பயணம் - மோகன்ராம்



டைட்டில்ஸ் டாக் - 141

எனக்கு சொந்த ஊர் சென்னை. ரவுண்ட் டேபிள் மூலம் நாடகம், ஸ்கிட் நடத்துவேன். அதில் நிறைய பிரபலங்கள் இருந்தார்கள். குறிப்பாக சொல்வதாக இருந்தால் தயாரிப்பாளர் ‘சத்ய ஜோதி’ தியாகராஜன், ராம்குமார் முக்கியமானவர்கள். ஒருமுறை தியாகு ‘நான் தயாரிக்கும் படத்தில் சின்ன கேரக்டர் ரோல் இருக்கு.

நடிக்கிறீயா’ என்று கேட்டார். நானும் விளையாட்டாக ‘நடிக்கிறேன்’ என்று சொன்னேன். அந்தப் படம் முரளி நடித்த ‘இதயம்’. 1991ல் அந்தப் படம் வெளிவந்தது. தொடர்ந்து ராம்குமார் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த ‘கலைஞன்’, ‘எலி மை ஃபிரெண்ட்’ ஆகிய படங்களில் நடிக்க வைத்தார்.

அப்படித்தான் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. நான் சொன்ன இந்த பிரபலங்களின் நண்பர்களான இயக்குநர்கள் பி.வாசு, சந்தானபாரதி, மனோபாலா ஆகியோரும் அவர்களுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். இவர்கள் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு நண்பர்கள் என்பது வேறு விஷயம்.

பத்து படம் முடிவதற்குள் சினிமாதான் என்னுடைய எதிர்காலம் என்று முடிவு பண்ணினேன். அதுவரை நான் நடத்தி வந்த டிராவல்ஸ், கிண்டியில் நடத்தி வந்த தொழிற்சாலை என்று என்னுடைய பிசினஸ் எல்லாவற்றையும்  மூட்டைகட்டி வைத்துவிட்டு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி தொழில்முறை நடிகனாக மாறினேன்.

என்னுடைய சினிமா பயணம் ஆச்சர்யமானது. ஏன்னா, நான் நடிகனாவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் என்னுடைய குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் தொடர்பு உண்டு. என்னுடைய அப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வக்கீல். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்பா தேவர், இயக்குநர் தர் போன்ற சினிமா பிரபலங்களுக்கு என்னுடைய அப்பாதான் லாயர்.

எம்.ஜி.ஆர். வசித்து வந்த லாயிட்ஸ் சாலை வீடு என்னுடைய தாத்தாவுடையது. எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, கண்ணதாசன்  போன்ற சினிமா ஜாம்பவான்கள் எங்கள் குடும்ப நண்பர்கள். அந்த அடிப்படையில் எனக்கு சினிமா பரிச்சயம் உண்டு. ஆனால் சினிமா ஆர்வம் இல்லை. நடிகனாக சினிமாவுக்கு வருவேன் என்றும் நினைத்ததில்லை.

எங்கள் குடும்பத்தில் நிறைய லாயர்ஸ் இருந்தாலும் எங்கள் வீட்டில் எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். அதன்படி நான் எம்.பி.ஏ. முடித்து சொந்தமாக பிசினஸ் பண்ணிவந்தேன். பிசினஸும் கைகொடுத்ததால் பிசினஸில்தான் என்னுடைய பயணம் என்று நினைத்ததுண்டு.சினிமா பயணத்தில் ஒவ்வொரு படமும், ஒவ்வொரு வேடமும் மறக்க முடியாதவை. அதை என்னுடைய கொடுப்பினை என்று சொல்லலாம். மிகப் பெரிய இயக்குநர்களின் படங்களில், தொடர்களில் நான் நடித்துள்ளேன்.

சினிமாவில் எப்படி நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேனோ அதுபோன்று சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளேன். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.என்னுடைய சின்னத்திரை பயணத்தை துவக்கிவைத்தவர் என் குருநாதர் இயக்குநர் கே.பாலசந்தர் சார். அதே காலகட்டத்தில் பாலுமகேந்திரா, மகேந்திரன், ஏ.சி.திருலோகச்சந்தர், எஸ்.பி.முத்துராமன் போன்ற பிரபல இயக்குநர்களுடன் பயணிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய சினிமா பயணத்தில் என்னை அதிகம் கவனம் ஈர்த்தவர்கள் இருவர். நடிகர்களில் சிவாஜி சார், இயக்குநர்களில் என் குருநாதர் கே.பாலசந்தர் சார். வாழ்க்கையில் உயரவேண்டும் என்றால் பெரியவர்களின் ஆசீர்வாதம் முக்கியம். அந்த ஆசீர்வாதம் என் குருநாதர் மூலம் எனக்குக் கிடைத்தது.

என்னுடைய சினிமா பயணத்தில் சிவாஜி சார் குடும்பத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதால் அன்னை இல்லத்துடன் எப்போதும் என் பயணம் இணைந்தே இருக்கும்.என்னுடைய இந்தப் பயணத்தில் சிவாஜி சார் கொடுத்த ஆலோசனையை மறக்கவே முடியாது. ‘கலைஞன்’ படத்தின் பிரத்யேகக் காட்சிக்கு சிவாஜி சார் வந்திருந்தார்.

படம் முடிந்தவுடன் சிவாஜி சார் என்னை தனியாக அழைத்து, ‘ஒரே ஒரு விஷயம் சொல்றேன். நீ நல்லா படிச்சவன். உங்கள் குடும்பத்துக்கு எப்படி வக்கீல் தொழிலோ அதுபோல எங்களுக்கு சினிமாதான் தொழில். சினிமா என்ற இந்தத் தொழிலுக்கு நீ மரியாதை கொடுத்தால் இது உனக்கு மரியாதை கொடுக்கும். உன்னை உயர்த்தும்’ என்றார். அவருடைய அந்த வார்த்தையை பெரிய பாடமாக நினைத்துதான் சினிமாவில் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.

இதுவரை 150 படங்களில் நடித்துவிட்டேன். சிவாஜி சாரின் அட்வைஸை அலட்சியப்படுத்தி யிருந்தால் குறுகிய காலத்தில் இவ்வளவு படங்களில் நடித்திருக்க முடியாது.   சின்னத்திரையில் 6000 எபிசோட் நடித்திருக்கிறேன். நூறு, இருநூறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளேன்.
என்னுடைய இந்த சினிமா பயணத்தில் நிறைவு கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். இயக்குநர் தர் சார் இயக்கிய சீரியல், பாலுமகேந்திரா சார் இயக்கிய சீரியல்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளது.

சினிமாவில் நான் கடந்து வந்த பாதையில்... நடிப்பு சாதாரண விஷயம் அல்ல என்று சொல்லமுடியும். நிறைய இன்னல்கள், கஷ்டங்கள், சவால்கள் உள்ள துறை இது. கடின உழைப்பு வேண்டும். அது சாதாரணம் கிடையாது. ‘அது என்ன பெரிய வேலை... கேமரா முன்னாடி நின்றால் போதும்’ என்று நினைக்கலாம்.

அப்படி அல்ல, அங்க அசைவுகள், கண் சிமிட்டல்கள் செய்யத் தெரிந்தால்தான் நடிகனாக பெயர் வாங்க முடியும். அப்படிப் புரிந்து வருகிறவர்கள் இங்கு நிலைத்து நிற்கலாம். புரியாமல் ஆர்வத்துடன்  மட்டும் வருகிறவர்கள் ஒரு படம் அல்லது இரண்டு படத்தோடு காணாமல் போய்விடுவார்கள்.

அந்த வகையில் நீண்ட சினிமா பயணத்துக்கு உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. ஒரு இசைக் கலைஞன் கச்சேரி பண்ணும்போது கைதட்டல்களை அள்ளுகிறார்  என்று மேடை ஏறினால் அவமானம்தான் மிஞ்சும். அதற்குமுன் அவர் பண்ணிய ரிகர்சல்கள் அதிகமாக இருக்கும். அதை மனதில் கொள்ளவேண்டும்.

யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், டைரக்‌ஷன் பண்ணலாம் என்று நினைப்பது தவறான விஷயமில்லை. ஆனால் அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்தால் பயணம் இனிமையாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து. எப்படி ஒரு பயணத்துக்கான டிக்கெட், விசா, பாஸ்போர்ட் வைத்திருக்கும்போது பயணம் பாதுகாப்பாக அமைகிறதோ அதுபோன்று சினிமாவுக்கான ஆற்றலை வளர்த்துக்கொண்டு சினிமாவுக்கு வந்தால் ஜொலிக்க முடியும்.

என்னுடைய இந்தப் பயணத்தில் லைஃப்டைம் கேரக்டர் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. ஒவ்வொரு கேரக்டருக்கும் நடிகன்தான் லைஃப் கொடுக்கணும். டைரக்டர் கையில் பேப்பராக இருக்கும் பாத்திரத்துக்கு லைஃப் கொடுப்பது நடிகனின் வேலை.

அந்த மாதிரி லைஃப் கொடுப்பதுதான் என்னுடைய ஆசை. வக்கீல், டாக்டர், பியூன் என்று எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டருக்கு லைஃப் கொடுக்கணும்.
சினிமா மட்டுமல்ல, நாம் செய்யும் எந்தத் தொழிலிலும் நேர்மை இருந்தால் அந்தத் தொழில் அவர்களுக்கு சோறுபோடும்.

பயணங்கள் முடிவதில்லை என்பதுபோல் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். என்னுடைய நடிப்பு மூலம் மக்களுக்கு சந்தோஷம் கொடுக்கணும் என்றுதான் இந்தப் பயணத்தை உற்சாகத்துடன் தொடர்கிறேன்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)