடல்மொழியை மாற்றிக்கொள்ளக்கூடியவர் ஆரி. தற்போது பெயரிடப்படாத படத்துக்காக பத்து கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.இந்தப் படத்தை அம்மன்யா மூவிஸ் தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.காளிங்கன். இவர் ‘என்றென்றும் புன்னகை’, ‘ரிச்சி’ போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

முருக சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘தீரன்’ மற்றும் விஜய் 64 படங்களுக்கு இரண்டாவது யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர். பிரசன் இசையமைக்கிறார். இவர் ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்துக்கு இசையமைத்தவர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி. மஞ்சுநாதன் கூறுகையில்...  ‘‘இந்தப் படத்தின் கதையை இயக்குநர் எஸ்.காளிங்கன் முதல் முறை சொன்னபோதே படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். காரணம், ஹாலிவுட் திரைப்படங்களிலெல்லாம் மித்தலாஜிக்கல் வகையைச் சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய  மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.

அப்படியே வெளிவந்திருந்தாலும் சரியான கமர்ஷியல் படமாகவும் தமிழில் எடுக்கவில்லை.  அதனை நிவர்த்தி செய்யும் விதமாக இந்தப் படம் இருக்கும்.இதை  தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம். இந்தப் படத்தை மித்தலாஜிக்கல் பீரியட் பிலிம் என்றும் சொல்லலாம்.

இந்தப் படத்துக்காக எங்கள் ஹீரோ ஆரி தனது உடல் எடையை பத்து கிலோ வரை குறைத்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ஆரி ஒரு மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார் என்று கூறலாம். இந்தப் படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும். கதை கேட்ட நாளிலிருந்து எங்களுக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

ஆரியை வைத்து படம் தயாரிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.நாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர் தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’  படத்தில் நடித்தவர். யோக் ஜேபி முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். இந்தப்படத்தைத் தொடர்ந்து எங்கள் நிறுவனம் சார்பாக வருடத்துக்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளோம்’’ என்றார்.

- ரா