அமெரிக்காவை சுத்திக் காட்டப் போறோம்!



கோலிவுட் இயக்குநர்கள் அமைந்தகரையில் படம் எடுக்கவே அல்லோலகல்லோலப் படும் வேளையில் மொத்தப் படத்தையும் அமெரிக்காவில் எடுத்துவிட்டு ரிலீஸுக்கும் ரெடியாகியுள்ளார் அறிமுக இயக்குநர் சாரதி. படத்தின் பெயர் ‘காவியன்’. ரிலீஸ் பரபரப்பில் இருந்த இயக்குநர் சாரதியிடம் பேசினோம்.

“காவியம் படைக்கும் காதல் கதையா? டைட்டிலே ‘காவியன்’னு கவித்துவமா இருக்கே?”

“அப்படியில்லை. ‘காவியன்’ என்ற டைட்டில் கவித்துவமாக இருந்தாலும் இதில் அழுத்தமான ஒரு கதையை கையில் எடுத்துள்ளேன். உலகிலே அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத்தான். அந்த அமெரிக்கத் துப்பாக்கிச் சூட்டில் அதிகம் பலியாவது இந்தியர்கள்தான். இப்படி ஒரு அதிர்ச்சிகலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ள படம். லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் கதை நடக்கிறது. சூதாட்டத்துக்கு புகழ்பெற்ற அந்த நகரத்தில் சில குற்றச் செயல்கள் நடக்கிறது. அந்தப் பிரச்சனைகளை போலீஸ் எப்படி கையாள்கிறது,  குற்றவாளிகளை அயல்நாட்டு போலீஸார் எப்படி நெருங்குகிறார்கள் என்பதையும், அந்த டெக்னிக்கை எப்படி இந்தியாவில் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவும் ஹீரோ அமெரிக்கா செல்கிறார்.

அந்தப் பயிற்சியில் ஹீரோ டீமும் கலந்து கொள்கிறது. இந்திய- அமெரிக்க கூட்டு முயற்சியில் குற்றச் செயல்களை எவ்விதம் தடுக்கலாம் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியுள்ளோம். ஹாலிவுட் மேக்கிங் போல் இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் நடிகர்கள், டெக்னீஷியன்களையும் யூஸ் பண்ணியிருக்கிறோம்.”

“நடிகர்கள்?”

“மெயின் லீட் கேரக்டரில் ஷாம்,  நாத், ‘மனம் கொத்தி பறவை’ ஆத்மியா, தேவி குமார் நடித்துள்ளார்கள். ஷாம் இதில் அகிலன் விஸ்வநாதன் என்ற போலீஸ் அதிகாரியாக

வர்றார். ஏற்கனவே அவர்  ‘புறம்போக்கு’ படத்தில் போலீஸாக நடித்திருந்தாலும் படத்தின் ஒரு பகுதியில்தான் போலீஸாக வருவார். ஹீரோவாக இதுதான் அவர் போலீஸாக பண்ணியிருக்கும் படம்.இந்தக் கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் பண்ணியிருக்கிறார் ஷாம். இந்தக் கதைக்கு டெடிகேஷனுடன் நடிக்கக் கூடிய ஹீரோ தேவைப்பட்டார். அந்தவகையில் எங்கள் தேவையை ஷாம் நூறுசதவீதம் பூர்த்தி செய்து கொடுத்தார்.

இந்தப் படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் ஹாலிவுட்டைச் சேர்ந்தவர்கள். மெயின் வில்லன் WWF வீரர். அவருடன் ஷாம் மோதும் காட்சிகள் இருப்பதால் அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து, டயட் ஃபாலோ பண்ணி, உருவ அமைப்பில் தன்னை மாற்றிக்கொண்டார். அந்த கெட்டப்பிலிருந்து அவரை ரிலீஸ் பண்ணவேண்டும் என்பதற்காக அமெரிக்கா சென்றதும் க்ளைமாக்ஸ் காட்சியைத்தான் முதலில் எடுத்தோம்.

இந்திய ரோடுகளில் சேஸிங் ஷாட் எடுப்பது சவாலாக இருக்கும். அதைவிட பல மடங்கு பரபரப்பான லாஸ்வேகாஸ் சாலைகளில் சேஸிங் எடுப்பது மிகவும் ரிஸ்க்காகான விஷயம். அங்கு எடுத்த சண்டைக்காட்சிகளில் ஷாம் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். ரிஸ்க் எடுத்து நடித்தாரா, இல்லையா என்பதைவிட ரிஸ்க் இல்லாமல் அந்தக் காட்சிகளை படமாக்கமுடியாது. ஃபைட் மாஸ்டர் ‘ஸ்டண்ட்’  சிவா மிகச் சிறப்பாக கம்போஸ் பண்ணிக் கொடுத்தார்.

வில்லனுடன் மோதும் காட்சியில் உடல் ரீதியாக ஷாம் நம்பகத்தன்மையை நிரூபிக்க மிகவும் போராடினார். சொல்லப்போனால்  அந்தக் காட்சியில் நடிக்கும்போது ஒருவித மிரட்சியுடன்தான் நடித்தார். ஷாம் சாருக்கு இந்தப் படம் 100 சதவீதம் திருப்தியைக் கொடுத்த படமாக இருந்திருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு ஷாம் மீண்டும் லைம்லைட் நடிகர்கள் வரிசையில் இடம்பிடிப்பார்.”

“வில்லன்?”

“புகழ்பெற்ற WWF வீரர் ஜஸ்டின் விகாஸ்  வில்லனாகப் பண்ணியிருக்கிறார். அவருடைய உடல் எடை 150 கிலோ இருக்கும். WWF விளையாட்டுகளில் முன்னணி இடத்தில் இருக்கிறார். அந்த வீரர்கள் சாப்பிடும் புரோட்டீன் ஃபுட் உணவுகளுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு விஷயத்தில் அவரை பிரத்யேகமாக கவனித்துக் கொள்வதற்காக மூன்று பேர் கொண்ட டீம் வரும்.  ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் எங்கள் படத்தில்தான் முதன்முறையாக நடித்துள்ளார்.”

“ஆத்மியா?”

“அவருடைய முதல் படமான ‘மனம் கொத்தி பறவை’ படத்திலேயே மனம் கொத்திச் சென்றவர். சமீபத்தில் வெளிவந்த ‘ஜோசப்’ என்ற மலையாளப் படத்திலும் மிரட்டியிருந்தார். அந்தப் படத்தில் பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் இருந்திருக்கும். அதுபோன்று இதில் பெர்ஃபா மன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். படத்தில் காவியம் படைக்குமளவுக்கு காதல் இல்லை என்றாலும் சில இடங்களில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும்.”

“அமெரிக்க படப்பிடிப்பு அனுபவம்?”

“மொத்தம் 48 நாட்கள் அமெரிக்காவில் எடுத்தோம். படத்தின் 90 சதவீதத்தில் அமெரிக்க போர்ஷன்ஸ் இடம்பிடித்திருக்கும். இந்தப் படம் யுனீக் ஸ்டைலில் இருக்கணும் என்று விரும்பினேன். அதேபோல் தயாரிப்பு நிறுவனத்துக்கு லேண்ட்மார்க் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் எடுத்தோம். சாப்பிடும் விஷயத்தில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ‘இந்தியன் மசாலா’ என்ற ஓட்டலிடம் நளபாக பொறுப்பை தயாரிப்பு தரப்பு ஒப்படைத்துவிட்டதால் அவர்கள் எங்களுக்கு டைமுக்கு சாப்பாடு கொடுத்து உபசரித்தார்கள்.

லாஸ்வேகாஸ் ஊர் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் அது ஒரு விநோதமான ஊர். பகலில் ஆள் நடமாட்டம் இருக்காது. இரவுதான் அங்கு சூதாட்டம் சூடு பிடிக்கும் சூடான நேரம். மதுரைக்கு எப்படி தூங்கா நகரம் என்று பெயர் இருக்கிறதோ அதுபோல் அமெரிக்காவின் தூங்கா நகரம் லாஸ்வேகாஸ். அந்த ஊரின் மக்கள் தொகை மிகவும் குறைவு. டூரிஸ்ட்டுகள்தான் அதிகம். காரணம், உலகப் பணக்காரர்கள் ஒருமுறையாவது அந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே லட்சக்கணக்கில் படையெடுக்கிறார்கள்.

நம்மூர் என்றால் பாட்டு சத்தம் கேட்கும். அங்கு துப்பாக்கிச் சூடு சத்தம்தான் அடிக்கடி கேட்கும். எல்லார் கையிலும் துப்பாக்கி இருக்கும். அங்கிருக்கும் மக்கள் பிரைவஸியை அதிகம் விரும்புவார்கள். இந்தியர்களை வெறுப்புணர்வுடன்தான் பார்க்கிறார்கள். படப்பிடிப்புக்காக வித்தியாசமான லொகேஷனைத் தேடிச் சென்றபோது ஒரு சம்பவம் நடந்தது. நெல்சன் லேண்டி என்று ஒரு இடம் இருக்கிறது. அது  தடைசெய்யப்பட்ட பகுதி. காரணம், அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக அங்கிருக்கிறவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அந்த இடத்தை ‘கோஸ்ட் டவுன்’ என்றுகூட அழைக்கிறார்கள். எங்கள் தயாரிப்பு நிர்வாகி ஆர்வ மிகுதியால் அந்தப் பகுதிக்குள் லொகேஷன் பார்ப்பதற்காக நுழைய முயன்றபோது திடீர் என்று ஒருவர் துப்பாக்கியை நீட்டியிருக்கிறார். உயிர் தப்பித்தால் போதும் என்று அவர் ரூமுக்கு ஓடி வந்துள்ளார். மொத்தத்தில் லாஸ்வேகாஸ் பயணத்தை திகில் அனுபவம் என்று சொல்லலாம்.”

“டெக்னிக்கல் டீம்?”

“ஷாம் மோகன் மியூசிக் பண்ணியிருக்கிறார். இரண்டு பாடல்கள். மோகன்ராஜ், பிரகா எழுதியிருக்கிறார்கள்.  ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். இவர் பிரபல கேமராமேன் ஓம்பிரகாஷின் மாணவர். ராஜேஷ் பண்ணிய குறும்படங்களைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தில் கமிட் பண்ணினேன். அருண் தாமஸ்  எடிட்டிங் பண்ணியிருக்கிறார். இவர் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எடிட்டிங் பண்ணிய மகேஷின் சீடர்.

‘2M சினிமாஸ்’ சபரீஷ் தயாரித்துள்ளார். முதல் பட தயாரிப்பாளர்கள் லால்குடி தாண்டமாட்டார்கள். ஆனால் என்னுடைய தயாரிப்பாளர் லாஸ்வேகாஸ் வரை வந்தார். அதற்குக் காரணம் கதை. அவர் நினைத்திருந்தால் சிங்கப்பூர், மலேஷியாவில் எடுத்துவிட்டு அமெரிக்கா என்று ஏமாற்றி இருக்கமுடியும். கதை மீது அவருக்கு இருந்த நம்பிக்கையால்தான் அமெரிக்காவிலேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு இதுதான் முதல் படம். ஆனால் என்னுடைய தயாரிப்பாளர் தமிழ், மலையாளப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக, நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். அந்த அனுபவம்தான் இவ்வளவு பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் எடுக்க நம்பிக்கையைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரம்மாண்டம் தெரியும். முதலாவதாக அமெரிக்காவுக்கு மொத்த யூனிட்டையும் அழைத்துச் சென்றது பிரம்மாண்டம். அங்கேயே படப்பிடிப்பு நடத்தியது அடுத்த பிரம்மாண்டம். ஹாலிவுட் நடிகர்களை நடிக்கவைத்தது பிரம்மாண்டம். அங்கிருக்கும் லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியது இன்னொரு பிரம்மாண்டம்.

அந்தவகையில் டாலர் தேசத்தில் படமாக்கியதை மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். படத்தில் பிரம்மாண்டம் தெரிந்தாலும் எல்லாமே கதையின் தேவைக்காக மட்டுமே இருக்கும்.”

“நீங்க யாரிடம் சினிமாவை கற்றுக்கொண்டீர்கள்?”

“எனக்கு சொந்த ஊர் நாகர்கோயில். படிச்சது விஸ்காம். சினிமா ஆர்வத்தால் அப்படியே சினிமாவுக்கு வந்து விட்டேன். இயக்குநர் ஏ.எல்.விஜய் சாரிடம் ‘மதராஸப்பட்டினம்’ மற்றும்  ஏராளமான  விளம்பரப் படங்களில் வேலை செய்துள்ளேன். என்னுடைய முதல் படத்தை உலகத் தரத்தில் எடுத்திருந்தாலும் ரசிகர்கள் கொடுக்கவுள்ள ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா