கரிகாலன் வரலாறு!



கல்லணை கட்டிய மாமன்னன் கரிகாலனைத் தெரியும்.நடிகர் கரிகாலன்?யெஸ்! ‘சோலையம்மா’ என்ற படத்தில் உருட்டலும் மிரட்டலுமான ஆன்டி ஹீரோ கேரக்டரில் நடித்தவர். இவர் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘அரவான்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் ஆண்டுக்கு பத்து படங்கள் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்தார். அவரிடம் பேசினோம்.
“சினிமாவில் உங்கள் என்ட்ரி எப்படி நடந்தது?”

“என்னுடைய இயற்பெயர் வளவன் சற்குணம். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் உள்ள கள்ளிக்குளம் கிராமம். அப்பா, அம்மா இருவரும் தமிழ் ஆசிரியர்கள். அப்பா, அம்மா இருவரும் படிப்புடன் இயல், இசை, நாடகத்தையும் சேர்த்தே கற்றுக்கொடுத்தார்கள்.
அதனால் இளம் வயதிலேயே நடிகனாக வேண்டும் என்று முடிவு பண்ணினேன்.

குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக  பாலிடெக்னிக் முடித்தேன். பிறகு என்னுடைய லட்சியத்தை நோக்கி சென்னைக்கு பயணமானேன். முதல்வேலையாக சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில்  DFT ஜாயின் பண்ணினேன். வி.எஸ்.ராகவன் சார்தான் சில காட்சிகளைக் கொடுத்து நடிக்கச் சொல்லி என்னைத் தேர்வு செய்தார்.

அப்போது மொத்தமே பத்து சீட்தான் இருந்தது. மூன்று சீட் பெண்களுக்கு என்று ஒதுக்கிவிட்டதால் 7 சீட்டுக்கு கடுமையான போட்டி இருந்தது. என்னுடன் படித்தவர்கள் எல்லாரும் இப்போதும் சினிமாவில் இருக்கிறார்கள். ‘அழகிய தமிழ்மகன்’, ‘பைரவா’ போன்ற விஜய் படங்களை இயக்கிய இயக்குநர் பரதன் என்னுடன் படித்தவர். ‘அதர்மம்’ ரமேஷும் என்னுடன் படித்தவர்தான்.”
“உங்க காலத்தில் இன்ஸ்டிடியூட் மாணவர் என்றாலே தனி மரியாதை இருந்ததே?”

“நீங்க சொல்றது சரிதான். ஃபிலிம் இன்ஸ்டிடியூட் என்றாலே சினிமாவில் வரவேற்பு கொடுப்பார்கள். மரியாதை தருவார்கள். ஆனாலும் வாய்ப்பு என்பது சிரமமாக இருந்தது. நானும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து 150 ரூபாயில் வாடகைக்கு வீடு பிடித்து அதில் தங்கினோம்.

பிரபல காமெடி நடிகர் வையாபுரி எங்களுடன் தங்குவார். இரவு தங்குவதற்குத்தான் எங்களுக்கு அந்த ரூம் பயன்பட்டது. பகல் முழுவதும் வாய்ப்பு தேடும் படலம் நடக்கும். தினமும் 15 படக் கம்பெனிகளுக்கு படையெடுப்பேன். மழை, வெயில் என்று பார்க்காமல் வாய்ப்பு தேடுவேன். அப்போது என்னிடம் சில்வர் ப்ளஸ் வண்டி இருந்தது. பெட்ரோலுக்கு பணம் இல்லை என்றால் நடந்தே கம்பெனிகளுக்கு படையெடுப்பேன்.

என்னுடைய முயற்சிக்கு பலன் இல்லாமல் இல்லை. சொன்னா நம்பமாட்டீங்க... அந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 13 படங்களில் கமிட்டானேன். பாரதிராஜா சாரின் ‘நாடோடித் தென்றல்’ படத்தில் பாண்டியன் கேரக்டருக்கு முதலில் நான்தான் செலக்டானேன். அதில் எனக்கு முறை மாப்பிள்ளை கேரக்டர். பத்து சீன் நடித்திருப்பேன். என்னை வைத்து ‘யாரும் விளையாடும்’ பாடலும் எடுத்தார்கள். பிறகு சில மாற்றங்களால் எனக்கு பதிலாக பாண்டியன் நடித்தார். இப்போதும் ‘யாரும் விளையாடும்’ பாடலில் லாங் ஷாட்டில் நான்தான் இருப்பேன்.

‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் மன்சூரலிகான் கேரக்டரில் நான்தான் நடித்திருக்க வேண்டும். அந்தப் படத்துக்கு ஏற்கனவே மன்சூரலிகானை வைத்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சார் மேக்கப் டெஸ்ட் எடுத்திருந்த நிலையில் அவரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் யாரைப் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். விஜயகாந்த் சார், ஒளிப்பதிவாளர் உட்பட அந்தக் குழுவில் இருந்தவர்கள் நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று என் காதுபடவே பேசிக்கொண்டார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘தூது போ செல்லக்கிளியே’ என்று நான் வில்லனாக நடிக்கவேண்டிய படங்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எல்லாமே என்னைவிட்டு போய்விட்டது. அப்போது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொண்டேன்.
அப்படி எனக்குக் கிடைத்த 14வது பட வாய்ப்புதான் கஸ்தூரிராஜா சார் இயக்கிய ‘சோலையம்மா’ படம். ஒருவேளை அந்த 13 படங்களில் நடித்திருந்தால் கரிகாலன் என்ற நடிகன் தெரிந்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் ‘சோலையம்மா’ என்ற ஒரே படம் எனக்கு மங்காத வெளிச்சத்தைக் கொடுத்தது.”

“உங்க ‘சோலையம்மா’ நாட்கள் நினைவிருக்கா?”

“இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேலே ஆயிடிச்சி. இருந்தாலும் அந்த நாட்கள் அப்படியே பசுமையா இருக்கு. ‘தூது போ செல்லக்கிளியே’ பட சமயத்தில் இயக்குநர் கஸ்தூரிராஜா சாரை அதிரடியாக சந்தித்தேன். ஒரு நண்பர் அவரிடம் அறிமுகம் செய்து வைப்பதாகச் சொன்னார். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை. படப்பிடிப்புக்கு புறப்படுகிறார்கள் என்று தெரிந்ததும் அதிரடியாக கஸ்தூரிராஜா சாரை சந்தித்தேன். ‘வில்லன் கேரக்டர்தான் தரமுடியும்’ என்று சொன்னார். நான் ஓ.கே. சொன்னேன். படப்பிடிப்புக்கு கிளம்பிப்போனோம்.

அந்த சமயத்தில் எனக்கு காய்ச்சல் வந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. என் நிலைமை அறிந்து கஸ்தூரிராஜா என்னைத் தேற்றினார். அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறேன் என்று சொன்னார். அப்போது அவர் புதுமுகங்களை அறிமுகம் செய்துவைப்பதில் ஆர்வமாக இருந்தார்.
‘தூதுபோ செல்லக்கிளியே’ படத்துக்குப் பிறகு ‘ஏலேலங்கிளியே’ என்ற படத்தை ஆரம்பித்தார்.

அந்தப் படத்தை என்னை வைத்துதான் பண்ணுவேன் என்று தயாரிப்பாளரிடம் உறுதியாகச் சொன்னார். தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லாததால் எனக்காக அந்தப் பட வாய்ப்பைத் துறந்தார். சார் ஏன் என் பக்கம் நின்றார் என்றால் அந்தக் கேரக்டருக்கு உடல்மொழி அவசியம்.
சொன்னபடி ‘சோலையம்மா’  படத்தில் ஆன்டி ஹீரோ கேரக்டர் கொடுத்தார். அந்தப் படம் எனக்கு பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. இதுவரை  தமிழ், தெலுங்கு என்று 30 படங்கள் பண்ணிவிட்டேன். ‘வைரவன்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். ஆனால் ‘சோலையம்மா’ படம்தான் இப்போதும் நிற்கிறது.

அப்போது சுகன்யா நடித்த ‘சின்னக் கவுண்டர்’ பெரிய ஹிட் என்பதால் படப்பிடிப்பில் அவருடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் தயங்குவேன்.
சண்டைக்காட்சிகளில் நிஜக் கட்டைகள், நிஜ கத்தி, நிஜ சம்மட்டியை பயன்படுத்தி எடுத்தார்கள். பழக்கமில்லாத ஸ்டண்ட்மேன் சம்மட்டியை வைத்து அடிக்கும் காட்சியில் மார்பை பதம் பார்த்துவிட்டார். ஏணிப் படிகளை உடைக்கும் காட்சியையும் நிஜமாக எடுத்தார்கள். அந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் நான் சிறப்பாக நடிக்கக் காரணம் ஃபைட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார். அவர்தான் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.”
“சினிமாவில் பெரியளவில் ஷைன் ஆகவில்லையே என்று வருந்தியதுண்டா?”

“எனக்கு நியாயமாக வரக்கூடிய வாய்ப்புகள் வந்தன. அப்போது சினிமா ஸ்ட்ரைக் நடந்ததால் சிறிய தொய்வு ஏற்பட்டது. தெலுங்குப் படங்களில் சில வாய்ப்புகள் வந்தது. அந்த சமயத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக நானும் லைன் மாறினேன் என்று சொல்லலாம். சினிமாவுக்கு வந்த நோக்கத்தை மறந்துவிட்டேன். என்னுடைய வளர்ச்சிக்கு நான்தான் தடையாக இருந்தேன்.

நான் ஹீரோவாக நடித்த ‘வைரவன்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் படம் வெளியான சமயத்தில் பிசினஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ரியல் எஸ்டேட் பிசினஸில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தேன். சென்னையில் எனக்குத் தெரியாத ரியல் எஸ்டேட் பிசினஸ்மேன்கள் இல்லை என்று சொல்லலாம்.

அந்தச் சமயத்தில் வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ வாய்ப்பு கிடைத்தது. பிசினஸ் பரபரப்புகளுக்கு மத்தியில் அந்தப் படத்தில் நடித்தேன். நான் நடித்த படங்களில் பெர்ஃபாமன்ஸ் நல்லா இருந்தது என்று சொன்ன படம் அது.”

“சமீபத்தில் பத்து படங்கள் தயாரிக்கப் போவதாக சொன்னீர்களே?”

“அந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளேன். ஜனவரியில் அதற்கான அறிவிப்பு வரும். அதில் தாயாரிப்பு டிசைனர் நான்தான். தவிர, நடிகராக, பாடலாசிரியராக, கதாசிரியராக என்று எதாவது ஒரு பங்களிப்பு என்னுடையதாக இருக்கும். எல்லா படங்களும் சின்ன பட்ஜெட்டில் சமூக நோக்கத்துடன் இருக்கும். என்னுடன் நண்பர்கள் சிலர் பார்ட்னராக இருப்பார்கள்.”
“சினிமா இப்போது எப்படி இருக்கிறது?”

“இன்று சினிமா மிகவும் எளிதாகிவிட்டது. நான் நடிக்க வந்தபோது படங்கள் குறைவு. ரஜினி, கமல் பிரபு, கார்த்திக், சத்யராஜ் படங்கள்தான் அதிகம் வரும். இப்போது சினிமாவுக்கான கதவு திறந்தே இருக்கிறது. அப்போது நடிக்கும் விஷயத்திலும் சிவாஜி சார் மாதிரி கர்ஜனையுடன் நடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது. இப்போது நடிக்கிறது தெரியக்கூடாது என்கிறார்கள்.”

“பெரிய இயக்குநர்களிடம் நடிக்க சான்ஸ் கேட்கிறீர்களா?”

‘‘ஷங்கர் சார் படத்தில் நடிக்க வேண்டும். ‘ஜெண்டில்மேன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருந்தேன். என் கையைவிட்டுப் போன படங்களில் அதுவும் ஒன்று. ஷங்கர் சார் இயக்கத்தில் ஒரு படத்திலாவது போலீஸாக நடிக்க வேண்டும். மணிரத்னம் சார்  இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கிறேன். எனக்கு பிசினஸ்மேன் என்று முகம் இருந்தாலும் நடிகன் என்ற முகம் முக்கியம்.’’

- சுரேஷ்ராஜா