தனுசு ராசி நேயர்களே



ராசி பலன்!

இயக்குநர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள படம் என்பதால் வழக்கத்தைவிட கூடுதல் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள படம் இது.ராசி, நட்சத்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் மூழ்கி முத்தெடுத்தவர் நாயகன் ஹரீஷ் கல்யாண்.
செவ்வாய் தோஷக்காரரான இவருக்கு இதன் காரணமாகவே திருமணம் தாமதமாகிறது. சந்திக்கும் பெண்களிடமெல்லாம் ராசி, நட்சத்திரம் கேட்பதால் பலரும் தெறித்து ஓடுகின்றனர். உடன் வேலை செய்யும் பெண் இவரை உருகி உருகிக் காதலித்தாலும் ராசிப் பொருத்தம் இல்லை என்பதால் நிராகரிக்கிறார்.

இப்படி தொடர்ந்து பல பெண்களை நிராகரித்து வரும் ஹரீஷ் ஒரு கட்டத்தில் கன்னி ராசிக்காரரான டிகாங்கனா சூர்யவன்ஷியைச் சந்திக்கிறார். இருவர் மனதிலும் காதல் பிறக்கிறது. ஆனால், செவ்வாய் கிரகத்திற்கு செல்வதை தனது லட்சியமாகக் கொண்டிருக்கும் டிகாங்கனா, ஹரீஷின் காதலை ஏற்க முடியாமல் தடுமாறுகிறார். காதலர்களை ஜாதகமும், ராசியும் ஒன்று சேர்த்ததா அல்லது பிரித்ததா என்பது மீதிக்கதை.

நாயகன் ஹரீஷ் கல்யாண், இளமைத் துள்ளலான வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். முந்தைய படங்களைவிட நடிப்பிலும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் டிகாங்கனா சூரியவன்ஷி அழகாக இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்கிறார். இன்னொரு நாயகி ரெபா மோனிகாவும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு, முனீஸ்காந்த், கும்கி அஸ்வின், டி.எஸ்.கே ஆகியோர் சிரிக்க வைக்கும் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் நன்று. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு கதையை விறுவிறுப்பாக நகர்த்த பெரிதும் உதவி யிருக்கிறது.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் என்றால் ஜாதகம், ராசி, நட்சத்திரம் என அனைத்துமே பார்த்திருப்பார்கள். காதல் கல்யாணம் என்றால் எதையும் பார்க்காமல் இரண்டு மனங்களை மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், காதலிலும் ஜோதிடம், ராசி பார்க்கும் ஒரு மூட நம்பிக்கையுள்ள இளைஞன், அதே ஜோதிட ராசியால் தனது மனதுக்கு நெருக்கமானவளை எப்படி இழக்கிறான் என்பதை இயக்குநர் சஞ்சய்பாரதி, அப்பாவின் பெயருக்கு பங்கம் வராமலும் காலத்தே பயிர் செய் என்ற பழமொழி மற்றும் டிரெண்டுக்கு ஏற்பவும் படம் எடுத்துள்ளார்.