அடுத்த சாட்டை



கருத்துப் பெட்டகம்!

அரசுப் பள்ளி மற்றும் ஆசிரியர்களிடம் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய படம் ‘சாட்டை’. தற்போது வெளியாகியிருக்கும் ‘அடுத்த சாட்டை’ படத்தையும் அதே ஃபார்முலாவில் எடுத்திருக்கிறார்கள். இதில் பள்ளி, கல்லூரியாக மாறியிருக்கிறது.
அந்த தனியார் கல்லூரியில் வேலைசெய்யும் பேராசிரியர்கள் கடமைக்காக வேலைசெய்வதோடு ஜாதிவெறியோடு மாணவர்களிடையே ஜாதித் துவேஷம் செய்து மாணவர்களைப் பிரித்தாளுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஆசிரியர் என்பவர் கற்றுக் கொடுப்பவராக இல்லாமல் தினம் தினம் கற்றுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும் என்று முன்மாதிரியான பேராசிரியாக இருக்கிறார் சமுத்திரக்கனி.

நேர்மையான சமுத்திரக்கனியின் நடவடிக்கை பிடிக்காமல் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார் கல்லூரி முதல்வர் தம்பி ராமையா.
ஒரு கட்டத்தில் தம்பி ராமையா மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்தச் சமயத்தில் சமுத்திரக்கனி எப்படி நடந்துகொள்கிறார்? மாணவர்களிடையே இருக்கும் ஜாதிப் பிரிவினையை நீக்குவதற்கு சமுத்திரக்கனி எடுக்கும் முயற்சிக்கு பலன் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் கொடுப்பதுதான் இந்த ‘அடுத்த சாட்டை’.

சமுத்திரக்கனி என்றாலே கருத்துகள் இல்லாமலா? காட்சிக்குக் காட்சி கருத்துக்கு கருத்தாக கருத்து மழை பொழிகிறார். ஆனால் ஒவ்வொன்றும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை.

தன் மீதுதான் படத்தின் மொத்த சுமையும் இருக்கிறதை உணர்ந்து நடித்திருக்கும் விதம் அருமை.மாணவ பிரதமராக நடித்திருக்கும் யுவன்,  நாயகி அதுல்யா ரவி, ராம், ஜார்ஜ் மரியான் என்று ஒவ்வொருவரும் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

தம்பி ராமையாவைப் பற்றி தனியாகவே எழுதலாம். வாட் ஏ பெர்ஃபாமன்ஸ்! சக பேராசிரியர்களிடம் கொந்தளிப்பதாகட்டும், தாளாளரிடம் தள்ளாடுவதாகட்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் கூனிக்குறுகி நிற்பதாகட்டும், வாழும் சிவாஜியாக நடிப்பில் மிரட்டுகிறார்.பிரதமர் எங்கு போயிருக்கிறார் என்ற காட்சியில் மியூட் கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் புரிந்துகொண்டு அப்ளாஸ் கொடுக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஓகே. ஒளிப்பதிவாளரும் தன் பங்கை சிறப்பாகப் செய்துள்ளார். ராசமதியின் ஒளிப்பதிவு நன்று.
மாணவர்களுக்கு புத்தகப் படிப்பு மட்டும் போதாது, செயல்முறை படிப்பும் தேவை என்பதை  வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் அன்பழகன் இந்த தரமான படைப்பு மூலம் மீண்டும் தன்னை தரமான இயக்குநராக உறுதிப்படுத்தியிருக்கிறார்.