அம்மனாக நடிக்கிறார் நயன்தாரா!



ரேடியோ ஜாக்கியாக இருந்து, காமெடி நடிகராகி, பின்னர் ஹீரோவானார் ஆர்.ஜே.பாலாஜி. அடுத்து இயக்குநராகிறார். அதுவும் வாங்கின முதல் லாட்டரி சீட்டிலேயே ஒரு கோடி பரிசு விழுந்த மாதிரி நயன்தாரா ஹீரோயின். நயன்தாராவுக்காக காத்திருக்கும் ஹீரோக்கள் மூக்கின் மீது விரலை வைத்திருக்க தனது படப் பணிகளை தொடங்கி விட்டார் பாலாஜி.

“எப்படி நயன்தாராவை இம்ப்ரஸ் பண்ணினீங்க? அதைச் சொல்லுங்க முதலில். மற்ற டைரக்டருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்குமே...?”
“கடந்த அஞ்சு வருஷமாவே நயன் என்னோட குட் பிரெண்ட் லிஸ்ட்டில் இருக்காங்க. ஆப்வியஸ்லி, விக்னேஷ் சிவனும்தான். பிரெண்ட்கிட்டே கண்ணாடி வாங்கிக் கொடுன்னு கேக்கலாம், செண்ட் வாங்கிக் கொடுன்னு கேக்கலாம்.

ஒரு படம் நடிச்சுக் கொடுங்கன்னு எப்படி கேக்க முடியும்? ஆனாலும் அடுத்து படம் இயக்குறதுன்னு முடிவு பண்ணி, ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி அதுக்கு ‘மூக்குத்தி அம்மன்’னு பேரும் வச்சாச்சு. இது சம்பந்தமா ஒரு நாள் விக்னேஷ் சிவன்கிட்ட பேசிட்டிருந்தப்போ கதையோட சுருக்கத்தை அவர்கிட்ட சொன்னேன்.

அவர் அப்படியே கூட்டிட்டு போயி நயன்தாரா முன்னாடி நிறுத்தினார். ‘என்ன பாலாஜி எங்கிட்டல்லாம் கதை சொல்ல மாட்டியா?’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டே கதை கேட்டார். பாதி கதை சொல்லி முடிச்சதும் மீதி கதை சொல்ல வேண்டாம், நான் நடிக்கிறேன்னு டக்குன்னு சொல்லிட்டார்.”

“தலைப்புலே பக்திவாடை தூக்கலா இருக்கே? ‘மூக்குத்தி அம்மன்’ பக்தி படமா?”

“இந்தத் தலைப்பைப் பார்த்துட்டும் இப்படியொரு கேள்வி கேட்கலாமா சார்? நூறு சதவீதம் பக்திப் படம்தான். ராம நாராயணனுக்குப் பிறகு யாருமே சரியா பக்திப் படம் பண்ணலை. ஒரே பேய்ப் படமா வருது. பயந்துக்கிட்டு வருது. பார்த்துட்டு படுத்தா தூக்கம் வர்றதில்லை. நானே ‘தேவி’ மாதிரி பேய்ப்படங்களில் நடிச்சுட்டேன்.

அதனால்தான் பேய்க்கு பயப்படாதீங்க அம்மன் நான் இருக்கேன்னு தமிழகத்து தாய்மார்களுக்கு தைரியம் சொல்றதுக்காக இந்தப் படம். நயன்தாரா, மூக்குத்தி அம்மனா நடிக்கிறாங்க. அப்புறம் ஒரு குடும்பம், இரண்டு தங்கச்சிங்க, ஒரு அம்மான்னு ஃபேமிலியும் இருக்கு. ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ மாதிரி கம்ப்ளீட் ஃபேமிலி என்டெர்டெயினரா இந்தப் படம் இருக்கும். ஆர்.ஜே.பாலாஜின்னா யூத்துங்களுக்குதான் யோசிப்பார் என்கிற இமேஜையும் இந்தப் படம் உடைக்கும்.”

“பக்திப் படம் என்றால் நயன்தாரா விரதம் இருப்பாரே?”

“இந்தப் படம் ஒப்புக் கொண்டதுமே அவர் சொன்னது, ஷூட்டிங் ஆரம்பிக்கிற தேதி, முடியுற தேதி சொல்லுங்க, நான் விரதம் இருந்துதான் நடிப்பேன்னார். ‘ராமஜெயம்’ படத்தில் சீதையா நடிக்கிறப்போ அப்படித்தான் நடிச்சேன் என்றார். அப்புறம்தான் எனக்கே அது சரின்னு பட்டுது. யூனிட்ல இருக்கிற எல்லோருமே விரதம் இருக்கிறதா முடிவு பண்ணியிருக்கோம்.”

“அம்மன் கேரக்டருக்கென்றே சில நடிகைகள் இருக்கும்போது நயன்தாரா எதுக்கு?”

“படம் வெறும் பக்திப் படம் இல்லை. இன்றைக்கு தேவையான ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசுது. அதை சொல்வதற்கு வலுவான ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு. அதனாலதான் நயன்தாரா.”“நீங்க முன்னாடி கதை எழுதி நடிச்ச ‘எல்.கே.ஜி’ படத்தில் அரசியல்வாதியை கிண்டல் செய்தீங்க. இதில் பக்தியை கிண்டல் செய்வீங்கன்னு சொல்றாங்களே...?”

“அய்யோ... சாமி இப்படி எதையாவது கிளப்பி விட்டுறாதீங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. தினமும் சாமி கும்பிடுகிறவன். ‘எல்.கே.ஜி’ல அரசியலை கிண்டல் பண்ணினாலும் ஓட்டுக்கு காசு வாங்குற நாமளும் குற்றவாளிதான்னு ஒரு விஷயத்தை சொன்னேன்.

ஒரு கருத்தை மக்களிடம் சொல்ல பல வழிகள் இருக்கு. இந்த முறை நான் பக்தியை கையில் எடுத்திருக்கேன்.”“மூக்குத்தி அம்மன் கோயில் எங்கே இருக்கு?”“நாகர்கோவிலில் கோயில் கொண்டுள்ள அம்மன்தான் மூக்குத்தி அம்மன். படத்தின் கதைக் களமும் நாகர்கோவில் அருகில் உள்ள கிராமங்கள்தான்.”

- மீரான்