கிளாமர் ஒன்றும் குற்றச்செயல் அல்ல!காவ்யா அறச்சீற்றம்



“அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சரண் இயக்கத்தில் அறிமுகமானது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்” என்று வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மீது டன் கணக்கில் ஐஸ் வைத்துப் பேசுகிறார் காவ்யா தப்பார்.  இவர் சமீபத்தில் வெளிவந்த ‘மார்க்கெட் ராஜா’ படத்தில் நாயகியாக நடித்தவர். ‘எப்படி இருக்கீங்க’, ‘சாப்பிட்டீங்களா’ என்று ஒருசில வார்த்தைகள் மூலம் தன் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்தியவர் அதற்குப் பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவரிடம் பேசியதிலிருந்து...

“பயோடேட்டா ப்ளீஸ்?”

“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பையில். சின்ன வயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவு இருந்தது.  நான் நடிகையானதில் என்னைவிட அப்பாவுக்குத்தான் அதிக பங்கு உண்டு. ஏன்னா, அப்பாவுக்கு நடிகராகவேண்டும் என்பது இளவயது கனவாக இருந்ததாம். அவரால் முடியாத விஷயம் என்னால் நிறைவேறப்போகிறது என்று தெரிந்ததும் என்னுடைய எல்லாக் கனவுகளுக்கும் லட்சியத்துக்கும் உற்சாகம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அந்தவகையில் அப்பாவால்தான் என் கனவு நிறைவேறியது என்று சொல்வேன். எல்லாவற்றையும் தாண்டி நடிப்பு எனக்கு பிடிக்கும்.

கல்லூரி முடித்ததும் சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். வாய்ப்பு தேடுவதற்கு முன் ஒரு நடிகையாக என்னை தயார்படுத்தும்விதமாக என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள முடிவு பண்ணினேன். ஏராளமான நாடகங்கள் நடித்தேன். சினிமா தொடர்பான ஒர்க்‌ஷாப் மும்பையில் எங்கு நடந்தாலும் முதல் ஆளாகக் கலந்துகொள்வேன். என்னுடைய அந்த முயற்சியும் உழைப்பும் வீணாகவில்லை. ஏன்னா, தேர்ந்த நடிப்பை அதன் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது.

என்னைப் பொறுத்தவரை நடிக்க விரும்புகிறவர்கள் அனைவரும் நடிக்க கற்றுக்கொண்டு, பிறகு நடிக்க வரவேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஏன்னா, யதார்த்தமாக நடிப்பது என்பது வேறு விஷயம். சினிமா என்பது இல்லாத ஒரு விஷயத்துக்கு வடிவம் கொடுக்கும் ஒரு மீடியம். அந்த வகையில் தொழில்முறை நடிகர், நடிகைகளுக்கு நடிப்புப் பயிற்சி அவசியமாகப்படுகிறது. வாய்ப்பு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதற்கு நடிப்புப் பயிற்சி முக்கியம்.”

“முதன் முதலாக கேமரா முன் நின்ற அனுபவம்?”

“என் தாய்மொழியான இந்தியில் என்னுடைய பயணம் ஆரம்பித்ததால் பயமில்லாமல் நடிக்க முடிந்தது. ஆனால் சினிமாவில் அல்ல, விளம்பரப் படங்களில். குறுகிய காலத்தில் ஏராளமான நேஷனல் விளம்பரங்களில் நடித்தேன். விளம்பரப் படங்கள் என்னுடைய சினிமா பயணத்தை எளிதாக்கியது. என்னுடைய விளம்பரங்களைப் பார்த்துவிட்டுதான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. சினிமாவைப் பொறுத்தவரை தெலுங்கில் என்னுடைய பயணம் ஆரம்பித்தது.”

“தமிழில் ‘மார்க்கெட் ராஜா’ பட அனுபவம்?”

“எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தியளவில் தமிழ் சினிமா முக்கியமான இடத்தில் இருக்கிறது. நார்த்தோ, சவுத்தோ, எல்லோருக்குள்ளும் கோலிவுட் மீது ஒரு கண் இருக்கத்தான் செய்யும். தமிழ் அறிமுகம் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.இயக்குநர் சரண், ஒளிப்பதிவாளர் குகன், ஆரவ், நாசர், ராதிகா என்று வலிமையான டீம் அமைந்தது கூடுதல் சிறப்பு. என்னுடைய அறிமுகம் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தின் மூலம் நடக்கும் என்று நினைக்கவில்லை. தமிழில் என்னுடைய பெஸ்ட் அறிமுகம் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்.

இயக்குநர் சரண் சார் வேலை வாங்கும்விதம் அருமையாக இருக்கும். இயல்பாகவே அவருடைய முகத்தில் டென்ஷன் ரேகையைப் பார்க்க முடியாது. இயக்குநர் என்பவருக்கு படைப்பு குறித்தான விஷன் இருக்க வேண்டும். என்னைப் போன்ற நடிகை, நடிகர்களுக்கு அவர்கள் கேரக்டர் பற்றிய புரிதல் மட்டுமே இருக்கும். ஆனால் இயக்குநர் என்பவர் அப்படியல்ல.

ஒரு படைப்பு எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும்,  அதற்கு நடிகர், நடிகைகளின் ஒத்துழைப்பு எவ்வளவு அவசியம் என்பதை தெரிந்து வைத்திருப்பார். அப்படி, படைப்பைக் குறித்தான க்ளியர் மைண்ட் சரண் சாரிடம் இருக்கும். ஆரம்பத்தில் தமிழ் மொழியை எப்படி உச்சரிக்கப் போகிறேன் என்ற அச்சம் இருந்தது. சரண் சார் கொடுத்த உற்சாகத்தில் பயமில்லாமல் நடிக்க முடிந்தது. இந்தப் படத்தின் மூலம் ப்ராம்ப்டிங் முறையில் சிறப்பாக நடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன்.”

“தமிழில் வேறென்ன படங்கள் பண்ணுகிறீர்கள்?”

“நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஸ்லோ அண்ட் ஸ்டெடி என்னுடைய பாலிஸி என்பதால் பொறுமையாக படங்களை கமிட் பண்ணுகிறேன். உடனடியாக நான் ஒப்புக்கொண்ட படம் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம். இந்தப் படத்தை தனஞ்செயன் சார் தயாரிக்கிறார்.”

“தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர்?”

“இந்த விஷயத்தில் நானும் என்னுடைய அம்மாவும் ஒரே ரசனை உள்ளவர்கள். அம்மாவுக்கு ‘ஏக் துஜே கேலியே’ கமலைப்பிடிக்கும். எனக்கு ‘விஸ்வரூபம்’ கமலைப் பிடிக்கும். தவிர ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் நடிப்பு பிடிக்கும்.”

“காவ்யாவை அதிகம் கவர்ந்த நடிகை யார்?”

“தமன்னா. தமிழ், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார். இன்றளவும் தனக்கான மார்க்கெட்டை தக்கவைத்துள்ளார். ஆண்டுகள் கடந்தாலும் அழகில் அள்ளுகிறார். அப்புறம் உங்க ஊர் ப்யூட்டி சமந்தாவையும் பிடிக்கும். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் பின்னியெடுக்கிறார். ‘ரங்கஸ்தலம்’ பார்த்தபிறகு சமந்தாவின் ரசிகையாக மாறினேன்.”

“கிளாமர் ரோல் பண்ணுவீங்களா?”

“கிளாமர் பண்ணுவது குற்றச் செயல் அல்ல. ஆனால் அதை யார் பண்ணுகிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அடுத்ததாக, கதையைப் பொறுத்து கிளாமர் வித்தியாசப்படுகிறது. கதைக்கு உண்மையாகவே தேவைப்படும் பட்சத்தில் கிளாமர் பண்ணுவதில் தப்பில்லை. அது கதையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக இருக்கவேண்டும். நடிக்கிற எனக்கும் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கும் நெருடல் இருக்கக்
கூடாது.”

“தமிழ்ப் படங்களில் என்ன வித்தியாசத்தை கண்டீர்கள்?”

“ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம் கிடைத்துள்ளது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கேமராதான் இருக்கிறது. அந்த வகையில் நடிப்பு எங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய சினிமாவில் சமூக மாற்றத்துக்கான கதைகள், பெண்களை மையப்படுத்தும் கதைகள் வருகிறது. இது மற்ற மொழிகளில் இல்லாத விஷயம்.”

“உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?”

“பெயிண்டிங், டான்ஸ் பிடிக்கும். நான் ஒரு பாசமலர். குடும்பத்துடன் அட்டாச்மென்ட் அதிகம் என்பதால் ஒரு நாள் கேப் கிடைத்தாலும் சிட்டாக மும்பைக்கு பறந்துவிடுவேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்னை வீட்டில் பார்க்கலாம். ஷாப்பிங், டிராவல் போன்ற இத்தியாதிகளில் எனக்கு ஆர்வம் குறைவு. ஆன்மிகத்தில் ஆர்வம் என்பதால் பூஜை, புனஸ்காரம், தியானம் என்று அதிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன்.”

- எஸ்ஸார்