இந்திய சினிமாவுக்கு இது புது பேய்!



‘முகவரி’ துரை இயக்கியுள்ள படம் ‘இருட்டு’. இதில் நாயகனாக சுந்தர்.சி. நடித்துள்ளார். புதுமுகம் சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார்.  முக்கிய வேடங்களில் வி.டி.வி.கணேஷ், விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு நடித்துள்ளனர். சுந்தர்.சி. யிடம் படத்தைப் பற்றிக் கேட்டோம்.
‘‘ரொம்ப நாள் கழித்து நாயகனாக நடித்து வெளிவரவுள்ள படம் இது.

இந்தப் படம் உருவாகக் காரணம் வி.டி.வி. கணேஷ். அவர் ஒரு படம் செய்யலாம் எனச் சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் எனச் சொன்னேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும்.

முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு படம் செய்யலாம் எனச் சொன்னபோது இயக்குநராக யாரைப் போடலாம் எனப் பேசினோம். இயக்குநர் துரை சாரைச் சொன்னபோது முதலில் பயந்தேன். அவர் படங்கள் பார்த்து... அவர் வயலன்டாக இருப்பார் என நினைத்தேன்.

ஆனால் அவர் ஒரு அப்பாவி. ‘பேய்ப்படம் பண்ணமாட்டேன்’ என்றார். அவரை தயார்படுத்தி நிறைய பேய்ப்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்பந்தப்பட்ட விஷயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை.

இருட்டு. இந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டுதான். வெளிச்சம் வந்துவிட்டுப் போகிறது. அவ்வளவுதான். எல்லோரும் தங்கள் படத்தை வித்தியாசமான படமாகச் சொல்வார்கள்.

ஆனால் நான் இந்தப் படத்தில்  அதை உண்மையாகச் சொல்கிறேன்.  ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பதுதான் கதை. இதில் நான் துப்பறியும் இன்ஸ்பெக்டராக வர்றேன்.

இயக்குநர் துரை முதல் நாளிலேயே என்னை பத்து டேக் வரை நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தைப் பார்த்து பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும்  எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார். ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக்கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய்ப்படமாக இருக்கும்’’ என்றார்.

- எஸ்