ஜடா



கோல் அடிக்கும் ஆவி!

கால்பந்து விளையாட்டையும் அதில் நடக்கும் அரசியலையும் மையப்படுத்திய கதை கொண்ட படம்தான் இந்த ஜடா.
நாயகன் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் அடங்கிய கால்பந்து அணி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வென்று இந்திய அணியில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி எடுக்கின்றனர்.

இந்நிலையில், திடீரென, செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத விளையாட்டில் கலந்துகொண்டாக வேண்டும் என நாயகன் கதிர் பிடிவாதம் பிடிக்கிறார். அவருடைய பிடிவாதத்துக்குக் காரணம் என்ன? அதன்பின் என்ன நடந்தது? என்பது மீதிக்கதை.

‘பிகில்’ படத்துக்கு எடுத்துக்கொண்ட கால்பந்தாட்டப் பயிற்சியை கைவசம் வைத்திருப்பாரோ என்னவோ, கால்பந்தாட்டக் காட்சிகளில் மிரட்டியுள்ளார் நாயகன் கதிர். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம்.

யோகிபாபுவுக்கு படம் முழுக்க நாயகனுடன் பயணிக்கும் வேடம். அவரும் அதை உணர்ந்து சிரிக்க வைப்பதோடு சீரியஸாக கால்பந்தும் விளையாடுகிறார்.இன்னொரு கால்பந்து வீரராக கிஷோர். துடிப்பும் ஆர்வமும் உள்ள அனைவரையும் முன்னேற்ற நினைப்பவர். அப்படி ஒருவர் இருந்தால் என்னவெல்லாம் நடக்குமோ அதெல்லாம் கிஷோருக்கும் நடக்கிறது.

நாயகியாக ரோஷினி ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார். அழகாக இருக்கும் அவருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு.வில்லனாக நடித்திருக்கும் ஓவியர் ஏ.பி.தர் நன்றாக நடித்து பயமுறுத்துகிறார். இவருடைய வருகை தமிழ் சினிமாவின் வில்லன் பஞ்சத்தை தீர்த்து வைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கோலிவுட்டுக்கு ஒரு தமிழ் வில்லன் கிடைச்சாச்சு!

கெளதம் செல்வராஜ், அருண் அலெக்ஸாண்டர், லிஜேஷ், ராஜ்குமார், அருண் பிரசாத், நிஷாந்த், சண்முகம் உள்ளிட்டோர் கொடுத்த வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு சிறப்பு. விறுவிறுப்பான படப்பதிவால் படம் பார்க்கும் ரசிகர்களை மைதானத்துக்கே அழைத்துச் செல்கிறார். இரவுக்காட்சிகளைப் படமாக்கிய விதத்துக்கு கூடுதல் மார்க் கொடுக்கலாம்.

சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் அதிக கவனத்தோடு இசையமைத்து பாராட்டு வாங்குகிறார்.விளையாட்டு கதையில் பேயைக் கலந்திருப்பது தேவையா என்ற கேள்வி படம் பார்க்கும் ரசிகனின் மனதில் உதிக்காமல் இருக்காது.

அடித்தட்டு மக்களின் கனவுகளையும் அவற்றை நனவாக்க எண்ணி அவர்கள் செலுத்தும் கடும் உழைப்பையும் வசதியானவர்கள் எவ்வளவு லகுவாகத் தட்டிப்பறிக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் குமரன்.மொத்தத்தில்... ஜடா... ஜனங்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும்!